Friday 26 September 2014

எழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது

தமிழின் முக்கியமான எழுத்தாளரான கோணங்கிக்கு 2013-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன், பெருமாள் முருகன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

விளக்கு விருது ரூ.50,000 பரிசுத்தொகையையும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது. விருது வழங்கும் நிகழ்வு பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான விளக்கு விருதைப் பெறும் எழுத்தாளர் கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்து வருபவர். கல்குதிரை என்ற சிற்றிதழைத் தொடர்ந்து நடத்தி புதிய ஆக்கங்களை தமிழுக்க கொண்டு வந்தவர்.செறிவான உலக இலக்கியப் பார்வைகளை அறிமுகப்படுத்தியவர்.புதிய கதை சொல்லும் முறை மூலமும், தொன்மை கலாச்சாரத் தொடர்புகளின் ஊடாட்டங்களை நவீன வாழ்வில் பொருத்திப் பார்ப்பதின் மூலமும் புதிர்த்தன்மை கொண்ட  ஒரு தனித்த  வாழ்க்கைநிலையை கட்டமைப்பவர்.வணிக விழுமியங்களுக்கு எதிரான எழுத்தும், வாழ்க்கை முறையும் கொண்டு தீவிரமான கலைச் சூழல் குறித்த உணர்வை உருவாக்குபவர். மதினிமார்கள் கதை,கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம்,பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்,உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் பாழி,பிதிரா ஆகிய நாவல்களும் நகுலன், தாஸ்தாவ்ஸ்கி, மார்க்வெஸ் ஆகியோர் குறித்த கல்குதிரை தொகுப்புகளும் இவருடைய முக்கிய படைப்புகள்.

பொன். வாசுதேவன்
ஒருங்கிணைப்பாளர்
விளக்கு விருது.

கோணங்கி எழுதிய நூல்களை இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/?page=search&serach_keyword=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

No comments:

Post a Comment