Friday 9 January 2015

கரமசோவ் சகோதரர்கள்(2 பாகங்கள்)

கரமசோவ் சகோதரர்கள்(2 பாகங்கள்)

தமிழில் : கவிஞர் புவியரசு

கரமசோவைப் பின் தொடரும் போது

தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் தமிழில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழியாக்கத்தில் வெளியாகி ஒரு ஆண்டிற்கும் மேலாகி விட்டது , அந்த நூலின் வெளியீட்டு விழாவில் நான் தஸ்தாயெவ்ஸ்கி குறித்துச் சிறப்புரை ஆற்றினேன், புவியரசு அவர்களின் மொழியாக்கம் குறித்து ஆழ்ந்து அறிந்து கொள்வதற்காக மூலத்துடன் ஒப்பிட்டு வாசிக்கும் ஒரு வாசிப்பினை கடந்த இரண்டு மாதங்களின் முன்பாக மேற்கொண்டிருந்தேன்,

ஒரு மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு சிரத்தையுடன், அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதற்குப் புவியரசுவின் இந்த மொழியாக்கம் சிறந்த எடுத்துக்காட்டு, அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்

ஆறு வேறுபட்ட ஆங்கில மொழியாக்கப்பிரதிகளை ஒப்பிட்டு புவியரசு இதனைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இதில் இவரது முக்கியக் கண்டுபிடிப்பாக நான் கருதுவது நாவலை தஸ்தாயெவ்ஸ்கி அன்றைய பேச்சுவழக்கில் எழுதியிருக்கிறார், அது ஆங்கில மொழியாக்கங்களில் பின்பற்றபடவில்லை என்பதே,

அத்துடன் இந்த நாவலில் வரும் கதை சொல்லியின் குரல் தஸ்தாயெவ்ஸ்கியுடையதில்லை, அது ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க் என்ற உள்ளுர்காரர் என்று அடையாளம் கண்டது மிக முக்கியமானதாகும், இந்தக் கண்டுபிடித்தல் காரணமாகத் தனது புனைவெழுத்தை தஸ்தாயெவ்ஸ்கி எவ்வளவு கவனமாகக் கட்டமைப்புச் செய்திருக்கிறார் என்பதைப் புவியரசு ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது

தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துகளை நேரடியாக ரஷ்யமொழியில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்துள்ள கிருஷ்ணைய்யா, தர்மராஜன் போன்ற முன்னோடிகளின் பணி மிகுந்த பாராட்டிற்குரியது, அந்த வரிசையில் தமிழுக்குக் கிடைத்திருக்கும் அரிய மொழிபெயர்ப்பு இது,

கரமசோவ் நாவல் வெறும் கதையை மட்டும் சொல்வதில்லை, அது மதம் மற்றும் சமூக இயக்கம் குறித்த ஆழமான விவாதங்களை , அன்றைய ரஷ்ய சமூகத்தின் விஞ்ஞான மனோபாவத்தை, அதிகாரவர்க்க நெருக்கடிகளை, மானுட அன்பின் வலிமையை வெளிப்படுத்தக்கூடியது, ஆகவே கரமசோவை வாசிப்பது என்பது ரஷ்ய சமூகத்தின ஆன்மாவை அறிந்து கொள்வதைப் போன்றது,

கரமசோவ் சகோதரர்கள் நாவல் அல்யோஷாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதற்காகவே எழுதப்படுவதாக முகப்பில் காணப்படுகிறது,

அல்யோஷா, மகத்தானவனில்லை, ஆனால் முக்கியமானவன், புறச்சூழலின் பாதிப்பினால் தனது சுயஅடையாளம் இழந்து போகாமல், வித்தியாசமான நடத்தைகளுடன் உள்ளவன் அவன் வாழ்க்கையை இரண்டு பகுதியாகப் பிரித்து அதன் முதற்பகுதியை இந்த நூலில் எழுதியிருப்பதாகவும், இவனைப்பற்றி இன்னொரு நாவலை எழுத திட்டமிட்டிருப்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார், ஆனால் அந்த நாவல் எழுதப்படவேயில்லை,

Above all, don’t lie to yourself. The man who lies to himself and listens to his own lie comes to a point that he cannot distinguish the truth within him, or around him, and so loses all respect for himself and for others. And having no respect he ceases to love. என்ற எண்ணத்தின் புறவடிவம் தான் தகப்பன் கரமசோவ்,

அவரை நாவலின் மையக் கதாபாத்திரம் என்று கதை சொல்லி தயக்கத்துடன் தான் அறிமுகம் செய்கிறான், காரணம் தந்தையிடம் மகத்துவமான பணபுகள் எதுவுமில்லை, அவரது கதையைச் சொல்ல தேர்வு செய்யும் போதே தஸ்தாயெவ்ஸ்கி, சுயநலத்தில் ஊறிப்போன ஒரு இழிநிலை மனிதனின் இருப்பு எப்படி மற்றவர்களைப் பாதிக்கிறது, மனிதர்கள் இயல்பிலே நல்லவர்களில்லை, அவர்கள் நல்லவர்களாக உருமாற வேண்டியிருக்கிறது என்பதையே அடையாளம் காட்ட விரும்புகிறார்

அதே நேரம் கரமசோவ் என்ற அந்தத் தகப்பன் முழுமையாகத் தீமையின் உருவமல்ல, கறுப்பிற்கும் வெள்ளைக்கும் இடைப்பட்டவன், அவன் தீமைகளை விரும்பி செய்கிறான், அதற்குத் தன்னை அடிமையாக்கி கொள்கிறான், பல நேரங்களில் அறிந்தே தீவினைகளில் ஈடுபடுகிறான், அவன் ஒரு தீமை விரும்பி.

கரமசோவ் ஒரு தந்திரசாலி, தேர்ந்த வணிகன், குறுக்குபுத்தி கொண்டவன், அவன் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான், முதுமையில் கூடத் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் தானே ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறான், அதே நேரம் தனது தேவைகளுக்காக எவரையும் உறிஞ்சி வாழ்கிறான், தன்னை மறைந்துக் கொள்ள சமூகம் இப்படி தன்னை நடந்து கொள்ள வைப்பதாக புலம்புகிறான், உண்மையில் ஒரு சாக்கடை புழுவைப் போல அவன் தனது சகல கீழ்மைகளையும் தானே தேடிக கொள்கிறான்,

மனிதர்கள் இயல்பிலே குற்றத்தின் மீது, விலக்கபட்ட விஷயங்களின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள், அவர்களைத் தீமையில் இருந்து தடுத்து நிறுத்தியிருப்பது கடவுள் நம்பிக்கையே , கடவுள் என ஒருவர் இந்த உலகில் இல்லாமல் போயிருந்தால் சகல குற்றங்களும் அனுமதிக்கபட்டுவிடும் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் மேற்கோளை இங்கே நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது,

கரமசோவ் கடவுளுக்குப் பயப்படாதவன், கடவுளைக் கேலி செய்கின்றவன், கடவுள் தேவைப்படாதவன், அதே நேரம் அவனுக்கு மதம் தேவைப்படுகிறது, அதை ஒரு நிறுவனமாக மட்டுமே அவன் கருதுகிறான், அதற்கு நன்கொடைகள் தருகிறான், மத ஈடுபாடும் கூட அவனுக்கு ஒரு கேளிக்கையான நிகழ்வே,

அதனால் தான் அவனால் ஜோஷிமா போன்ற புனிதருடன் பேசும் போதுகூட அத்தனை போலித்தனமாகவும், பொய்கதைகளுடன், மிகை நடிப்புடன் செயல்பட முடிகிறது,

தனது செய்கைகள் மற்றவர்களைத் துன்புறுத்துகின்றன என்பதைத் தகப்பன் கரமசோவ் ந்ன்றாக அறிந்து வைத்திருக்கிறான், அவன் ஒரு நிலப்பிரபு என அடையாளம் சூட்டப்படும் போதும் கூட அவன் பண்ணை வீட்டில் வசித்தவனில்லை, அவன் இறந்த போது ஒரு லட்சம் ரூபிள்கள் பணமாகக் கண்டுபிடிக்கபடுகிறது, அவனைச் சுயநலமிக்கத் தந்திரசாலி என்றே கதை சொல்லி வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்,

தகப்பன் கரமசோவ் இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறான், முதன்முறை அடியெல்டாவை கௌரவமான ஆள் போல நடித்து அவளது சொத்திற்காகத் திருமணம் செய்து கொள்கிறான், கொஞ்சம் கொஞ்சமாக அவளது சொத்தை பறித்துவிட்டு அடித்து அவமதித்துச் சித்ரவதை செய்கிறான், கரமசோவின் நெருக்கடியை தாளமுடியாமல் அடியெல்டா தனது மூன்று வயது மகன் மித்யாவை கரமசோவிடம் விட்டுவிட்டு ஒரு வாத்தியாருடன் பீட்டர்ஸ்பெர்க் ஒடிவிடுகிறாள்,

மனைவி ஒடிப்ப்போனதை காரணமாகச் சொல்லி தன் பெயரில் இரக்கம் தேடிக்கொள்கிறான் கரமசோவ், ஒடிப்போனவள் எப்படி வாழ்கிறாள் என்பதைத் தேடிப்போய்ப் பார்க்கவும் ஆசைப்படுகிறான், மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி வேசைகளுட்ன் கூத்தடிக்கிறான், அடியெல்டா ஜன்னிக் காய்ச்சல் கண்டு இறந்து போய்விட்டாள் என்பதை அறிந்துகொள்ளும் போது உணர்ச்சி வசப்பட்டவனாக வீட்டில் இருந்து தெருவிற்கு ஒடி கைகள் இரண்டினையும் வானுக்கு உயர்த்தி உன் அடிமை நிம்மதியாக இருக்க அருள் செய்வாயாக எனக் கூவுகிறான், அவளுக்காக அழவும் செய்கிறான்,

பெரும்பான்மையான கயவர்கள் நாம் நினைப்பது போல இல்லாமல் சாதாரணமான எளியவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற வாசகமே அவனது அறிமுகமாக அத்தியாய முடிவில் சொல்லபடுகிறது

மனிதனின் சகல செய்கைகளுக்குப் பின்னும் ஏதோவொரு காரணமிருக்கிறது என்பதை ஆராய்வதே கரமசோவ் நாவலில் முக்கிய நோக்கம், அதற்கு ஒரு கருஞ்சுழல் தேவைப்படுகிறது, இந்தக் கறுப்பு வட்டமாகக் கரமசோவ் உருவாக்கபடுகிறார், ஒரு ஆக்டோபஸைப் போல இந்தச் சுழல் தன்னைச் சுற்றியவர்களைத் தனக்குள் இழுத்துக் கொண்டு தனது கீழ்மையை அவர்கள் மீது உமிழ்கிறது, கரமசோவ் என்பது ஒரு நோய்கூறு போலவும், அந்த நோய் உடன் பழகும் மனிதர்களைப் பற்றிக் கொண்டுவிடக்கூடியது எனவும் தஸ்தாயெவ்ஸ்கி விவரித்துக் கொண்டு போகிறார்

தகப்பன் கரமசோவை இயக்குவது பயம், அவனது பயம் எதுவென அவன் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறான், ஆனால் அதைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசுவதில்லை, தனது மோசமான செயல்களுக்காகத் தான் நிச்சயம் தண்டிக்கபடுவோம் என்பதை உணர்ந்திருக்கிறான், அப்படி இருந்தும் அந்தக் குற்றவுணர்ச்சிக்காக அவன் திருந்தி வாழ்வதற்கு முன்வருவதில்லை,

அவனை நம்பி தனது பெற்றோரை விட்டு ஒடிவரும் அடிலெய்டா அவனை மாறும் யுகத்தின் மனிதன் என நம்புகிறாள், உண்மையில் கரமசோவ் மாறும் யுகத்தின் மனிதன் தானா என்பதே நாவலின் முக்கியக் கேள்வி

மாறும் யுகம் எனத் தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுவது மரபுகளும் நம்பிக்கைகளும் கைவிடப்பட்டு, போலியான பிரெஞ்சு கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்த பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவின் புறச்சூழலையே, அதன் நாயகனே கரமசோவ், தகப்பன் கரமசோவினை வாசிக்கையில் நமக்கு நினைவிற்கு வரும் இன்னொரு கதாபாத்திரம் செல்மா லாகெர்லாவின் நாவலில் வரும் கெஸ்டா பெர்லிங், இவன் ஒரு பாதிரி, ஆனால் குடிகாரப்பாதிரி, பெண்களுடன் சல்லாபம் செய்கின்றவன், அதே நேரம் மனம் தோய்ந்து பிரசங்கம் செய்கின்றவன், இவன் ஏக்பி சீமாட்டியின் காதலன்களில் ஒருவனாகிறான், அவனது வீழ்ச்சியின் கதையைச் சொல்கிறது மதகுரு நாவல்,

கெஸ்டாபெர்லிங், கரமசோவில் இருந்து பெரிதும் மாறுபட்டவன், ஆனால் இருவரும் ஒரே விதமான களிமண்ணால் செய்யப்பட்டால் இரண்டு பொம்மைகள் என்று எளிதாக வகைப்படுத்தலாம், கெஸ்டாபெர்லிங் ஒரு சிறுமியை ஏமாற்றி அவளது கோதுமை மூடைகளை வண்டியோடு விற்று குடித்துவிடக்கூடியவன், அதே செயலின் இன்னொரு பக்கம் தான் அடியெல்டாவை காதலிப்பதாக நடித்து ஏமாற்றும் தகப்பன் கரமசோவ்

கரமசோவ் நாவல் முழுவதும் தனது முடிவற்ற பொய்களின் வழியே தகப்பன் கரமசோவ் நமக்குள் நிரம்பத்துவங்குகிறான், நாவல் தூய்மையான அன்பின் வலிமைய பற்றிப் பேச முற்படுகிறது, அதற்குப் பரிசோதனை களமாக இப்படியொரு தீமையின் உருவம் தேவைப்படுகிறது, இவனிடமிருந்தே அன்பும் கருணையும் கொண்ட அல்யோஷா உருவாகிறான், இவான், மித்யா இருவரும் தகப்பன் கரமசோவின் இயல்பான குணத்தில் பாதியை கொண்டிருக்கிறார்கள், அல்யோஷாவிடம் மட்டுமே கரமசோவின் அடையாளம் காணப்படுவதில்லை, அதற்குக் காரணம் அல்யோஷா மட்டுமே மாற்றத்தினைத் தானே உருவாக்கிக் கொள்ள விழைகிறான், தனது இருப்பின் கதியை தனது செயல்களின் வழியே அர்த்தமாக்கி கொள்ள விரும்புகிறான், அவன் ஒருவகையான கிறிஸ்து,

நாவலின் முதல் அத்தியாயத்தில் தகப்பன் கரமசோவின் வாழ்வினை மட்டுமின்றி அவன் அவமானகரமான முறையில் கொல்லப்பட்டதும் கோடிகாட்டப்படுகிறது, வீழ்ச்சியுற்ற ஒரு மனிதனின் கதை என்ற அளவில் தான் இதன் முக்கியத்துவம் அறிமுகமாகிறது

அலயோஷாவின் கதையைக் கூறுவதற்கு எதற்காகத் தகப்பன் கரமசோவ் கதையை முதன்மையாகத் துவக்குகிறார் நாவலாசிரியர் என்ற கேள்வி நமக்குள் எழவே செய்கிறது, தந்தையைப் புரிந்து கொள்வது, தந்தையின் புறக்கணிப்பை, அவமதிப்பை அடையாளம் காண்பது என்பது தஸதாயெவ்ஸ்கியடம் தொடர்ந்து வரும் ஒரு செயல், ஒருவகையில் அவரே நாவலின் அல்யோஷா,

தகப்பன் கரமசோவ் தஸ்தாயெவ்ஸ்கியின் சொந்த தகப்பனின் சாயலில் உருவானவரே, தனது சுயவாழ்க்கையைப் பரிசீலனை செய்து கொள்ளவே தஸ்தாயெவ்ஸ்கி முயன்றிருக்கிறார். அதற்குக் களமாக நாவலை தேர்வு செய்து கொண்டிருக்கிறார், ஏனென்றால் புனைவெழுத்தை தவிர அவர் ஆறுதல் அடைவதற்கு வேறு உறவுகள் எதுவும் அவருக்கு வாழ்வில் கிடைக்கவேயில்லை,

தனது கடந்தகாலத் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளாத வரை மன வலியில் இருந்து தன்னை மீட்க முடியாது என்பதைத் தஸ்தாயெவ்ஸ்கி உணர்ந்திருக்கிறார், அதன் வெளிப்பாடே இந்த நாவல், இதில் தகப்பன் கரமசோவ் படுகொலை செய்யபடுவதைப் போன்ற தஸ்தாயெவ்ஸ்கியின் சொந்த தகப்பனும் கிராமத்து விவசாயிகளால் படுகொலை செய்யப்படுகிறார், அதைக் கேள்வியுற்ற தஸ்தாயெவ்ஸ்கி காக்காவலிப்பு நோய்க்கு உள்ளாகிறார், வலிப்பு நோய் நாவலிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று

கரமசோவ் நாவலை புரிந்து கொள்ள விரும்பும் ஒருவன் பைபிளை வாசித்திருக்க வேண்டியது அவசியம், ஒருவகையில் இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் பைபிள், பிள்ளைகளைப் பெற்றவர்களே வளர்க்காமல் யார் வீட்டிலோ வளர்க்க விடுவது என்பது நாவலில் தொடர்ச்சியாக வரும் பிரச்சனை, அடுத்த வீட்டினை நம்பி வாழும் பால்யகாலம் அவமானத்தாலும் பசியாலும் நிரம்பியது என்பதை நாவலில பலமுறை தஸ்தாயெவ்ஸ்கி வலியுறுத்திக் கூறுகிறார்

பால்யகாலத்தில் ஒருவன் அடையும் கசப்புணர்ச்சிகள் அவன் வாழ்க்கை முழுவதும் பின்தொடரக்கூடியவை, அவனது ஆளுமையின் ஒரு பகுதியாகவே இந்த வலி உருமாறிவிடுகிறது, அந்தக் கசப்பை போக்கி கொண்டவன் அல்யோஷா ஒருவன் மட்டுமே

நாவல் முழுவதும் முட்டாளை போலத் தகப்பன் கரமசோவ் நடிக்கிறான், உண்மையில் அவன் முட்டாள் இல்லை, முட்டாளாக நடிப்பது ஒரு தந்திரம், அதைச் சகலரும் விரும்புகிறார்கள், அல்லது மக்களை ஏமாற்றுவதற்கு அது எளிதான வழியாக இருக்கிறது, ஒருவனது பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளப் பழகிவிட்டால் போது எவரையும் வீழ்ச்சி அடைய செய்ய முடியும் என்பதையே மித்யாவின் வழியாகத் தஸ்தாயெவ்ஸ்கி அடையாளம் காட்டுகிறார்,

மித்யாவை தனது கட்டுக்குள் வைத்திருக்க அவன் கேட்கும் நேரங்களில் எல்லாம் பணம் தருகிறான் தகப்பன் கரமசோவ், பிறகொரு நாள் உனக்கு என் சொத்தில் எதுவும் கிடையாது, நீ கடன்காரன் எனத் துரத்தியும் விடுகிறான், மித்யாவை தகப்பன் கரமசோவின் நிழல் என்றே சொல்ல வேண்டும், அவர்கள் இருவரும் பிரிக்க முடியாதவர்கள், ஆனால் நிழல் தேய்வ்தும் வளர்வதும் போல மித்யா தனது ஆளுமையை ஒடுக்கவும் வளர்க்கவும் செய்பவனாக நாவலில் இடம் பெறுகிறான், இதன் உச்சபட்சமே அவன் தகப்பனை தாக்கி காயமடையச் செய்வது

தகப்ப்ன் கரமசோவ் ஒரு மோசமான காதலன், அவனால் பெண்களை எளிதாக வசியப்படுத்திவிட முடிகிறது, வணிக ஒப்பந்தம் செய்யப்போன ஊரில் பதினாறு வயது சோபியாவை கண்டுபிடிக்கிறான், அவள் மாதகோவில் குருக்களின் மகள், பெற்றோரை இழந்தவள், வொரோகவ் என்பவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வளர்ந்தவள், சித்ரவதையான சூழலில் வளர்ந்த அவள் ஒரு நாள் தற்கொலை செய்ய முயன்று தோற்று போகிறாள், அவளை நைச்சியம் பேசி மயக்கி தன்னோடு ஒடி வந்துவிடும்படி செய்கிறார் தகப்பன் கரமசோவ், தனது காமப்பசிக்கு அவள் ஒரு விருந்து என்று மட்டுமே கரமசோவ் கருதுகிறான், அவளுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது, பேய்பிடித்துவிட்டது என அவளைப் பேயோட்டுகிறவர்களிடம் அழைத்துப் போகிறார்கள், பணிப்பெண்ணாக வாழ்ந்த நெருக்கடியில் இருந்து தப்பி அதை விட மோசமான கரமசோவிடம் சிக்கிக் கொள்கிறாள், இவான், அல்யோஷா என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்று தந்துவிட்டு சோபியா இறந்து போய்விடுகிறாள், இரண்டு பிள்ளைகளையும் வழக்கம் போலவே கைவிட்டுவிடுகிறார் கரமசோவ், அவர்களைப் பராமரித்து வளர்ப்பவன் கிரிகோரி எனும் வேலைக்காரன்

சோபியா இறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவளது வளர்ப்பு தாய் விபரம் அறிந்து கரமசோவை சந்திக்க வருகிறாள், அவரை நேரில் கண்டு அவன் கன்னத்தில் ஒங்கி ஒரு அறை கொடுக்கிறாள், பிறகு சோபியாவின் பிள்ளைகளைத் தானே வளர்ப்பதாகக் கூட்டிப் போய்விடுகிறாள், அடிவாங்கிய விபரத்தை கரமசோவ் மறைக்கவில்லை, அதை வெட்கமேயில்லாமல் ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு அலைகிறான், தனது அவமானங்களைப் பெருமையாகக் கருதும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையே தகப்பன் கரமசோவின் வழியே நாம் உணர முடிகிறது

கரமசோவ் நாவலின் சகல நிகழ்வுகளைத் துர்வினையின் சுழிக்காற்றே இயக்குகிறது, அந்தச் சுழிக்காற்றில் சிக்கிக் கொண்டு தன்னை இழப்பவர்களும், மீட்சிக்காகப் போராடுபவர்களும், சுழிக்காற்றில் காணாமல் போய்விட்டவர்களையும் நாவல் அடையாளம் காட்டுகிறது

படித்து வளர்ந்த இளைஞனாக இவான் தனது தந்தையைச் சந்திக்கச் செல்கிறான், அவனிடம் தந்தையின் மீது பகையில்லை, கசப்புணர்வு இல்லை, அவனுக்குத் தந்தை என்ற உறவு தேவையாக இருக்கிறது, அவன் மித்யாவிற்கும் தந்தைக்கும் இடையில் ஒரு பாலத்தைப் போல உருமாறுகிறான், ஒரு கவிஞனின் நிலையற்ற தடுமாற்றங்களே அவனை முன்நகர்த்திப் போகின்றன,

சதுரங்க கட்டங்களில் நகரும் காய்கள் ஒவ்வொன்றும் புதிரான விதியின் ஒரு நகர்வு தான் என்பது போலவே நாவலில் வரும் கதாபாத்திரங்கள் செயல்படுகிறார்கள், இருளும் கீழ்மையும், அகம்பாவமும் முட்டாள்தனமும் சூழ்ந்த உலகில் தூய வெளிச்சம் ஒளிர்வதைப் போலவே பாதர் ஜோசிமா அடையாளம் காட்டப்படுகிறார்

ஜோசிமா மடாலயத்தின் மூத்த துறவி மட்டுமில்லை, அவர் ஒரு முன்மாதிரி மனிதர், பிறரது துக்கத்தைக் கேட்டு ஆறுதல் சொல்பவர், சாந்தியும் சமாதானமும் வாழ்வின் ஆதாரங்கள் என நம்புகிறவர், அன்பின் வழியாக மட்டுமே மனிதர்கள் கடைத்தேற முடியும் என உறுதியாக நம்புகிறவர் ஜோசிமா,

தகப்பன் கரமசோவ் கதாபாத்திரம் தீமையைப் பிரதிபலிக்கிறது என்பதால் அதற்கு மாற்றாக அதே முதுமையுடன் அன்பின் வடிவமாக ஜோசிமா உருவாக்கபட்டிருக்கிறார், ஆகவே ஜோசிமா, கரமசோவின் மாற்றுவடிவம், ஜோசிமாவை சந்திக்கும் போது தகப்பன் கரமசோவ் தன்னை அறியாமல் தடுமாற்றம் அடைகிறான், மிகையாக நடித்து உளறுகிறான், தனது தவறுகளை அவர் மன்னிக்க வேண்டும் என நாடகம் ஆடுகிறான், ஜோசிமாவோ அமைதியாக, துளியும் கோபம் அடையாமல் அவனை அன்போடு நடத்துகிறார், தன்னைப் போலக் கீழான மனிதன் மீது ஏன் ஜோசிமா கோபம் கொள்ளவில்லை என்பது தகப்பன் கரமசோவை உறுத்துகிறது

ஜோசிமாவே கரமசோவ் குடும்பத்தில் தப்பிப் பிறந்த அல்யோஷாவை வழிகாட்டுகிறார், அல்யோஷாவின் மீதுதான் நாவலின் கதை சொல்லி அதிக விருப்பம் கொண்டிருக்கிறார் என்பதற்கு அவனைப் பற்றிய நுட்பமான விபரங்களே சாட்சி,

அல்யோஷாவின் முக்கியப் பிரச்சனை அவனால் தீய சொற்களைச் சகித்துக் கொள்ள முடிவதில்லை என்பதே, அவன் மனிதர்களின் துர்செயல்களைக் கூடச் சகித்துக் கொள்கிறான், ஆனால் வசைசொற்களைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை, சொல் தான் அவனது பலவீனம், அதனால் அல்யோஷா அதிகம் பேசுவதில்லை, அவனை இலட்ச கணக்கான மக்கள் உள்ள நகரில் தனியாகக் கொண்டு போய்விட்டாலும் பசியாலும் குளிராலும் வாடமாட்டான், அவனுக்கு அவை எப்படியாவது கிடைத்துவிடும், அவனுக்கு உதவி செய்ய முன்வருபவர்கள் சந்தோஷத்துடன் அதைச் செய்வார்கள் என்று நாவலின் கதை சொல்லி கூறுகிறான், அது தான் அல்யோஷாவின் தனித்துவம்,

வளர்ந்து பெரியவனாகி ஊருக்கு வரும் அல்யோஷா முதலில் செய்கிற காரியம் இறந்து போன தனது தாயின் கல்லறையைப் பார்வையிடுவது , அதற்காகவே ஊருக்கு திரும்பி வந்திருக்கிறான், முகம் காணாத தாயின் அன்பிற்காக அவன் ஏங்குகிறான், அந்த அன்பை தான் பாதர் ஜோசிமா அவனுடன் பகிர்ந்து கொள்கிறார்,

மகனை சந்தித்த தகப்பன் கரமசோவ் அவனிடம் நீ உன் தாயை போலவே இருக்கிறாய் என்று கூறுவது நினைவு கொள்ளப்பட வேண்டிய ஒன்று, அல்யோஷா தனது தாயின் கல்லறையைக் கூடத் தகப்பன் பராமரிக்க வில்லை என்பதைக் கர்ண்கிறான், ஆனால் இது குறித்துத் தகப்பனிடம் குற்றம்சாட்டி பேசுவதில்லை, மௌனமாக இருந்து விடுகிறான், அல்யோஷாவின் நடத்தைத் தகப்பன் கரமசோவிற்குள் ஆழமான குற்றவுணர்ச்சியை உண்டு பண்ணுகிறது, அவன் உடனே ஆயிரம் ரூபிள் பணத்தைப் பிரார்த்தனை நடத்த மடாலயத்திற்கு நன்கொடை அனுப்பி வைக்கிறான், அல்யோஷா மனிதர்கள் தஙகளின் குற்றத்தை தானே உணர்ந்து திருத்திக் கொள்வதற்குத் தூண்டுதலாக இருக்கிறான் என்பதன் அடையாளமே இந்தச் சம்பவம்

துறவிகள் மடத்தில் தான் சேரப்போவதாகத் தந்தையிட்ம் அல்யோஷா கூறும் போது அதைக் கேட்ட தகப்பன் தனது மீட்சிக்கான வழி அது என்றே உள்ளுற உணர்கிறான், ஆனால் வெளிக்காட்டிக் கொள்வதில்லை, தன்னை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் கொக்கிகள் பற்றிச் சொல்வதுடன் நரகம் என்பது ஒரு திறந்த வெளி என்று உறுதியாகக் கூறுகிறான், மானங்கெட்ட காரியங்களைச் செய்த தான் நிச்சயம் தண்டிக்கபடுவோம் என்று நினைக்கும் தகப்பன் கரமசோவ் அதைப் பரிகாசதுடனே வெளிப்படுத்துகிறான், அந்த உரையாடலின் முடிவில் கரமசோவ் தனது மகன் அல்யோஷாவிடம் இந்த உலகில் என்னைப் பழிக்காத ஒரே ஆள் நீ மட்டும் தான் என்று கூறுகிறான், அது தான் அல்யோஷாவின் சிறப்பம்சம்

தவறு செய்வதில் ஒரு ஆனந்தமிருக்கிறது, அவமானப்படுவதிலும் ஒரு ஆனந்தமிருக்கிறது என்று பாதர் ஜோசிமா முன்பாகத் தகப்பன் கரமசோவ் சொல்கிற வாசகம் மிக முக்கியமானது, மனித் மனதின் இயல்பு பற்றிய ஆதாரகண்டுபிடிப்புகளில் ஒன்று இது என்றே சொல்வேன்,

கிறிஸ்துவ மதஅமைப்புகளின் கையில் முற்றான அதிகாரத்தைத் தந்துவிடுவதன் வழியே மாற்று அரசாங்கமும், புதிய நீதி வழங்குதலும் கிடைக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தஸ்தாயெவ்ஸகி காரசாரமான நாவலில் விவாதம் செய்கிறார், மதம் எப்படித் திருச்சபை என்ற நிறுவனமானது, அந்த நிறுவனம் எப்படி வானாளவிய அதிகாரத்திற்கு ஆசைப்படுகிறது, ஒருவேளை அந்த நிறுவனம் முழுமையாகத் தனது அதிகாரத்தைச் செயல்படுத்த முடிந்தால் அது மனித வாழ்க்கையின் மீட்சிக்கு உதவியாக இருக்குமா என்ற கேள்விகளை எழுப்பி அதன் சாதகபாதகங்களை வெளிச்சமிட்டுகாட்டுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி,

சகமனிதனை நேசிக்க வைக்கும் சக்தி எதுவும் இந்தப் பூமியில் இல்லை,இயற்கை விதியும் இங்கே இல்லை, இந்தப் பூமியில் அன்பு இருக்குமானால் அது இயற்கை விதியில் இருந்து உண்டானதில்லை, மாறாக மனிதர்களின் அமரத்துவ நம்பிக்கையில் இருந்தே உண்டானது என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி,

அன்பு என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு, சகஉயிர்களை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் இயற்கையில் உண்டானதில்லை, அது மனிதர்கள் தாங்களே உருவாக்கி கொண்ட ஒன்று என்பதே அவரது எண்ணம், அதனால் அன்பை வலியுறுத்தவும், கடைபிடித்து வாழ்ந்து சக மனிதர் மீதான நேசத்தை முன்னெடுத்துச் செல்லவும் வேண்டியிருக்கிறது என்பதையே தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்

தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் மனிதமீட்சி குறித்தே பேசுகிறார்கள், ஆனால் டால்ஸ்டாய் ஒரு மனிதன் தன்னை ஒப்புக் கொடுப்பதன் வழியே மீட்சியுற முடியும் எனறு நம்புகிறார், அவருக்குள் ஒரு கிறிஸ்துவத் துறவியின் மனநிலையே செயல்படுகிறது,

ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி துறவிகளாலும் கூடத் தூய அன்பை தந்துவிட முடியாது, மனிதமீட்சி என்பது பெரும்போராட்டம், இந்த நெருக்கடி வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டு சிக்கி அவதியுற்றே அதைக்கடந்து போக வேண்டும், மனிதனின் கற்பனையே அவனது மீட்சிக்கான முதற்படி, எளிய அன்பை மனிதர்கள் புரிந்து கொள்ளும் போது மீட்சியை நோக்கி நகரத் துவங்குகிறார்கள்,

சாத்தான் என்று எதுவும் கிடையாது என்ற காரணத்தால் மனிதர்கள் தன்னைப் போலவே ஒரு சாத்தனை உருவாக்கி கொண்டார்கள் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி, மனிதர்கள் அற்ப பூச்சிகள், அவர்களால் தங்களின் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க இயலாது, அவர்கள் தீமையின் புதைகுழிக்குள் வாழ விரும்புகிறவர்கள்,

உண்மையில் இந்த உலகம் ஒரு பெரிய சிறைக்கூடம், பல்வேறு குற்றங்களுக்காகப் பல்வேறு விதமான தண்டனை பெற்று இங்கே வந்

No comments:

Post a Comment