Thursday 16 October 2014

ஆர்.கே. சண்முகம் செட்டியார்


சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்பவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.

பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். அவர்கள்: நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; சட்ட அமைச்சர் அம்பேத்கர். அம்பேத்கர் தனக்கு நிதி போர்ட்ஃபோலியோ கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று ஓரிடத்தில் படித்தேன். (கிறிஸ்டோஃபர் ஜாஃப்ரிலாட் எழுதிய Dr Ambedkar And Untouchability: Analysing And Fighting Caste என்ற புத்தகத்தில் என்று நினைக்கிறேன்.) ஆக, அம்பேத்கரை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கொண்டுவந்து இவருக்கு நிதித்துறை என்னும் மிக முக்கியமான பொறுப்பை நேரு கொடுக்கக் காரணம் என்ன? இவர் பொருளாதாரத் துறையில் என்ன சாதித்திருந்தார்?

அமைச்சரவை தொடர்பாக காந்தியிடம் ஆலோசிக்காமல் நேருவும் படேலும் முடிவெடுத்திருக்க மாட்டார்களே? காந்திக்கு சண்முகத்தைத் தெரியுமா? காந்தி என்ன சொல்லியிருப்பார்?

நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பியது ஏன்? காங்கிரஸ்காரர்கள் என்ன கலகம் செய்து இவரைத் துரத்தினர்?

இந்த மனிதர் பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள் மிகக் குறைவே. சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஒரு பிஎச்.டி ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் ஜனரஞ்சக வடிவத்தை தமிழ்ப் புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிடப் போகிறது.

அதனை எடிட் செய்யும்போதுதான் இந்த மனிதரின் பல குணங்கள், சாதனைகள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாளர்களுல் இவர் ஒருவர். ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை.

இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்னை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் முகமது அலி ஜின்னா போல, ஆங்கிலேயர்களுடன் கருத்து வேற்றுமை இருந்தாலும், தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆங்கில அரசு சார்பில் இவருக்கு ஏதாவது ஒரு பதவி இருந்துவந்தது. ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்கவேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். உதாரணமாக அட்லாண்டிக் பிரகடனம் தொடர்பாக இவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுடன் பேசியது.* (இதுபற்றி தனியாக எழுதவேண்டும்.)

இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தரவேண்டிய Balance of Payment சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

கோயமுத்தூர் பகுதியை தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் மிக முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கோவையில் SIMA, SITRA போன்ற அமைப்புகளை உருவாக்கியதில் இவருக்குத்தான் முக்கியப் பங்குள்ளது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். (உரையா, ஆய்வுக்கட்டுரையா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பிரதி கிடைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.) தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார்.

மேலே நான் சொன்னது மிகச் சில துளிகளே. இவரது வாழ்க்கையில் தெரிந்துகொள்ள சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளன.

தனிவாழ்வில் நிறைய சொத்து சேர்த்துள்ளார். பொதுவாழ்வில் நிறைய சாதித்துள்ளார். ஒருவிதத்தில் பார்த்தால் உலகளாவிய பெருமை பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ஆனால் இவர்மீது வெளிச்சமே விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

- பத்ரி சேஷாத்ரி

(இன்று அவது 122-வது பிறந்த தினம்) 

Friday 10 October 2014

சாயாவனம்

1963-ம் ஆண்டில் நானும் கந்தசாமியும் மாலை நேரத்தில் ஜெமினி ஸ்டுடியோ எதிரில் இருந்த ‘டிரைவ் இன் உட்லண்ட்ஸ்' ஓட்டல் இயங்கிய தோட்டத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிச் கொண்டிருப்போம். அது தோட்டக்கலை சொசைட்டிக்கு சொந்தமான இடம். அப்பகுதி காடுபோல் தோற்றமளிக்கும்.
நிறைய மரங்கள். நெடிதுயர்ந்த மரங்கள். அடர்ந்த கிளைகளையும், இலைகளையும் கொண்ட மரங்கள், பருமனான மரங்கள் என பலதரப்பட்ட மரங்கள் இருந்தன. நடுப்பகல் நேரத்தில் சூரியஒளி தரையில் ஓவியம் போல புள்ளிகளாகச் சிதறிக் கிடக்கும். மரங்கள் சூழ்ந்து நிழல் பகுதியாக இருந்தது என்பதால் அந்த ஓட்டலில் காலை முதல் இரவுவரை கூட்டம் களை கட்டும்.
ஓட்டலைக் கடந்து உள்பக்கம் நடந்தால் சற்றே அகலமான ஒற்றையடிப் பாதை தோட்டம் முழுவதும் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருக்கும்.
தோட்டத்தில் பலன் தரும் மரங்கள் எதுவுமே இல்லை. எல்லாம் நிழல் தரும் மரங்கள்தான். குல்மோகர், காஷியோ ஜவானிகா போன்ற சில அயல்நாட்டு மரங்களும் இருந்தன. காலை நேரங்களில் வண்ணப் பூக்கள் தரையில் உதிர்ந்து படர்ந்திருப்பது பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். அதேபோல் மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கியிருப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கும். நகரின் மையப் பகுதியில் இருந்த அந்த இயற்கைச் சூழ்நிலையை எத்தனையோ பேர்கள் ரசித்திருப்பார்கள். ஏதோவொரு காரணத்திற்காக அந்தச் சூழ்நிலையும், மரங்கள் அடர்ந்த தோட்டமும் அவர்களின் மனதில் அழியா இடம் பெற்றிருக்கும்.
தோட்டத்தில் காட்டாமணக்கு, நுணா, ஆடாதோடை, நொச்சி, ஊமத்தை, குப்பை மேனி, எருக்கு ஆகியவற்றோடு புதர்போல கொடிகள் மண்டிக் கிடந்தன. குத்துமணிக் கொடிகளையும், தொட்டாச்சிணுங்கியையும் காண முடிந்தது, ஒதிய மரத்தின் பாதி மரம் வரை கொடிகள் பின்னிப் படர்ந்திருந்தன.
சில நாட்களில் இலுப்பைப் பூ பூத்திருக்கும் போது ஈரக் காற்றில் கலந்து வரும் வித்தியாசமான வாசம் மனதைச் சுண்டியிழுக்கும்.
நாங்களும் எங்களைப் போன்றவர்களும் உட்கார்ந்து பேசிய இடங்களில் புல் மட்டும் இருக்கும் அடர்த்தியான செடிகள் எதுவும் இருக்காது. மழைத் தூறல் விழுந்து விட்டால் உட்கார முடியாது. அந்தி சந்தி நேரத்திற்குப் பிறகும் கொசுக் கடியையும், சில் வண்டுகளையும் சமாளிக்க இயலாது!
1963ல்தான் சா. கந்தசாமி, சாயாவனம், நாவலை எழுதத் திட்டமிட்டார். தோட்டக்கலை தோட்டத்தில் சந்தித்த அந்த நாட்களில் தான் எப்படி எழுத எண்ணியுள்ளார் என்பதை விரிவாகப் பேசினார்.
சாயாவனம் எனும் மரங்களடர்ந்த ஒரு வனப்பகுதி கரும்பாலை நிறுவுவதற்காக அழிக்கப்படும்போது எதிர்கொள்ளும் சிரமங்களையும், தீ வைத்து ஒரு பகுதியை எரித்து அழிக்க நினைக்கையில் அது திசை திரும்பிச் சேதம் விளைவிப்பதையும் தீப்பற்றி எரியும் போது எல்லோரும் அவர்களறிந்த தீப் பற்றிய சம்பவங்களைப் பேசுவது பற்றியும் பேசினார்.
ஒரு வனம் அழியும் வரலாறு பற்றி எழுதப் போகும் நாவல் பற்றி நகரின் மையப்பகுதியில் இருந்த காடு போன்ற பகுதியில் அமர்ந்து பேசியதுகூட ஆபூர்வமான ஒற்றுமைதான்.
சந்திக்கும் நாட்களில் அதுவரை அவர் எழுதிய பக்கங்களைப் படித்துக் காண்பிப்பார்.நாவல் வெளிவந்தவுடன் அதை இனங்கண்டு தமிழில் நல்ல நாவல் என்ற அபிப்பிராயத்தை முதலில் பதிவு செய்தவர் அசோக மித்திரன்.
திரு.சி.சு. செல்லப்பாவிடம் ‘சாயாவனம்' நாவல் பற்றி நான் பேசியபோது அவர் நாவலின் மையக் கருத்தைப் பற்றி எதுவும் பேசாது, ஒரு இடத்தில் வனம் என்றும், மற்றோர் இடத்தில் காடும் என்றும், வேறோர் களம் பற்றி ஒரு தெளிவில்லாமல் உள்ளது; வனம், காடு, ஆரண்யம் என்பதற்கெல்லாம் அதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. அவை தெரியாது எழுதியிருப்பது தவறு என்றார். அப்படியானால் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக ‘வனம்' என்றோ, ‘காடு' என்றோ மாற்றிவிட்டால் என்னவாகும் என்றேன். அப்போது அவருக்கு என்மீது கோம்பதான் வந்தது.
சாந்தப்பன் கந்தசாமி என்பது சாயாவனம் கந்தசாமி என்று அழைப்படுமளவிற்று முதல் நாவல் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தது.
‘சாயாவனம்' அழிக்கப்பட்டு கரும்பாலை வந்தது போல சென்னை மாநகரின் மையப்பகுதியில் தோட்டக்கலை சொசைட்டியின் காடுபோல செழித்திருந்த மரம், செடி, கொடிகளின் பெரும்பகுதி, குறிப்பாக நானும் சா. கந்தசாமியும் அமர்ந்து பேசிய பகுதி, அழிக்கப்பட்டு ‘அண்ணா மேம்பாலம்' வந்தது என்பதும் வரலாறாகிவிட்டது. இன்று அப்பகுதியைப் பார்க்கும்போது பழைய நினைவுகளே பசுமையாக படர்ந்து நிற்கிறது.
- நா. கிருஷ்ணமூர்த்தி

நன்றி: தி இந்து தமிழ்

சாயாவனம் நாவலை இணையத்தில் ஆர்டர் செய்ய: http://www.udumalai.com/index.php?page=search&serach_keyword=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

Tuesday 7 October 2014

நிழல் வீரர்கள் -ராவின் சொல்லப்படாத கதைகள்!

இந்திய உளவுத்துறையான ராவில் அதன் துவக்கத்தில் இருந்து தொன்னூறுகள் வரை பணியாற்றிய ராமன் அவர்களின் நினைவலைகளான The Kaoboys of R&AW: Down Memory Laneவாசித்து முடித்தேன். இந்திய உளவுத்துறை சீனப்போரில் இந்திய இன்டலிஜென்ஸ் பீரோவின் தோல்விக்கு பின் உருவானது. அதன் சாதனைகள்,தவற விட்ட தருணங்கள்,பிரதமர்கள் அதை நடத்திய விதம் எல்லாம் நூலில் பேசப்பட்டு இருக்கிறது. ஒரளவுக்கு இந்திய அரசியல் வரலாற்றை பற்றிய புரிதல் இருந்தால் நூல் இன்னமும் சுவையாக இருக்கும்.
கவ் எனும் உயர்ந்த மனிதரைத்தான் ராவின் தந்தை என்று அழைக்க வேண்டும். அது உருவான காலத்தில் இருந்து பத்தாண்டுகள் வரை அதன் தலைவராக இருந்த அவர் மிகக்குறுகிய காலத்தில் வங்கதேசம் உருவாவதில் முக்கிய பங்காற்றினார். மிசோ மற்றும் நாகலாந்து இயக்கம் ஆகியவற்றுக்கு சீனா கொடுத்த ஆதரவை எப்படி தடுத்தார்கள் ரா அமைப்பு என்பதும்,அடிப்படை தர்க்கத்தை கொண்டு ராவின் தவறான தகவலை எப்படி மானேக்ஷா சரியாக கண்டறிந்தார் என்பதும் சுவையான அத்தியாயங்கள். கவ் அவர்களின் பெயராலே ராவின் அதிகாரிகள் கவ்பாய்ஸ் என்று வழங்கப்படுகிறார்கள்.
ஜியா யுல் ஹக் மற்றும் மொரார்ஜி தேசாய் அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்கள். பாகிஸ்தானில் அப்பொழுது ஆழமாக இந்தியா ஊடுருவி இருந்தது. பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் எப்படி இறங்கி உள்ளது அதன் பணிகள் என்னென்ன என்று துல்லியமான தகவல்கள் இந்தியா வசம் அப்பொழுது இருந்தன. சிறுநீர் குடித்து எப்படி தன் உடல்நிலையை கவனித்து கொள்கிறார் மொரார்ஜி தேசாய் என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தனக்கு பாகிஸ்தானின் அணு ஆயுதம் சார்ந்த முன்னெடுப்புகள் தெரியும் என்று உளறி இருக்கிறார் மொரார்ஜி தேசாய்

வெளிநாட்டு பயணம் போய் விட்டு விமானத்தில் ஏறிய இந்திரா உடன் வந்திருந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் எண்ணற்ற டிவி செட்களை வாங்கி இருப்பதை கண்டிருக்கிறார். இந்தியா வந்து இறங்கியதும் எல்லாரையும் சுங்க பரிசோதனைக்கு உள்ளாக்கி அதற்கான வரி செலுத்திய பின்னரே அனுமதித்து உள்ளார்கள். எக்கச்சக்க ஊழல் ராவில் இருந்தது என்பதும்,மேல்நிலை அதிகாரிகள் தங்கள் உறவினர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டார்கள் என்றும்,அதே போல எண்பதில் ஒரு ஸ்ட்ரைக் செய்தார்கள் ரா ஊழியர்கள். அதற்கு பின்னர் அவர்களுக்கு ஸ்ட்ரைக் செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. என்றும் விவரிக்கிறார் ராமன்.

எப்படி இந்திராவின் மரணத்தை தடுக்க உளவுத்துறை தவறியது என்று விவரிக்கிற பொழுது கொஞ்சம் வியப்பாகவே இருக்கும். இந்திராவின் உடல் அளவை நேரடியாக கேட்க யாருக்கும் தைரியம் இல்லாமல் அவரின் அளவுள்ள ஒருவரைக்கொண்டு குண்டு துளைக்காத ஆடை அவருக்கு தயாரிக்கப்பட்டு தரப்பட்டு இருக்கிறது. அதை அணிந்து வியர்க்கிறது என்று இந்திரா அணிய மறுத்திருக்கிறார். அதற்கு பின்னர் தொலைபேசியை உபயோகப்படுத்தாமல் சீக்கிய வீரர்கள் காரியத்தை முடித்து இருக்கிறார்கள். இந்திய வானொலிக்கு முன் இந்திராவின் மரணத்தை அறிவித்தது பி பி சி. இந்திராவை அழைத்து செல்ல அப்பொழுது ஒரு ஆம்புலன்ஸ் கூட உடனடியாக இல்லை. அதன் விளைவாகவே சிறப்பு பாதுகாப்பு படை பிரதமருக்கு எழுந்தது. அது வரை பிரதமருக்கு என்று தனிப்படை இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்
சீக்கியர்களின் காலிஸ்தான் கோரிக்கைக்கு எப்படி பாகிஸ்தான் நீர் வார்த்தது என்பது சுவையான அத்தியாயம். பெனசீர் காலத்தில் தான் அது நிறுத்தப்பட்டு இருக்கிறது. என்றாலும் அது சிந்தி பகுதியில் ரா ஏற்படுத்திய குழப்பங்களால் என்பதும் அதே சமயம் ஜிஹாதி தீவிரவாதிகளை காஷ்மீரில் ஏகத்துக்கும் அவர் வளர்த்து விட்டார் என்பதையும் குறிக்கிறார் ஆசிரியர். காலிஸ்தான் தீவிரவாதிகளின் முக்கிய ஆள் ஒருவரை விமானத்தை கடத்திய பொழுது எப்படி பண்டாரி எனும் இந்திய அதிகாரி தன் தொடர்புகளின் மூலம் விமானத்தோடு ஹைஜாக் செய்தார் என்பது வெகு சுவாரசியம்.

அதேபோல பொம்மை துப்பாக்கியை வைத்தெல்லாம் விமானத்தை கடத்தி இருக்கிறார்கள் காலிஸ்தான் ஆட்கள். அயல்நாட்டுக்கு செல்லும் எல்லா செய்திகளையும் நடுவில் புகுந்து படித்தல் பல சமயங்களில் எப்படி உபயோகமாக இருந்தது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்காவிடம் பாகிஸ்தான் எப்படி தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று டைமர் ஆதாரங்களை ராமன் தரப்போக அவற்றை கச்சிதமாக அழித்து விட்டு சிரித்து உள்ளது அமெரிக்கா.

சீக்கிய பயங்கரவாதத்துக்கு எப்படி ஆதரவு குறைந்தது என்பதே சுவையானது. இந்திரா எப்படி வன்முறையை பொற்கோயிலில் தவிர்க்க பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து நடத்தினார் என்பதை முழுமையான பதிவுகளோடு ராவிடம் ஒப்படைத்து உள்ளார் ஆசிரியர். ராஜீவ் கில் பொறுப்புக்கு வந்த பொழுது மீண்டும் பொற்கோயில் தீவிரவாதிகள் கட்டுபாட்டுக்கு போன பொழுது உள்ளே அவர்களை இருக்க வைத்து உணவு முதலியவற்றை கட் செய்து முற்றுகை நடத்திய பொழுது கோயிலை கழிப்பறையாக பயன்படுத்தியது முக்கிய தலைவன் ஒருவன் மது மற்றும் மாது என்று வாழ்ந்தது ஆகியன முக்கியமாக அவ்வியக்கத்தை நீர்த்துப்போக செய்துள்ளது.

ராஜீவின் படுகொலை,மும்பை குண்டு வெடிப்புகள் ஆகியவற்றில் ரா கோட்டை விட்டது,ராஜீவை மரத்துக்கு பின் நின்று கொல்ல இருந்த ஒருவனின் துப்பாக்கி வேலை செய்யாமல் போனதால் அவர் தப்பியது எல்லாம் திக் திக் பக்கங்கள்.

எல்லா பிரதமருக்கு ராவை விட சில மூலங்கள் இருந்தன,வி.பி சிங்கிற்கு பெனசீர் ஆட்சி கவிழும் என்று முன்னமே தெரிந்து இருந்தது சந்திரசேகருக்கு நேபாளின் நிலைமை ராவை விட முன்னமே புரிந்து இருந்தது. இந்திராவுக்கு இலங்கையில் என்ன நடக்கும் என்று துல்லியமாக தெரிந்திருந்தது என்றும் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

ரா எப்படி இப்பொழுது வலிமை இழந்துள்ளது என்று ஆசிரியர் விவரிக்கிறார். இறுதியாக இயல்பான ஒரு நிகழ்வை சொல்லி முடிப்போம். ராவின் அதிகாரிகளுக்கு பெருந்தொல்லை ஐ எப் எஸ் அதிகாரிகளின் மனைவிகள். அவர்களுக்கு இவர்கள் ரா அதிகாரிகள் என்று தெரிந்தால் அந்த நாட்டுக்கு மேட்டர் தெரிந்து விடும். கூடுதலாக,சில அம்மணிகள் பார்டியில் இவர் ராவின் ஆள் என்று கைதூக்கி காட்டி விடுவார்களாம்.

-நன்றி: பூ. கொ. சரவணன்

சுவாரஸ்யமான இந்நூலை இணையத்தில் வாங்க:
http://www.udumalai.com/index.php?prd=nilal%20virargal:oru%20ra%20athigariyin%20ninaivukkurippugal&page=products&id=8124

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய: 73 73 73 77 42

Wednesday 1 October 2014

இன்றைய காந்தி! - இளங்கோ கிருஷ்ணன் மதிப்புரை



என் பதினெட்டாவது வயதில் காந்தியின் ’சத்திய சோதனை’ என்ற நூலை வாசித்தேன். அப்போது நான் இடது சாரிகளின் தத்துவ நூட்களை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலம். சத்திய சோதனையை வாசிக்கும் முன்பே தோழர்களின் நேரடிப் பேச்சின் வழியாகவும் ஒரிரு நூல்களின் வழியாகவும் காந்தி குறித்த எதிர்மறையான சிந்தனைகள் என்னுள் இருந்ததால் நான் சற்று விலகிய மனநிலையோடோ அந்த முதல் நூலின் வாசிப்பைச் செய்தேன். என்னுள் இருந்த எதிர் மனநிலையையும் கடந்து காந்தியின் அந்த நூல் என்னை வசிகரித்தது. அது முதல் தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் வாசித்து வருகிறேன். 

பாடதிட்டத்திற்கு வெளியே ஒரு மாணவனுக்கு இன்று காந்தி குறித்து வழங்கப்படும் சித்திரம் என்பதென்ன? பேரளவில் அவைகள் காந்திக்கு எதிரானவைகளே. எளிய பாலியல் நகைச்சுவைகளில் துவங்கி தத்துவ செறிவூட்டபட்ட தர்க்க பூர்வமான விவாதங்கள் வரை அவைகள் எண்ணற்று இருக்கின்றன. இந்திய அரசியல் தலைவர்களில் யாருக்காவது காந்தியின் அளவிற்கு வசைகளும் விதந்தோதல்களும் இருக்கிறதா என்றால் ஒப்பீட்டளவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒருபுறம் அவர் மகாத்மா என்று உன்னதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்க; மறுபுறம் அவர் மிக மோசமான மனிதர் என்பதற்கான தரவுகள் தேடிக் கண்டுபிடித்து அடுக்கப்படுகின்றன. ஒரு நடுநிலையான மனம் இருபுறமும் குவிந்து கொண்டே செல்லும் இந்த விவாதங்கள் முழுதையும் படித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஆயுளே முடிந்துவிடும் என்று தோன்றுகிறது.
நிலைமை இப்படி இருக்கும் போது காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவை கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும். தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும். அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது. 

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியையும் அதற்கு முந்தைய நூற்றாண்டையும் தத்துவங்களின் நூற்றாண்டு என்று சொல்வோமானால் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியையும் இந்த நூற்றாண்டையும் தத்துவச் சரிவுகளின் நூற்றாண்டு அல்லது தத்துவங்கள் மீதான அவநம்பிக்கைகளின் நூற்றாண்டு எனச் சொல்லலாம். உன்னதமான லட்சியங்கள், மிகப்பெரிய கனவுகள், மகத்தான தியாகங்கள் எல்லாம் மண்ணில் சரிந்து விழுந்ததை, விழுவதை கையறு நிலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றன இவ்வுலகின் மிகப்பெரிய மூளைகளும் மிகப்பெரிய மனங்களும். இவ்வாறான சூழலில் காந்தியின் இன்றைய தேவை என்ன? காந்தியச் சிந்தனைகளால் நம் சமகால வாழ்வுக்கு உபயோகமாக எதையாவது வழங்க இயலுமா என்பதை இந்நூல் விவாதிக்கிறது.

இந்நூல் ஒரு நடுநிலையான வாசகன் மனதில் செய்வதென்ன? ஜெயமோகன் பாரிஸ்டர்.மோகந்தாஸீக்கு வக்கீலாக மாறி அவரின் எல்லா செயல்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கிறாரா என்று கேட்டால். இல்லை என்பேன். நமது அறிவுச்சூழலில் நிலவும் காந்தி குறித்த கருத்துகள் ஒருசில சிந்தனைப் பள்ளிகளால் உருவாக்கப்பட்டவை காங்கிரஸ்காரகளும், அரசு பாடத்திட்டமும் உருவாக்கியவை இடதுசாரிகள் உருவாக்கியவை, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உருவாக்கியவை. இதைத் தவிர தலித்திய அறிவுஜீவிகளும் நவீன காந்தியர்களும் உருவாக்கியவை. இந்நூல் மேற்கூரிய இந்த சிந்தனைப்பள்ளிகளின் காந்தி குறித்த வழக்கமான வாய்ப்பாடுகளை எல்லாம் வாசக மனதிலிருந்து தகர்க்கிறது. காந்தியை வரலாற்றிற்குள் வைத்து முன் முடிவகளற்று வரலாற்றின் முரணியங்கியல் பார்வையில் காந்தி குறித்த கருத்துகளை முன்வைக்கிறது. 
முன்முடிவுகளோடு இந்நூலை அணுகும் ஒரு வாசகன். தான் நிற்கும் புள்ளியை நோக்கி வரலாற்றை வளைத்து வரலாறு தன் வீட்டு வழியாக செல்வதான பாவனையோடு நடந்து கொள்ளும் போது இந்நூல் அதற்கு எதிராக செல்வதாக அதிர்ச்சியடைகிறான். 
எனில் காந்தி குறித்து இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துகளுமே சரியானதா என்று கேட்டால் அதைக் கண்டடைய வேண்டியது அந்த வாசகனின் கடமை என்றே சொல்வேன். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட நூல். எவ்வளவு தர்க்கபூர்வமாக சிந்தித்தாலும் ஒரு படைப்பாளியின் மனம் கலைபூர்வமாகவே செயல்படும். மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளின் வழியாக கண்டடையப்படும் தரிசனங்களை நம்பியபடியே முன்னேறும் படைப்பாளி அவரது மன அமைப்பிற்கேற்பவே விஷயங்களை கண்டடைவார். அவ்வாறு செய்யும் போது அவரது இயல்பான மனச்சாய்வின் பாதிப்புகள் அவர் கண்டடைந்த விஷயங்களிலும் இருக்கும். ஒரு நுட்பமான வாசகன் இந்த புள்ளியை மிகக் கவனமாக கடந்து விடுவான். லக்‌ஷ்மி மணிவண்ணன் என்னிடம் இந்த நூலை மிகவும் குறிப்பிட்டு பேசிவிட்டு சொன்னார். “அது முக்கிய நூல். ஆனால் அதில் உள்ள காந்தி ஜெயமோகனின் காந்தி”. இந்த புரிதல் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு வரலாற்று ஆளுமையை புரிய வைக்க ஒரு எழுத்தாளைனைப் போல் வேறு யாராலும் முடியாது. ஆனால் அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு பிறகு எழுத்தாளன் நின்று விடுகிறான். வாசகன் அந்த ஆளுமையோடு தனியாக உரையாடி உண்மையை நோக்கி நகர வேண்டியதிருக்கிறது. உதாரணமாக இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகளைச் சொல்லலாம். சேகுவோரா குறித்தும் அம்பேத்கார் குறித்தும் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்தும் உள்ள கட்டுரைகள் விவாத்திற்குரியவையாக உள்ளன. ”ஒரு கதாசிரியனுக்கு வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். ஆனால் ஒரு வரலாற்றாசிரியனுக்கு அவ்வாறு இருக்கத் தேவையில்லை” என்ற இராமச்சந்திர குஹாவின் மேற்கோளை அம்பேத்காருக்கு எதிராக காந்திக்கு கோரும் போது மற்றவர்களுக்கு ஏன் கோரக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது.

வெள்ளைகாரந்தான் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துட்டு போனான்; காந்தியா வாங்கிக் கொடுத்தார்? அவர் தனியாகவா வாங்கிக் கொடுத்தார்? என்பதில் துவங்கி அவர் தலித்துகளுக்கு என்ன செய்தார்? என்பது வரை கேட்கப்படும் சற்றும் வரலாற்று உணர்வற்ற கேள்விக்களுக்கு மிகுந்த பொறுப்போடும் தார்மீக கோபத்தோடும் நீண்ட விளக்கமான பதில்களை சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். மேலும் காந்தியின் சமகாலத்தில் இருந்த தலைவர்கள் குறித்தும் அவர்களுக்கிருந்த தத்துவ புரிதல்கள் வரலாற்று புரிதல்கள் குறித்தும் அவர்களின் மன அமைப்பு குறித்தும் அவர்கள் காந்தியை எதிர்கொண்ட போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்கள் விஷயத்தில் காந்தியின் செயல்பாடு குறித்தும் காந்தியின் குரலாக காந்தியின் ஆன்மாவாக நின்று பதில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். 
எப்படி காந்தியால் மக்களை ஒன்று திரட்ட முடிந்த்து? எப்படி காந்தி ஒரு மகத்தான தலைவர்? எப்படி அவர் அவரின் காலத்தில் இருந்த எந்த தலைவரை விடவும் மிகச்சிறந்த சிந்தனையாளர்? என நூல் முழுதும் காந்தியின் ஆளுமையை மிகச் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இதற்கு ஜெயமோகனின் அபாரமான மொழி வளமும், தத்துவ, வரலாற்று அறிவும் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றன. 

ஆளுமை, அரசியல், தரிசனம் என மூன்று பெரும் பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள 20 கட்டுரைகள் வழியாக காந்தி என்ற வரலாற்று நாயகன் குறித்து உரையாடப்படுகிறது. காந்தியும் காமமும், காந்தியும் சாதியும், காந்தியும் தலித் அரசியலும், காந்தியும் பிற்படுத்தப்பட்டோரும் ஆகிய கட்டுரைகளும் பகுதி மூன்றில் உள்ள கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. குறிப்பாக பகுதி மூன்றில் உள்ள காந்தியும் தொழில்நுட்பமும், காந்திய மருத்துவம், காந்திய தேசியம், காந்தியின் கிராம சுயராஜ்யம் போன்ற கட்டுரைகள் காந்திய உரையாடல்கள் எவ்வாறு நவீன உலகிற்கு தேவையானதாக உள்ளது என்று மிகுந்த அக்கறையோடு பேசுகின்றன. நம் சமகால அரசியல்-பொருளாதார-பண்பாட்டு வாழ்வுக்கு புதிய திறப்புகளை அளிக்க கூடிய சாத்தியமுள்ளவைகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் ஜெயமோகனை நவீன காந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராக ஆக்குகின்றன. 
2000 பிறகு தமிழ் அறிவுச் சூழலில் காந்தி குறித்து சில முக்கியமான நூல்கள் வந்திருக்கின்றன. அ.மார்க்ஸ், பிரேம், ஜெயமோகன் போன்ற வேறுபட்ட சிந்தனை முறை உடையவர்கள் காந்தி குறித்த உரையாடல்களை துவங்கியிருக்கிறார்கள். சற்று கூர்ந்து நோக்கினால் தமிழில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இன்று காந்தியம் குறித்த உரையாடல்கள் தீவிரமாகியிருப்பதை உணரலாம். இதன் பிண்ணனி என்ன என்பது குறித்தும். இன்றைய சூழலில் காந்தியின் தேவை என்ன என்பது குறித்தும் ஆழமான உரையாடல்கள் நம்மிடையே அவசியமாக இருக்கின்றன. இனியும் காந்தி ஒரு மனுவாதி என்றும் காந்தி ஒரு பாப்புலிச சிந்தனையாளர் என்றும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது. ஏனெனில் காந்தி என்ற ஆளுமை வெறும் அரசியல் தலைவராக மட்டுமே செயல்பட்டவரல்ல. அரசியல், பொருளாதாரம், சூழலியம் போன்ற பல்வேறு துறைகளை நோக்கி நவீன காந்தியம் தன் கிளைகளை பரப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறது. காந்தியோ மார்க்ஸோ கொள்ள வேண்டியதை கொண்டு தள்ள வேண்டியதை தள்ளியபடியே வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனவே காந்தியம் சார்ந்த உரையாடல்களை முன் எடுக்க வேண்டிய தேவை ஒன்று இங்கு உருவாகியிருக்கிறது அதற்கான திறப்பை இந்நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

- இளங்கோ கிருஷ்ணன் 

இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/index.php?prd=Indraya%20Gandhi&page=products&id=6320

தொலைபேசி மூலம் வாங்க: 73 73 73 77 42