Tuesday, 30 September 2014

திரைக்கதை எழுதலாம் வாங்க!

திரைக்கதை எழுதலாம் வாங்க என்ற ராஜேஷ் எழுதிய  நூலை வாசித்தேன். இதன் சில கட்டுரைகளை தினகரன் வெள்ளிமலர் இணைப்பிதழில் முன்னதாக வாசித்திருக்கிறேன். புத்தகமாக வாசிக்கையில் திரைக்கதை குறித்துத் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான புத்தகமிது என்று உணர்ந்தேன்.வாழ்த்துகள் ராஜேஷ். ஸிட் பீல்டினை முன்வைத்து தமிழ்சினிமாவின் முக்கியக் கூறுகளை அழகாக விவரித்திருக்கிறீர்கள்.

கருந்தேள்’ ராஜேஷ் எழுதும் சினிமா விமர்சனங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவன் நான். சினிமா குறித்து ஆழ்ந்து அறிந்தவர் ராஜேஷ்.  தனது வலைத்தளத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து விரிவாகவும் நுட்பமாகவும் நிறைய எழுதியிருக்கிறார்.

பொதுவாகத் திரைக்கதை குறித்து எழுதுபவர்கள் அதை ஒரு பாடம் எடுப்பதைப் போல தக்கையாக எழுதிவிடுவார்கள், ஆகவே அதை வாசிக்கையில் வெறும் விதிகள் போலவே தோன்றும். ராஜேஷின் எழுத்தில் எளிமையான விவரிப்பும், தெளிவான அணுகுமுறையும் மெல்லிய கேலியும் கலந்துள்ளது. இது அவரது எழுத்தின் பலம் என்றே சொல்வேன்

லார்டு ஆப் தி ரிங்ஸ் குறித்து விரிவாக எழுதிய கட்டுரைகளின் வழியே தான் ராஜேஷை முதன்முறையாக அறிந்து கொண்டேன்.ஹாலிவுட் திரைப்படம் ஒன்றைக் குறித்து இத்தனை விரிவாக, சிறப்பாக எழுதியிருக்கிறாரே என்ற வியப்போடு தான் அவரைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

ராஜேஷின் சிறப்பு அவர் வெறுமனே திரைப்படங்களை விமர்சனம் செய்வதில்லை, அதன் நவீனத் தொழில்நுட்பம், திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, கலைநுட்பங்கள், இயக்கத்தின் சிறப்புகள் குறியீட்டுதன்மை ஆகியவற்றை விரிவாக அலசுகிறார். அத்துடன் தமிழ் சினிமாவின் பலம், பலவீனம் எவையென ஆராய்ந்து எழுதுகிறார்

தமிழில் திரைக்கதை குறித்து அதிகப் புத்தகங்களில்லை, ஸிட் பீல்டினை சுஜாதா அறிமுகம் செய்து எழுதியிருக்கிறார். ஆனால் ஸிட் பீல்டினை எடுத்துக் கொண்டு தமிழ் சினிமாவின் திரைக்கதை அமைப்பை யாரும் இத்தனை விரிவாக எழுதியதில்லை, இந்த முயற்சிக்கு அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பது நன்றாகப் புரிகிறது.

இளம் இயக்குனர்களுக்கும் புதிதாகத் திரைக்கதை எழுத விரும்புகிறவர்களுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் துணை செய்யும். இதைச் சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திரைக்கதை குறித்து வகுப்புகள் எடுப்பதுடன், திரைக்கதை வல்லுனராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் தமிழ் சினிமாவிற்குப் புதிய சாளரம் ஒன்றினைத் திறந்து வைத்திருக்கிறார், அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்!

- எஸ்.ராமகிருஷ்ணன்.

திரைக்கதை குறித்த நூல்களை இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/?page=search&serach_keyword=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய: 73 73 73 77 42

Sunday, 28 September 2014

கங்கை கொண்ட சோழன்!
ராஜேந்திர சோழனை கதை நாயகனாகக் கொண்டு பாலகுமாரன் எழுதிய மகத்தான நாவல் கங்கை கொண்ட சோழன். ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்.

விமலாதித்தன் உடல் நலக் குறைவால் இறக்கிறான். கீழைச் சாளுக்கியதைக் காப்பாற்ற ராஜேந்திரரின் மகன் மனுகுல கேசரி தலைமையில் சோழப் படை செல்கிறது. போரில் மனுகுல கேசரி இறக்கிறான் மற்றும் மூன்று தளபதிகள் கொல்லப்படுகிறார்கள்.

ராஜேந்திரர் தனது மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறார். இதனால் சோழ நாடும், கீழைச் சாளுக்கியமும் மேலைச் சாளுக்கியதிடமிருந்து பாதுக்கப்படும் என்று கருதுகிறார்.
அருண்மொழி பட்டன், அரையன் ராஜராஜன் இருவரையும் மேலைச் சாளுக்கியத்தை நோக்கிப் படையுடன் ராஜேந்திரர் அனுப்புகிறார். அவர்கள் ஜெயசிம்மனின் படைத்தளபதியான கங்கே யாதவின் படைகளை முறியடிக்கிறார்கள். சோழப்படை வெற்றி பெற்று முன்னேறி, வழி முழுவதும் எதிர்பட்ட மேலைச் சாளுக்கியரை அழித்து மன்யகேடத்தைக் கைப்பற்றி நிர்மூலமாக்குகின்றது. ஜெயசிம்மன் கங்கே யாதவை வடக்கிலுள்ள மனர்களிடமிருந்து ஆதரவைப் பெற அனுப்புகிறான்.

வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று, கங்கை நீரைக் கொண்டுவந்து பெருவுடையாருக்கு அபிசேகம் செய்யவும் தனது புதிய நகரத்தில் கட்டப்பட்ட கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவும் அந்நகரத்தில் உள்ள ஏரியில் ஜலஸ்தம்பம் எழுப்பவும் ராஜேந்திரர் முடிவெடுக்கிறார். ஒருபுறம் தரைப்படைகள் மூலமும் மறுபுறம் தனது புதிய கடற்படை மூலமும் கிடுக்கி தாக்குதல் ஏற்படுத்தி படைகளை முன்னேற வைக்கிறார். எதிர்ப்பட்ட எல்லா படைகளையும் வென்று சோழர்படை வெற்றிவாகை சூடுகிறது. சோழர்படை வெற்றிகொண்ட அரசர்களின் மூலம் கங்கை நீரைக் கொண்டுவந்து கோவிலுக்கு குடமுழுக்கும் நடை பெறுகிறது.

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான்.

கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது.

இணையத்தில் வாங்க: www.udumalai.com


தொலைபேசியில் ஆர்டர் செய்ய: 73 73 73 77 42

Saturday, 27 September 2014

மோகமுள்: உயிர்த்திரளின் ஆதார விதி!

பயன்பாட்டில் உள்ளவை அனைத்தும் அப்பழுக்கில்லாமல் தொடர்ந்து இருப்பதில்லை. நம் பூஜை அறைகளில் தினமும் ஏற்றி வைக்கப்படும் குத்துவிளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும், அதில் எண்ணை வடிந்து பச்சை பூத்துவிடுகிறது. வழக்கமாக நாள் கணக்கு வைத்துக்கொண்டு நாம் அவற்றை புளி போட்டுத் தேய்த்து விளக்குவதுபோல் இலக்கியப் படைப்புகளையும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும். தொடர் வாசிப்பில் இருக்கும்போதுகூட  உயர்ந்த இலக்கிய ஆக்கங்கள் தேய்வழக்குகளாகக் குன்றி விடுகின்றன. நண்பர்களுடனான விவாதங்கள் மட்டுமே புதிய வாசிப்புக்கான தேவையை உருவாக்குகின்றன.

அத்தகைய ஒரு விவாதத்தில் என்னுடன் முரண்பட்ட நண்பர்கள் சிலர், தி ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி  மீண்டும் சிந்திக்கத்  தூண்டினார்கள்.  அவர்களின் முக்கியமான விமர்சனம் தி.ஜா காமம் பற்றிய விசாரணைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதும், உன்னதமாக்கல் நிகழவில்லை என்பதும், யமுனா இதற்குத்தானா என்ற கேள்வியை அடைய நாவல் அனாவசியமாக நீள்கிறது என்பதுமாக இருந்தது.அவர்களுக்கு நன்றி சொல்லி விவாதத்தின் தொடர்ச்சியாக என்னுள் எழும் எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறேன், வாசகர்கள் இந்தப் பார்வையைத் தொடர் விவாதங்களின்மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. விவாதங்களே நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றான தி ஜானகிராமனின் மோகமுள் நாவலுக்கு துலக்கம் தருவதாக இருக்கும்.

எழுதப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் மோகமுள் ஏன் இன்னமும் ஒரு கல்ட் நாவலாக உள்ளது? அதைப் படித்த பலர் ஏன் மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள்? புதிதாக வாசிப்பவர்களையும் அது ஏன் கவர்கிறது? ஏன் புதிய வாசகர்களை தன்னுள் இழுத்துக் கொண்டே இருக்கிறது? இது நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு விடையளிக்க முயலலாம். அது தங்களை என்ன செய்தது என்று கூற முயற்சிக்கலாம். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு நான் என்னாலான அளவுக்கு இப்படிச் சொல்கிறேன்.
இலக்கியம் என்பதுதான் என்ன? நான் அதை ஒரு நிகர் வாழ்வனுபவம் என்று சொல்வேன். நாம் வாழாத ஒரு வாழ்க்கையை நாம் உணர்ந்து பார்த்துக் கொள்வதற்கும், நாம் வாழும் வாழ்க்கையை, அதன் அழகிய, ஆழமான, மோசமான கணங்களை நாம் திரும்பி வாழ்ந்து  மதிப்பிட்டுக் கொள்வதற்கும் ஒரு படைப்பாளி படைக்கும் புனைவு வடிவிலான மாற்று, ஆனால் இணை உலகம் நமக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறது. அங்கு நாம் போகாத இடங்களுக்குப் போகிறோம், பார்க்காத காலங்களில் திளைக்கிறோம். இந்த நிகர் உலகம் எவ்வளவுக்கெவ்வளவு தன் நேர்மையைக் கொண்டு நம்பச்செய்வதாக  படைக்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நம் மனம் அதில் தோய்கிறது. இதில் அவரவருக்கான ஒரு பிரத்யேக  believing  point உண்டென்றும் நம்புகிறேன் ஒரு படைப்பை வாசிக்கும் மிகப் பெரும்பான்மையோருக்கு இந்த உணர்வை உண்டாக்கும் படைப்புகள் வெற்றிபெற்ற, கிளாசிக்ஸ் எனப்படும் படைப்புகளாகின்றன.

சமீபத்தில் ஜெயமோகன் நல்ல இலக்கிய வாசிப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு நல்ல வாசகன் குறித்து அவர் சொல்லும் அந்த குறிப்புகளின் corollary மூலம் ஒரு நல்ல படைப்பைக் கண்டு கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவை கீழ்கண்டவாறு அமையக்கூடும்.
ஒரு படைப்பில் உள்ள நிலக்காட்சிவிவரணைகள் வாசகனின் கனவாய் விரித்து அக்கனவுள் அவனை வாழச் செய்ய வேண்டும்.
கதைமாந்தர்களின் இயல்புகளைப் பற்றிய விவரணைகள்  அவர்களை உண்மையான மனிதர்களைபோல கண்முன் காட்ட வேண்டும்.
உரையாடல்கள், அவற்றின் வழியாக அந்தக் கதாபாத்திரங்களின் மனம் எப்படி வெளிப்படுகிறது என்று காட்ட வேண்டும்.

அப்புனைவுப்பரப்பில் வெளிப்படும் குறியீடுகளும் படிமங்களும் வாசகனைத் தன் கற்பனையால் பொருள்கொள்ளத் தூண்ட வேண்டும்.
மேற்காணும் இந்த அடிப்படைகள் அப்படியே பொருந்திப்போவதுதான்  மோகமுள்ளின் முதல் வெற்றி. நான் மோகமுள் படிப்பதற்குமுன் கும்பகோணம் போனதில்லை. ஆனால் அதை ஒரு முறை படித்தபின் அங்கு செல்ல ஏங்கினேன். தூக்காம்பாளையத் தெருவை கால்களால் அளக்க துடித்தேன். சாதாரண வாசகர்கள் மட்டுமல்ல பின்னாட்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளான பலருக்கும் இந்த ஏக்கம் உண்டென அறிந்திருக்கிறேன். இதைத்தான் எஸ்.ரா சொல்கிறார், “நான் ரஷ்யா போனதேயில்லை. ஆனால் சைபீரிய உறைபனியை நன்றாக அறிவேன், டால்ஸ்டாய் மற்றும் தஸ்த்யெவஸ்கி மூலமாக” என்று. மோகமுள் எனக்களித்தது ஒரு நிகர் வாழ்வனுபவத்தை 1930-40களின் கும்பகோணத்தில் நான் வாழ்ந்தது போல ஒரு அனுபவத்தை. எனக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஊர் என் ஊர் ஆக மாறிய ரசவாதத்தை.

இரண்டாவது, பெரும்பாலான வாலிபர்களுக்கு பெண்கள் மீது இருக்கும் இரு வகை ஈர்ப்பு.  சில பெண்கள் மீது நாம் காமுறுகிறோம், சில பெண்கள் மீது (பக்திப்) பரவசம் கொள்கிறோம். ஆனால் இரண்டாவதுக்கும் முதல் அடித்தளமே அடிப்படை என்று  எப்போதாவது புரிந்துவிடுகிறது. இதை தி.ஜா மிகச் சரியாக பாபு மூலம் சொல்கிறார்.

சரி. பாபுவுக்கு என்ன பிரச்சினை? யமுனா மீதான உலகம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காதல். அதை காமம் கலவாத தெய்வீகக் காதல் என்று நினைத்துக் கொள்கிறான் (தங்கம் அவனுக்கு அளிப்பது வெறும் காமம்). அவனின் இன்னொரு ஆதர்சம் கர்நாடக சங்கீதம். அதன் உன்னதத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதில் உச்சத்தை அடைய வேண்டுமென்ற ஆவல்.

யமுனா மீதான காதல் தன் நம்பிக்கைக்கு மாறாக உடல் சார்ந்ததும்தான் என்பது பாபு உண்மையை எதிர்கொள்ளும் தருணம். ஆனால் அதனால் அந்த உறவு முடிவதில்லை. அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, இருவராலுமே. இது அந்த நாவலின் ஒரு முக்கியமான இடம், ஆனால் அதுதான் உச்சக்கட்டம் என்றால் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவேன். அது அங்கே உன்னதமாக்கப் படவுமில்லை, இகழப்படவுமில்லை, அப்படியே  ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
யமுனாவின் இதற்குத்தானா என்ற கேள்வியையே இந்த நாவலின் உச்சக்கட்டமாகவும் சாராம்சமாகவும் பார்ப்பது ஒரு கோணம்தான். அது முக்கியமாக விமர்சகர்களால் வைக்கப்பட்டது. ஒரு நாவலை அப்படிச் சுருக்கி வாசிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பாபு தன்  இசைபயிற்சியை வளர்த்துக்கொள்ள மராட்டியப் பாடகர்களைத் தேடி போவது இன்னொரு உச்சகட்டம்.  பாபுவின் தந்தை  பாபு- யமுனா உறவை அங்கீகரிப்பது மற்றொன்று.

அடுத்து, மோகமுள்ளில் அதன் பல்வேறு கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படும் விதவிதமான வாழ்க்கை நோக்குகள் எனக்கு முக்கியமானவை. இசையே மூச்சாக வாழும் ரங்கண்ணா (ரங்கண்ணா ஒரு க்ளீஷே பாத்திரமாவது பின்னால் உருவானது. 60களில் தி .ஜா இந்த நாவலை எழுதுவதற்கு முன் அம்மாதிரி ஒரு பாத்திரம் தமிழ் நாவல்களில் உருவாக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்). தன் எளிமையான வாழ்வில் முழுமையை காணும்  பாபுவின் தந்தை வைத்தி, தஞ்சை மண்ணுக்கே உரிய நிலப்ப்ரபுத்துவ ஆணவமும் தளுக்கும் விருந்தோம்பலும் கொண்டிருக்கும் யமுனாவின் அந்த ஒன்றுவிட்ட சகோதரன். பாபுவின் கர்நாடக இசை குறித்த பார்வையையும் குரல் பயிற்சி குறித்த எண்ணங்களையும் மாற்றியமைக்கும் மராட்டியப் பாடகர்கள்,  அவர்களின் உரையாடல்கள், தங்கள் வாழ்க்கைக்கும் பயணங்களுக்கும் பின்னால் உள்ளதை அவர்கள் கூறுவது. பாலூர் ராமு எனும் ரங்கண்ணாவின் சீடரான புகழ்பெற்ற பாடகரின் பாத்திரம்,  உணர்ச்சிகளை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கும் ராஜம், அவன் பாபுவின் மீது கொண்ட  அபாரமான தோழமை. பாபுவின் வீட்டுக்கார பாட்டி, நீட்டி முழக்கும் மேலக்காவேரி சாஸ்த்திரிகள்.  கடைசியாகச் சொன்னாலும் மிக முக்கியமாக, யமுனா.  அவளின் அந்த fierce independence.

எத்தனை அழகான கதாபாத்திரங்கள். நான் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு கதாபாத்திரம் மேலெழுந்து வந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. ஒரு வாசிப்பில் யமுனா, ஒன்றில் வைத்தி, ஒன்றில் ரங்கண்ணா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் சேர்ந்ததுதான் மோகமுள். வெறும் இதற்குத்தானா  என்பதல்ல என்றே நான் நினைக்கிறேன்.  கூர்மையான வாசிப்பு என்ற பெயரில் காலம் செல்ல செல்ல அந்தக் கேள்வியின்மீது அழுத்தம் அதிகம் விழுந்துவிட்டதோ என்று எண்ணுகிறேன்.
இதுக்குத்தானா எல்லாம் என்று ஏமாற்றத்தில் ஓயும் கணங்களில் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அங்கும் ஒரு எழுச்சியைக் கண்டு அது மேலும் விரிந்து வாழ்க்கையைத் தொடர்கிறது, புது அனுபவங்களைக் கண்டு கொள்கிறது. பல்திசைகளில் விரிவதுதான் உயிரோட்டத்தின் இயல்பு. இந்த உயிர்ப்புதான் மோகமுள்ளின் கதைக்களனாக, பாத்திரங்களாக, உரையாடல்களாக வெளிப்படுகிறது. இதனால்தான் தலைமுறை தலைமுறையாக மோகமுள் வாசிக்கப்பட்டும் விமரிசிக்கப்பட்டும் வருகிறது.

உரையாடலில் நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார் – பாபுவின் மனதில் எப்போதும் இருக்கும் சங்கீதத்தின் ஸ்தூல உருவமே யமுனா, அவளைப் பிரிந்து இருக்கும் சமயங்களில் எல்லாம் பாபு பாடாமலேயே இருக்கிறான் என்று. அதுவும் ஒரு கோணம் என்று நினைத்துக் கொண்டேன்.
ஒரு நாவலின் நுண் தகவல்களை, விவரிப்புகளை எல்லாம் நீக்கி விட்டு நாம் சாராம்சம் என்றும் தரிசனம் என்றும் நினைக்கும் ஒரே புள்ளியை ஏற்றுக் கொண்டோ அப்படி ஒன்று இல்லையென்று நிராகரித்துவிட்டோ போவதுதான் முழுமையான வாசிப்பா என்று நான் சந்தேகப்படுகிறேன். கனிகள் விதைகளுக்காகத்தான். ஆனால் கனிகளின் வடிவமும் வண்ணமும் வாசமும் விதைகள் அளவுக்கே முக்கியமானவை.

ஆனால் ஒரு எழுத்தில் வெளிப்படும் ஆதாரக் கேள்வி என்ன என்று கேட்பதில் தவறில்லை. அது அவசியமும்கூட. நளபாகத்தில் ஒரு இடத்தில் வரும்- “ஒரு உயிர் என்ன செய்ய வேண்டும்? இன்னொரு உயிரை அணுகி அணைத்துக் கொள்ள வேண்டும்”. அவ்வளவுதான்.  மரப்பசுவையும், நளபாகத்தையும் படித்துவிட்டு ஒப்பிட்டு பார்க்கலாம். தி.ஜா.வின் ஆதாரக் கேள்வியின் மூலம் தெரிய வரும்.

- விமர்சகர் வெ.சுரேஷ்

இணையத்தில் வாங்க: www.udumalai.com

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: 73 73 73 77 42

Friday, 26 September 2014

எழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது

தமிழின் முக்கியமான எழுத்தாளரான கோணங்கிக்கு 2013-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன், பெருமாள் முருகன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

விளக்கு விருது ரூ.50,000 பரிசுத்தொகையையும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது. விருது வழங்கும் நிகழ்வு பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான விளக்கு விருதைப் பெறும் எழுத்தாளர் கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்து வருபவர். கல்குதிரை என்ற சிற்றிதழைத் தொடர்ந்து நடத்தி புதிய ஆக்கங்களை தமிழுக்க கொண்டு வந்தவர்.செறிவான உலக இலக்கியப் பார்வைகளை அறிமுகப்படுத்தியவர்.புதிய கதை சொல்லும் முறை மூலமும், தொன்மை கலாச்சாரத் தொடர்புகளின் ஊடாட்டங்களை நவீன வாழ்வில் பொருத்திப் பார்ப்பதின் மூலமும் புதிர்த்தன்மை கொண்ட  ஒரு தனித்த  வாழ்க்கைநிலையை கட்டமைப்பவர்.வணிக விழுமியங்களுக்கு எதிரான எழுத்தும், வாழ்க்கை முறையும் கொண்டு தீவிரமான கலைச் சூழல் குறித்த உணர்வை உருவாக்குபவர். மதினிமார்கள் கதை,கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம்,பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்,உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் பாழி,பிதிரா ஆகிய நாவல்களும் நகுலன், தாஸ்தாவ்ஸ்கி, மார்க்வெஸ் ஆகியோர் குறித்த கல்குதிரை தொகுப்புகளும் இவருடைய முக்கிய படைப்புகள்.

பொன். வாசுதேவன்
ஒருங்கிணைப்பாளர்
விளக்கு விருது.

கோணங்கி எழுதிய நூல்களை இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/?page=search&serach_keyword=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

திருடன் மணியன்பிள்ளை: மனிதநேய தரிசனம்!

ரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில்   தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் மழைத்தூறலுடன் கொல்லம் அருகேயுள்ள இரவிபுரத்திலுள்ள அந்த வீட்டிற்குச் சென்றபோது குழந்தைமை பொருந்திய சிரிப்புடன் வரவேற்கிறார் மணியன்பிள்ளை.  தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சீரியல். வெளியே தடதடத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ரயில். ஓர் உரையாடலுக்குத் தயாராய் எதிரில் வந்து அமர்கிறார்.

யார் இந்த மணியன்பிள்ளை? “பதினேழு வயதுமுதல் இன்று வரையிலான என்னுடைய வாழ்க்கை முழுவதுமே பயத்தாலும் பாதுகாப்பின்மையாலும் உழன்றுகொண்டிருக்கிறது. இளமையை என்னால் அனுபவிக்க இயலவில்லை. மனைவியுடன் ஒருபோதுமே மன அமைதியாகப் படுத்துத் தூங்கியதுமில்லை. குற்றவாளிகளாலும் குற்றவாசனையுள்ளவர்களாலும் நிம்மதியாகத் தூங்க முடியாது. சிறைச்சாலைகளும் போலீசாரின் சித்திரவதைகளும் தந்த வியாதிகள்...” என்கிறார் ‘நான்’ என்கிற தலைப்பில் தன்குறித்து எழுதும் முன்னாளில் திருடனாயிருந்த மணியின்பிள்ளை. ஒரு நாள் திருடனை வாழ்நாள் திருடனாக்கியது காவல்துறை என்பதை தனது சுயசரிதையில் பல்வேறு வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் நமக்குச் சொல்கிறார். இவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய இவரது சுயசரிதை நூல் இன்றுவரை 6,000 பிரதிகள் விற்றிருக்கின்றன. அண்மையில் தமிழில் குளச்சல் முகமது யூசுப் மொழியாக்கத்தில் தமிழில் ’திருடன் மணியன்பிள்ளை’ என்கிற பெயரில் வெளிவந்தது. தமிழ் இலக்கிய வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த இப்பிரதி குறித்து மலையாள இலக்கிய உலகில் நூல் வெளியான சமயத்தில் கனத்த மௌனம் நிலவியதாக மதுரையில் இந்த நூலுக்காக நடந்த விமர்சனக்கூட்டத்தில் பேசிய ஜி.ஆர்.இந்துகோபன் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதே கூட்டத்தில் வந்து பேசமுடியாமல் கண்ணீர் சிந்தியவாறே கூட்டத்தை நோக்கி கைக்கூப்பிய மணியன்பிள்ளையின் மனதில்  பொங்கும் மனிதநேயத்தை தரிசிக்கவேண்டுமெனில் நூலை வாசிப்பது ஒன்றுதான் வழி. இவர் திருடிய ஒரு வீட்டின் சிறுமி நீதிமன்றத்தில வந்து அழுததைப் பார்த்த அவர் சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதி “மகளே! மாமா திருடியதை உனக்கே திருப்பித் தந்துவிடுவேன். இனி நீ நீதிமன்றத்துக்கு வரவேண்டாம். அழவும் வேண்டாம்” என்று ஒரு அக்குழந்தையிடம் பாவமன்னிப்பு கேட்கும் இடம் ஒன்றுபோதும்.

நூலில் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், சிறைத்துறையினர், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் என்று பலர் குறித்தான உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் இதை எவ்வாறு எதிர்கொண்டனர்? “நீதிபதிகள் போன்ற வெகு சிலருடைய பெயர்களை மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றபடி என் உறவுக்காரர்கள் இதை விரும்பவில்லை. ஆனால் எனக்கு அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இந்த நூல் வருவதற்கு முன்பிருந்தே இல்லை” என்கிறார் மணியன்பிள்ளை. நூல் வெளியானபின் காவல்துறை அவர்மீது இதுவரை 12 வழக்குகள் போட்டிருக்கிறது. அதில் 11 வழக்குகளில் மீண்டு ஒரே ஒரு வழக்கு மட்டும் நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார் மணியன்பிள்ளை சகோதரியின் வீட்டில் வசிக்கிறார். சாலைகளில் பேருந்தில் ரயிலில் என்று செல்லும்போது மக்கள் அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசுவதைக் குறிப்பிடும் அவர் “மக்கள் என்னிடம் நீங்கள்தானா மணியன்பிள்ளை என்று கேட்டு அன்போடு அணைத்துக்கொள்கிறார்கள். என்ன வித்தியாசம் பாருங்கள்!” என்கிறார்.”நான் 95ல் வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டதால் இப்போது ஃபீல்ட் எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.” என்று சிரிக்கிறார்.

ஒரு கச்சிதமான திரைக்கதை போல உள்ளது மணியன்பிள்ளையின் வாழ்க்கை. 65 வயதாகும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைவிட ஒரு சினிமா எதையும் பெரிதாகச் சொல்லிவிடப்போவதில்லை. அத்தனை திகில், திருப்பங்கள், வேதனைகள், மரணங்கள், உயரங்கள், பள்ளங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அவரிடம் எல்லாமே அனுபவங்களாக எஞ்சி நிற்கின்றன. மணியன்பிள்ளையிடம் இந்த நூலில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது என்று கேட்டால் “அம்மா குறித்தவைதான்” என்கிறார். தன் பர்ஸில் நடிகை அமலாவின் சாயலில் இருக்கும் மனைவி மெஹருன்னிசா, தங்கை, தங்கையில் பிள்ளைகள் என்று குடும்பத்தினர் அத்தனை பேரின் புகைப்படங்களையும் பாஸ்போர்ட் அளவில் வைத்துக்கொண்டே போகுமிடமெல்லாம் செல்கிறார். மெஹருன்னிசாவை மணக்க முஸ்லிமாக மாறி யூசுப் பாட்சாவானார்.


இவருடைய நூலை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டபோது அது ஒரு திருடனின் சுயசரிதை என்பதாலேயே நிராகரிக்கப்பட்டது. ஆனால் என்ன முரண்பாடு? அவருடைய கதை இன்று சினிமாவாகி உலகமே பார்க்கப்போகிறது.  ”பலர் என்னை பணம் சேர்க்கச் சொல்கிறார்கள் இனி சேர்த்து என்னதான் செய்யப்போகிறேன்? என் கதை சினிமாவாகப் போகிறது. அப்போது கொஞ்சம் பணம் கிடைக்கும். அதில் இரண்டு செண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டவேண்டும். இதுதான் ஒரேயொரு ஆசை எனக்கு. ” என்கிறார்.

26 திரைப்படங்களிலும் 30 நெடுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ‘வேட்டைக்காரன்’ படத்தில் சாமியார் வேடத்தில் நடித்த மணியன்பிள்ளைக்கு தமிழில் விஜய் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம். அழகாகப் பாடும்திறன் கொண்டவர் இப்போது உடல்நலம் சரியில்லை என்பதால் பாடுவதில்லை. மலையாளத்தில் மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ரவீந்திரன். தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தியில் பப்பிலஹரி என்று அடுக்குகிறார். தமிழில் தன் அபிமான பாடலென அவர் குறிப்பிடும் பாடல் இது. “குயிலைப் புடிச்சு கூண்டிலடைச்சு கூவச்சொல்லுகிற உலகம். இந்தப் பாட்டைக் கேட்டால் கண்ணீர் விட்டு அழுவேன். அப்படித்தானே என் வாழ்க்கையும். நிம்மதியில்லாத வாழ்க்கை. அதற்குக் காரணமும் நான் தான். வேறு யாரைச் சொல்ல முடியும் நான்” என்கிறார்.

வாழ்த்துங்கல் கிராமத்தின் ரயில்வே கேட்டை கடந்து வந்து அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ஆட்டோ ஏற்றிவிடுகிறார். தங்கும் விடுதிக்கு விரையும் ஆட்டோவிலிருந்து இறங்கியபின் பேசிய நூறு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் குறைத்துக்கொண்டு தொண்ணூறு ரூபாய் மட்டும் வாங்குகிறார் ஆட்டோ ஓட்டுநர். வியப்போடு புருவம் உயர்வதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார். “நீங்கள் மணியன் அண்ணனின் விருந்தாளியல்லவாமணியன் அண்ணனுக்காக பத்து ரூபாய் குறைத்துக்கொண்டேன் அவரை எங்களுக்குப் பிடிக்கும். அவர் எப்போதும் கொழுத்தவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவார்” என்கிறார்.

****

புத்தகத்திலிருந்து...
--------------------------------

பாட்டுப் பாடியே வலியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் அம்மா. எனது குழந்தைப் பருவத்து நினைவுகலில் செத்துக்கிடந்த நிறைய பாடல்களை மாஅ பாடிப்பாடி உயிரூட்டினாள். ஒருநாள், பெரிய அக்கா வரும்போது படுத்திருந்தபடியே அம்மா பாடிக்கொண்டிருந்தாள். ‘’என்னதான் முடியலைன்னாலும் பாட்டுக்கெல்லாம் ஒரு குறையுமில்லை,” அக்கா கேலி செய்தாள். பிறகு பாட்டுக் கேட்கவில்லை. தான் சொன்னதைக் கேட்டு அம்மா பாட்டை நிறுத்தியிருப்பாளென்று நினைத்து அவள் உள்ளே போனாள். அதற்குள் அம்மாவும் போய்விட்டாள். வாய் திறந்தபடியே இருந்தது. பாதி பாடல் அம்மாவின் உதடுகளில் தங்கியிருந்தது.

மணிக்குட்டன் தன் சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். அதை அணிந்து அவள் தண்ணீரில் இறங்கி நின்று துணியை அவிழ்த்து அவனிடம் கொடுத்தாள். அவள் குளிக்கும்போது அவன் விலகியிருந்து அழுக்குத் துணுகளை ஒரு கல்லில் அடித்துத் துவைத்தான். அன்று அவன் செய்த வேலைகளைப் புரிந்துகொள்வதற்கான அறிவு எங்களுக்கில்லை. .....அன்று அவளிருந்த நிலைமை இப்போதும் என் கண்களில் நிற்கிறடு. அனாதைமையின் மனித பிம்பம். அவனை உதாசீனம் செய்யுமளவிலான தன்னம்பிக்கை அன்று அவளிடம் தென்படவே இல்லை. ...எங்கள் மனங்களிலிருந்து பங்களா மணிக்குட்டன் ஒருபோதுமே மாய்ந்துவிட முடியாது. ஒருபோதுமே! அவளுடைய உடுப்புகளை கல்லில் அவன் துவைத்துப் பிழிந்த அந்தக் காட்சி ஒன்றே போதும், இதற்குச் சான்று!

என்னுடைய இச்சிறு உடலானது ஒரு வீட்டினுள் நுழைந்துவிட்டால் பிறகு ஆட்சியதிகாரத்தின் எல்லாக் கட்டமைப்புகளும் ஓடி வருகின்றன மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள், உயரதிகாரிகள், தொழிட்நுட்பப் புலனாய்வாளர்கள், மக்கள் திரள், அவர்களை விரட்டியடிக்கும் போலீசார், அதிகாரவர்க்கத்தின் இந்தப் பதற்றம் நமக்குள் தோற்றுவிக்கும் மமதை, நான் உருவாக்கி வைத்த உற்சவம் கனஜோராக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதிலிருக்கும் அக மகிழ்ச்சி. இதுதான் ஒரு திருடனின் மனதினுள் செயல்படுகிற அம்சங்கள்.

***
என்னுடைய வழக்குகளுக்கு நானே வழக்கறிஞர். புதிதாக வந்த நீதிபதிகள் கேட்பார்கள்: “நீ ஏன் வக்கீல் ஏற்பாடு செய்யல? கேஸ்ல ஜெயிக்க வேண்டாமா?” நான் சொல்வேன்: “யுவர் ஹானர், நான் நிரபராதின்னு தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏதோ ஒரு வழக்கறிஞரை விடவும் எனக்குத்தானே அதிகம்?”
என்னுடைய வழக்குகள் கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிற நாட்களில், நீதிபதியாக இருந்த சுரேந்திரநாத பணிகர் கோட்டுப்போட்ட ஜூனியர் பையன்களிடம் சொல்வார்: “மதியத்துக்குப் பிறகு மணியன்பிள்ளையோட வழக்கு இருக்கு. சீக்கிரமாக சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா வாதாடக் கத்துக்கலாம்.”

***

அப்போது ஜனதா கட்சியால் சட்டமன்றத் தொகுதிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த வேட்பாளர் நான். அன்று பிடிபடாமலிருந்திருந்தால் திருடர்கள் ஒற்றுமையுடன் வாழும் அரசியல் அரங்கில் நானுமொரு ‘விலைமதிக்க’ முடியாத அன்பளிப்பாகி இருப்பேன். அந்தத் தேர்தலில் ஞனதா கட்சிதான் அதிகாரத்திற்கு வந்தது. ‘சிறுபான்மை’ சமூகம் என்பதால் அமைச்சர்வையிலும் வாய்ப்புக் கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள்.

***
ஒரு வீட்டினுள் திருடுவதற்காக நுழைந்தேன். சமையல் கட்டின் கம்பியை வளைத்து உல்லே ஏறினேன். ஒரு கையில் கத்தி, மற்றொரு கையில் டார்ச். எதுவோ அசைவதுபோல் சத்தம் வந்தது. லைட் அடித்துப் பார்த்தேன். வெளிச்சம்பதிந்த இடம் ஒரு மூதாட்டியின் கண்கள். அதில் உலகத்திலுள்ள எல்லாத் தீவினைகளையும் ஒருசேரப் பார்த்துவிட்டதுபோன்ற பயம் தெரிந்தது. அந்த அம்மா நடுக்கத்துடன் துவண்டுகொண்டிருந்தார். வேதனையின் மெல்லிய சீகாரம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. பயம் ஒரு வனமிருகம்போல் அவரை வலைத்திருந்தது. எனக்கு என்னவோ போலாகிவிட்டது.
நான் மெதுவாகச் சொன்னேன்: “பயப்பட வேண்டாம்மா! நான் போயிடறேன்” வந்த வழியாக வெளியேறி, வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்று வாய்விட்டு அழுதேன். இந்த அளவுக்கு மற்றவர்கள் பயந்து வெறுக்கிற துஷ்டனாக மாறிவிட்டேனே!இந்த இடத்தில் என்னுடைய அம்மாவாக இருந்திருந்தால்...மதிலில் தலியை முட்டி அழுதேன். பிறகு எல்லாமே தகர்ந்துவிட்டவன்போல் திரும்பி நடந்தேன்.

***
குழந்தைப் பருவத்து நினைவுகள் தீராத இரணங்களாகி விடும். வேதனைகளையும் அவமானஞ்களையும், நான்கைந்து வயதிலிருந்தே குழந்தைகள் மனதில் பாதுகாத்து வைத்திருப்பார்கல். பச்சை மனங்களை ஒருபோதும் புகைய வைத்து விடக்கூடாது

***

குட்டப்பனின் வாட்ச் ரிப்பேருக்கான சாதங்களிருக்கும் பெட்டியைச் சுமந்துகொண்டு ஐந்தாறு மாதங்கள் அவனுடன் திரிந்தேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஏறி வாட்ச் ரிப்பேர் செய்யணுமா என்று கேட்கும் வேலை என்னுடையது. நிறைய சொந்தக்காரர்கலின் வீடுகளுக்கும் சென்றேன். “குறவனோட பெட்டியை நாயர் பையன் சுமபப்தா?” இதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பட்டினி கிடக்கும்போது கூப்பிட்டு ஒரு பிடி சோற்றுப் பருக்கைத் தந்ததில்லை; நாலணா காசு தந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடு என்று சொன்னது கிடையாது. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பராதி மட்டும் சொனனார்கள்.

***

இன்றெல்லாம் மூன்று நான்கு திருடர்களாக சேர்ந்து வருகிறார்கள். பயமுறுத்தித் திருடுகிறார்கள். பெண்களையும் தொந்தரவு செய்கிறார்கள். எவ்வளவு தைரியமுள்ள திருடனாக இருந்தாலும் சரி.வீட்டிலிருப்பவர்கள் பார்த்துவிட்டால் ஓடிவிடத்தான் வேண்டும். அது ஒரு மரியாதை. திருடனாகிவிட்டோம்தான். இருந்தாலும் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ளலாமா? வேண்டாமா?

****

உங்களுடைய வீடுகளில் இதுவரை திருடன் நுழையவில்லை என்பதற்காக நீஙக்ள் பலத்து பாதுகாப்பினுள் இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. டிருடன் உஞ்கள் வீட்டை இன்னும் நோட்டமிடவில்லை. அவ்வளவுதான். உங்கள் வீடு அவனுடைய கவனத்தில் படவில்லை என்பது மட்டும்தான் உங்களுடைய பாதுகாப்பு.

****
இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரஸ்யமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள் சட்டத்தின்கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆகவேதான் சில இடங்களில் உங்களால் சிரிக்கவும் முடிகிறது. எனுடைய கண்ணிரின் உப்பு கலந்த ஒரு கடல் இந்தப் புத்தகம். செய்துத் தீர்த்த பாவங்களின் ஆகமொத்த சாரம். ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
- கவின் மலர்

(நன்றி: இந்தியா டுடே)

நூலை இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/?prd=thirudan%20manipillai&page=products&id=14150

ஜி.நாகராஜன்: வாழத் தெரிந்தவன்

அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த வையல்ல ஜி. நாகராஜனின் எழுத்துக்கள். அவை யதார்த்தம் நிறைந்தவை. புனைவு களும் அலங்காரங்களும் அற்றவை. இந்தச் சமூகம் போர்த்திவைத்திருக்கும் நாகரிகத் திரையைக் கிழித்து நிதர்சனத்தின் தரிசனத்தைக் காட்டியவை. போலியான மதிப்பீடுகளுக்கும் கட்டமைக்கபட்ட ஒழுக்கங் களுக்கும் இங்கே இடமில்லை. ஒரே நாளில் உலகை மாற்றலாம், நாளை நமதே என்ற வெற்று உத்வேகங்களும் இல்லை.
ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ கதையில் வருகிற கந்தன் நிச்சயம் இந்தச் சமூகத்தின் பார்வையில் நாயகன் இல்லை. இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஏறிட்டுப் பார்க்கவும் தகாதவன். அவனுக்கென்று சமூக ஒழுக்கங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லை. ஆனால் அவனுடைய குடும்பத்திலும் அவனைச் சார்ந்த மனிதர்களுக்கும் அவன் மிக மிக்கியமானவன். அவர்கள் மத்தியில் அவன் கம்பீரன், வாகைசூடுகிறவன். வாழ்க்கையை வாழத்தெரிந்தவன். அதன் நெளிவு சுளிவுகளுக்குப் பழக்கப்பட்டவன். எதிரிக்காக எப்போதும் குறுங்கத்தி வைத்திருப்பவன்.
பிறர்மனை நோக்காப் பேராண்மை அவனுக்கில்லை. அவன் மனைவிக்கும் அவன் எந்த எல்லைக்கோடுகளையும் வரைந்தது இல்லை. முதல் நாள் இரவு வீட்டுக்கு வந்துவிட்டுப் போன கல்லூரி மாணவர்கள் எப்படி இருந்தார்கள் என்று மனைவியிடம் கேட்கிற கணவனும், அதற்குச் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிற மனைவியும் நடுத்தர வர்க்க வாசகர்களுக்குப் புதிது. அப்படி புதிது என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்பட்டுக் கொள்கிற இந்தச் சமூகத்தின் மனோபாவத்தையும் கேலிச் சிரிப்புடனேயே பதிவுசெய்வது ஜி. நாகராஜனின் எழுத்து.
மனித மனம் விகாரங்கள் நிறைந்தது. மன விகாரங்களை எங்கெல்லாம், எந்தெந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்த முடியும் என்பதில்தான் ஒவ்வொரு மனிதனும் வேறுபடுகிறான். பணம் இருக்கிறவன் மறைவிலும், இல்லாதவன் வெளிப் படையாகவும் அரங்கேற்றுகிறான். அதை நுட்பமாகச் சொல்லும் ஜி. நாகராஜனின் லாகவம்தான் வாசகனை கட்டிப்போட்டுவிடுகிறது.
கந்தனின் உலகத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்கில் தான் மேல் வரிசையில் இருக்கிறவன் வாழ்கிறான், அடித்தட்டில் இருக்கிறவன் சாகிறான்.
இறந்துபோன தன் மகளைக் குறித்தும், ஓடிப் போன தன் மகனைக் குறித்தும் அழுது தீர்க்காத தந்தை அவன். கைம்பெண் ஒருத்தியிடம் இருந்து கைக்குழந்தையை வாங்கிக்கொண்டு, அவளுக்குப் பூ வாங்கித்தந்து தொழிலுக்கு அனுப்புகிறவனும், வயிற்றைச் சரித்துக் கொண்டு நிற்கிற சிறுமியொருத்திக்கு அதைச் ‘சுத்தப்படுத்துகிற’ மருத்துவரைப் பரிந்துரைக்கிறவனும் அவனே.
ஒப்பந்தம் எழுதிக் கொண்டு வருடக் கணக்கில் பணக்காரர்களுக்குத் தொடுப்பாக இருக்கும் மேல்தட்டுப் பெண்களும், தினம் தினம் புதுப்புது வாடிக்கையாளர்களை சந்திக்கும் சாக்கடை சூழ்ந்த குடிசையில் குடியிருக்கும் பெண்களும் கந்தனுக்கு ஒன்றுதான். கந்தனின் பயணத்துக்கு இடையிடையே வாழ்க்கையையும் சமூகத்தையும் புரட்டிப்போட்டுவிடக் கூடிய சிந்தாந்தம் பேசுகிற, கொடிப்பிடிக்கிற ஆசாமிகளும் நடமாடத்தான் செய்கிறார்கள்.
இத்தனை நடந்தும் எந்த மாற்றமும் இல்லாமல்தான் கந்தனுக்கு அன்றைய பொழுது முடிகிறது. விடிகிற காலையைப் பற்றி கந்தன் கவலைப்படவில்லை. அவன் பிழைத்துக் கிடந்தால் நாளை மற்றுமொரு நாள்தான்.

பிருந்தா சீனிவாசன்
நன்றி: தி இந்து

ஜி.நாகராஜன் நூல்களை இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/?page=search&serach_keyword=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D

பிடித்த 100 புத்தகங்கள் - பா. ராகவன் பட்டியல்


1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.

இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/ 

Tuesday, 23 September 2014

செப்டம்பர் 23 - எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் 92வது பிறந்தநாள்

 திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி, குருசாமி-தாயம்மாள் தம்பதிக்குத் தலைமகனாகப் பிறந்தவர், கரிசல்காட்டு எழுத்தாளர் கு.அழகிரிசாமி.

கரிசல் மண்ணுக்குத் தனிப் பெருமையை ஏற்படுத்தியவர்கள், இலக்கியம் படைத்துத் தமிழுக்கு அழியாப் பெருமையைச் சேர்த்துத் தந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுமாவர்.

கரிசல் மண்ணில் பிறந்து இலக்கிய வேகத்துடன் சென்னை, மலேசியா பகுதிகளில் வாழ்க்கையின் பெரும் பகுதிகளைக் கழித்து, இலக்கியப் படைப்புக்கு உரித்தான பாராட்டுதல்களையும் பொற்கிழியையும் பெறாதவர் கு.அழகிரிசாமி. சாகித்ய அகாதெமி பரிசையும் அவர் மறைந்த பிறகுதான் அவர் துணைவியார் பெற்றுக்கொள்ள நேர்ந்தது.

 மூத்த பழமைக்கும் வளர்ந்துவரும் புதுமைக்கும் பாலமாக அமைந்த அடக்கமான - ஆனால், ஆழமான சமூகக் கண்ணோட்டம் கொண்டவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. வாழ்ந்த 47 ஆண்டுகளில் காதலித்து மணந்த மனைவியுடனும், நான்கு குழந்தைகளுடனும் 15 ஆண்டுகளே வாழ்ந்த - வாழ்க்கையின் வளப்பத்தை முழுமையாக அவர்  அனுபவிக்கவில்லை.

அவருடைய சமகாலத்துப் புகழ்பெற்ற எழுத்தாளரான புதுமைப்பித்தனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். தொ.மு.சி.யுடன்  இணைபிரியா நண்பராக இருந்தார் கு.அழகிரிசாமி.

கதையொன்றை யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம். ஆனால், அந்தக் கதையை இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் அதே புதுமை, உயிர்த்துடிப்பு, வியப்பு குன்றாமல் அன்றலர்ந்த மலரைப்போல் இருந்தால், அது இலக்கிய வரிசையில் சேர்ந்துவிடும்.

வசதியான குடும்பத்தில் அழகிரிசாமி பிறக்கவில்லை. அதனாலேயே அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.

 பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.

கம்பர், தாகூர், பாரதி என்று நிறைய நூல்களை சுயமாகப் படித்தார். புதுமைப்பித்தன் கதைகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதனால் அவரது இலக்கிய ஆர்வம் கொழுந்துவிட்டது. சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதை அனுப்பிய வேகத்தில் திரும்பி வந்தாலும், அடுத்த சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது. கதையின் பெயர் "உறக்கம் கொள்ளுமா?'

ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் கு.அ.தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார். "எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்' என்பதை லட்சியமாகக் கொண்டார்.

அரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட "ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

 "ஆனந்த போதினி', "பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அந்த நாள்களில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேடந்தாங்கல்.

கு.அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்ட நாரண துரைக்கண்ணன், கு.அழகிரிசாமிக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார். நாரண துரைக்கண்ணன், கு.அழகிரிசாமியின் திறமையைக் கண்டு ஊக்கமளித்து பல வகைகளில் ஆதரவு தந்தார்.

"பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு "தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.

"தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட "சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ஆசிரியர் தி.ஜ.ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும்  இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.

கு.அ.வின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.  

 ""கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும்; அதே சமயத்தில் இப்படி நடந்திருக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பக்கூடிய நிகழ்ச்சிகளை விலக்க வேண்டும். பிரத்யேகமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாக இருக்கலாம்; ஆனால், படிக்குபோது இது நம்பக் கூடியதா என்று தோன்றுமானால் அது பயனற்றதாகி விடுகிறது. கதையில் கதையும் இருக்க வேண்டும்; அதே சமயத்தில் அது கதையாகவும் இருக்கக் கூடாது. இம்மாதிரி கதைகள் புனைவது எவ்வளவு கடினமான கலை என்பதை அதை எழுதும் துறையில் இறங்கி, வெற்றியோ, தோல்வியோ அடைந்தவர்களால்தான் உணர முடியும். அழகிரிசாமி அத்தகைய கடினமான கலையில் அபூர்வமாக வெற்றியடைந்திருக்கிறார்.

அழுத்தமான ஒரு மூலக் கருத்து இல்லாமல் கதையை எழுதக்கூடாது என்பது கு.அ.வின் இலக்கியக் கோட்பாடு. கு.அ.வின் "ராஜா வந்திருக்கிறார்' என்ற கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.

"சக்தி' இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம் நடைபெற்றது. கு.அ.இளம் வயதிலிருந்தே இசைஞானம் மிக்கவர். இசைஞானம் உள்ள ஒரு பெண்ணை மனைவியாக அடைய வேண்டும் என்ற அவருடைய லட்சியக் கனவின்படி சீதாலட்சுமி அமைந்தார். மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி. கு.அ.வுக்கும் சீதாலட்சுமிக்கும் நடைபெற்ற திருமணம் காதல் திருமணம் மட்டுமல்ல, சாதி வித்தியாசங்களைக் கடந்த திருமணம்.

""மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்'' என்று கு.அ. கூறும் காரணங்கள் ஏற்புடையவைதாம். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின.

1957-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு "நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். "நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் "கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

"நவசக்தி' நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, "கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.

இறுதியாக "சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.

1970-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் வாழ்க்கை முடிந்தது. இது தமிழ்ப்படைப்புலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

நன்றி: கலைமாமணி விக்கிரமன்

கு.அழகிரிசாமியின் நூல்களை இணையத்தில் வாங்க:http://udumalai.com/?name=isai&type_id=72

Monday, 22 September 2014

போர்த்தொழில் பழகு!

இறையன்பு அவர்களின் போர்த்தொழில் பழகு நூலை வாசித்து முடித்தேன். ஒரு நாவலைப்போல விறுவிறுப்பாக இந்த நூலை வாசித்து விடலாம். போர் என்பது அவசியமில்லை என்றாலும் போர்க்குணம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதற்கு வரலாற்றில் இருந்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுகிறார் ஆசிரியர். அவற்றில் என்னைக்கவர்ந்த சில பகுதிகள் மட்டுமே இங்கே. 

போர்கள் வேண்டாம் என்று வாய்வலிக்க கத்தினாலும் போரால் உலகம் முழுக்க எத்தனையோ நன்மைகள் எழுந்திருக்கின்றன. அணுகுண்டு தாக்குதலில் இருந்து அணு யுத்தத்தில் இருந்து காக்க எழுந்தது தான் இணையமாக ஆனது. ரோமானியர்கள் எங்கெங்கே எல்லாம் போர் செய்யப்போனார்களோ அங்கெல்லாம் சாலைகளை அமைத்தார்கள். உலகப்போரில் தகவல்களை பரிமாறிக்கொள்ள செய்யப்பட்ட முதலீடு தான் ரேடாரை உருவாக்கியது. ராணுவ வீரர்களை கணக்கெடுக்க ஆரம்பித்தது தான் மக்கள் தொகை கணக்கெடுப்பாக விரிந்தது. பீரங்கியின் புதிய கோட்பாடு நூல் தந்த ஊக்கம் தான் நிலவை நோக்கிய விண்வெளி பயணத்தை சாத்தியப்படுத்தியது. ஆயுதம் செய்ய ஊக்குவிக்கப்பட்ட அமோனியா உற்பத்தி உரத்தயாரிப்பு,குளிர்சாதன பெட்டி,சலவை சோப்பு என எங்கெங்கோ போனது. விமானம் அதிவேக வளர்ச்சி அடைந்ததும் போருக்கான உந்துதலில் தான். போர்க்கள மரணங்கள் தான் ரத்தபிரிவை கண்டுபிடிப்பதை சாத்தியமாக்கியது. கணினி என்கிற கனவின் தொடக்கம் நெப்போலியனின் படையெடுப்பால் இங்கிலாந்துஅரசு கொடுத்த நிதியால் துவங்கியது.

கிஷ் நாட்டின் மீது படையெடுத்த தைமூர் இருநூறு பேர் கொண்ட சிருபடையை மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு போய் புழுதியை கிளப்பிவிட்டு நிறைய பேர் இருக்கிற மாதிரியான தோற்றத்தை உண்டு செய்து போரில் வென்றிருக்கிறான். மூன்றாம் நெப்போலியனை படுக்கையிலேயே மூழ்க செய்து தனி இத்தாலி என்கிற கனவை சாதித்தார் விக்டர் இம்மானுவேல். பானிபட் யுத்தத்தில் கண்ணை துளைத்த அம்பையும்,கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டு போரிட்டான் ஹேமு. ரோமானியர்களுக்கு பெருஞ்சவாலாக இருந்த ஹானிபால் ஒரு கண்ணை கிருமி தாக்கியது அடுத்த கண்ணுக்கும் அது பரவலாம் என்று அறிந்ததும் கண்ணை நொண்டி கூலாக எடுத்துவைத்து விட்டான் !

ஒரு லட்சம் படைவீரர்கள் கொண்டிருந்த லோடியின் படையை எட்டாயிரம் வீரர்களை கொண்டு பாபர் வென்றார். காரணம்,பீரங்கிப்படை ! ஆழ்குழி வெட்டி போர் செய்யும் முறையை ஷெர்ஷா கொண்டு வந்தார். பாலைவனங்களில் அது எடுபடாத பொழுது அவரின் பேரன் கோணிப்பைகளில் மணல் நிரப்பி போரிட வைத்து ஜெயித்தான். தற்காப்பு போரில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டு இருந்த சீனா மூவாயிரம் போர்க்கலை நூல்களை உலகுக்கு தந்திருக்கிறது. எங்கேயும் எதிராளியை முதலில் தாக்கு என்று சொல்லவில்லை இந்த நூல்கள். அந்த போக்கை மாற்றி முதலில் அடி,முரட்டு அடி என்கிற ஆக்ரோஷ மனோபாவத்தை விதைத்தவர் மாவோ !

முப்பத்தி மூன்று கப்பல்களைக்கொண்டு இருந்த பிரெஞ்சு படையை
இருபத்தி ஏழு கப்பல்களை கொண்டு பதினைந்து பன்னிரண்டு என்று பிரித்து முன்பக்கம்,பின்பக்கம் என்று தாக்கி முழு நிர்மூலம் செய்தார் நெல்சன் ! முகமது அலி தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுதில் அடித்து ஆடி வென்றார்,]

எதிரிகளை திசை திருப்பி வெல்வது என்பது மிக முக்கியமான போர் முறையாக் இருந்து வருகிறது. போரசை நேரடியாக தாக்குவது போல காட்டிக்கொண்டே பின்புறம் இருந்து தாக்கியது அலெக்சாண்டரின் படை, வடக்கு பெல்ஜியம்,ஹாலந்து ஆகியவற்றை தாக்கப்போவதாக காட்டிகொண்ட ஹிட்லரின் படை திரும்பி பிரான்சை பாக்கெட்டுக்குள் போட்டுகொண்டது. சூ என்கிற நாட்டின் அரசன் பெரும்படையோடு எதிரிகள் வந்த பொழுது தெருவை சுத்தமாக பெருக்கி,எல்லா கதவுகளையும் திறந்து வைக்க சொல்லி எதிரிகளை குழப்பி படையெடுப்பை சந்திக்காமலே வென்றிருக்கிறான். ரஷ்யா நெப்போலியன்,ஹிட்லர் ஆகியோரை சந்திக்க இருக்கும் எல்லா உணவு,விவசாயம்,போக்குவரத்து காலிபண்ணும் கருகிய மண் கொள்கையால் மண்ணைக்கவ்வ வைத்திருக்கிறது.

போரை ஆரம்பிப்பதை விட முடிப்பது தான் சவாலான விஷயம். ஆப்கானில் ஒட்டுமொத்தமாக ஒழிந்து போன ரஷ்யா,வியட்நாமில் உலகப்போரை விட அதிக குண்டுகள் போட்டும் ஜெயிக்க முடியாமல் திரும்பிய அமெரிக்கா என்று எக்கச்சக்க ஆதாரங்கள். களைப்படைய செய்து வெற்றியடைவது என்கிற போர்முறையை காந்தி மிக அற்புதமாக பயன்படுத்தினார் என்பதே உணமை. பிரசாரத்தின் மூலம் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்கள் சாக்ரடீஸ்,கோயபல்ஸ். தட்சசீலத்தை அடக்க கிளம்பிய அசோகரும் வதந்திகளை கிளப்பி சாதித்தார். போர் என்பது களங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று நீங்கள் எண்ணினால் அது ரொம்ப தப்பு ! ஒரு நாட்டின் தானியங்களை மற்றொரு நாட்டின் மணிகளால் மாற்றுவது,அயல்மொழியை மாற்றிப்பேச வைப்பது,தங்களின் அடிப்படை பண்பாட்டை மறப்பது என்று நீண்டு எல்லாமும் மாறிப்போய் பிச்சை ஏந்தும் தேசமாக மாறும் பண்பே இறுதியில் முளைக்கிறது ! போர்க்குணம் இல்லாத தேசம் புதைந்து போகும் ; மனிதர்களும் தான். 


நன்றி: பூ.கோ. சரவணன்

புத்தகம் உங்கள் இல்லம் தேடி வர: http://www.udumalai.com/?prd=pour+thozhil+pazhagu&page=products&id=12274

கானகன்: பேரன்பின் தரிசனம் - எழுத்தாளர் சாருநிவேதிதாவின் மதிப்புரை

லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள கானகன் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சமீப காலத்தில் இப்படி ஒரு அற்புதமான நாவலைப் படித்ததில்லை. சர்வதேசத் தரம் வாய்ந்த நாவல். ஓநாய் குலச்சின்னம் எங்கே தோற்றதோ அந்த இடத்தில் வென்றிருக்கிறது கானகன். சிலுவை என்ற கொலைக்கருவி பேரன்பின் குறியீடாக மாறியதைப் போன்ற ஒரு மேஜிக் அது. இந்த நாவலுக்குச் சம்பந்தமே இல்லாத, கொஞ்சமும் இலக்கிய சுரணை உணர்வு அற்ற ஒரு முன்னுரை உள்ளது. இவ்வளவு பிரமாதமான ஒரு நாவலுக்கு அதை திருஷ்டிக் கழிப்பாக வைத்துக் கொள்ளலாம்.

கானகன் எனக்கு ஒரு சாதாரண நாவலாகத் தெரியவில்லை. கஸான்ஸாகிஸ் போன்ற மேதைகள் காண்பித்த பேரன்பின் தரிசனத்தை இந்த நாவலில் கண்டேன். லக்‌ஷ்மி சரவணகுமாருக்கு என் மகன் வயது இருக்கலாம். ஆனால் இந்த நாவலைப் படிக்கும் போது என்னுடைய குரு ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. மகத்தான அனுபவம்.

இங்கே இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மணல் வீடு பத்திரிகையில் லக்‌ஷ்மி சரவணகுமார் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். இருள், மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டு கௌபீனத் துணி என்பது அந்தக் கதையின் பெயர். படித்து விட்டு சாருஆன்லைனில் வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு லக்‌ஷ்மி சரவணகுமாரின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று யோசிப்பேன். லக்‌ஷ்மி சரவணகுமாரை முதல் முதலில் பாராட்டி எழுதியவன் என்ற முறையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், அடிப்படையில் நான் ஒரு தேர்ந்த வாசகன்.

மரம் அறுக்கிற சத்தம் அவன் நடந்த வழியெங்கும் கேட்டபடியே இருக்க, முன்பு ஒன்றிரண்டு பேர் வந்து மரம் வெட்டி எடுத்துப் போனது போய் இப்போது கூட்டமாக வந்து விட்டார்களே என நினைத்தான். இந்த மரங்களை எல்லாம் வெட்டி எடுத்து மலைக்கு அந்தப் பக்கம் மலையாளத்தானிடம் விற்றுத் தீர்ப்பதில் மரம் வெட்டுபவர்கள் வெறித்தனமாய் இருந்தனர். பாதையை விட்டு மெதுவாக மரம் வெட்டும் சத்தம் கேட்ட திசை நோக்கி நடந்தான். சத்தம் நெருங்கி வர, அச்சத்தில் மரங்களில் கூடு கட்டியிருந்த பறவைகள் பெரும் அலறல் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. அந்த மரங்களைப் பிரிய முடியாத பெரும் துயரோடு அவை மரங்களையே சுற்றிச் சுற்றி வருவதும் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு பறப்பதுமாய் இருந்தன. முற்றிய ஒரு தோதகத்தி மரத்தை நான்கு பேர் அறுத்துக் கொண்டிருந்தனர். அந்த மரத்திற்கு வயது இருநூறு வருசமாவது இருக்கும். பெரும் பரப்பைக் குளிர்வித்து உயர்ந்திருந்த அதன் அடியில் ஒவ்வொரு பக்கத்தும் இரண்டு பேராய் ஒரே சீரான வேகத்தில் அறுத்துக் கொண்டிருந்தனர். இந்தக் காட்டின் மரம் ஒவ்வொன்றுக்குமான தாய் நிலாவில் இருக்கிறாள். இந்த மரங்கள் அவளின் பிள்ளைகள். இதைக் கொல்கிறவர்களை எல்லாம் அமாவாசை நாளில் நிலாவில் இருக்கும் பாம்பு வெறி கொண்டு விழுங்கி விடும் என பாட்டா சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்கள் எத்தனையோ பேர் இந்த மரங்களை அறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் அந்தப் பாம்பு இவர்களை விழுங்குவதில்லை என்கிற தவிப்பு இவனுக்கு எப்போதும் இருக்கும். இந்தக் காட்டின் மரங்கள் ஒவ்வொன்றோடும் எத்தனையோ பளியன்களின் ஆன்மாவும் சேர்ந்தேதான் இருக்கிறது. தன் குழந்தையைப் பிரசவிக்கும் பளிச்சி அவளாகவேதான் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு யாரும் அவளையும் அவள் பிள்ளையையும் தொட மாட்டார்கள். தன் குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கிறவள் அந்தக் குழந்தையை முதலில் காட்டுவது இந்தக் காட்டிற்குத்தான். பளியன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே காட்டின் வாசனை அறிந்தவன் என்பதால் குழந்தை தான் இருக்கும் இடத்தை எளிதில் கண்டு கொள்ளும். அப்படி எத்தனையோ பேர் பார்த்து வளர்ந்து செத்துப் போன பின் அவர்களின் ஆன்மா எங்கும் போவதில்லை. பளிச்சி இந்தக் காட்டோடு என்றென்றைக்குமாக அவர்கள் இருக்கட்டும் என மரங்களில் வாழ அனுமதித்திருக்கிறாள். அந்த ஆத்மாக்களைத்தான் இவர்கள் வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலே வருவது லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் என்ற நாவலின் 73-ஆம் பக்கம். இந்தப் பக்கத்தை நீங்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக நானே இங்கே அதைத் தட்டச்சு செய்தேன். வாசிக்க வாசிக்க இந்த நாவலை என் பைபிள் என்றே சொல்லத் தோன்றுகிறது. இதேபோல் வேம்புவின் மீது பளிச்சியம்மன் வந்து அவள் கதறும் இடமும் நம் நாடி நரம்புகளையெல்லாம் உலுக்கக் கூடியது. “அவள் கண்ணீரும் ஒப்பாரியுமாய் அந்தக் காட்டின் ஆதிக் கதை நோக்கி தன்னை நகர்த்திக் கொள்ள நினைத்தவளாகவும் மனிதர்களின் மீதான அச்சத்தில் பைத்தியங்கொண்டவளாகவும் அரற்றினாள். ‘மனுசனுக்கு ஒரு பாடுன்னா தெய்வத்துக்கிட்ட போறோம்… தெய்வத்துக்கு ஒரு பாடுன்னா அது எங்க போவும்…’ கிழவிகள் வாய்க்குள்ளாகவே புழுங்கிக் கண்ணீர் விட்டனர்.”

நாவலை இணையத்தில் வாங்க: http://udumalai.com/?prd=kanagan&page=products&id=14933