Friday 26 September 2014

ஜி.நாகராஜன்: வாழத் தெரிந்தவன்

அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த வையல்ல ஜி. நாகராஜனின் எழுத்துக்கள். அவை யதார்த்தம் நிறைந்தவை. புனைவு களும் அலங்காரங்களும் அற்றவை. இந்தச் சமூகம் போர்த்திவைத்திருக்கும் நாகரிகத் திரையைக் கிழித்து நிதர்சனத்தின் தரிசனத்தைக் காட்டியவை. போலியான மதிப்பீடுகளுக்கும் கட்டமைக்கபட்ட ஒழுக்கங் களுக்கும் இங்கே இடமில்லை. ஒரே நாளில் உலகை மாற்றலாம், நாளை நமதே என்ற வெற்று உத்வேகங்களும் இல்லை.
ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ கதையில் வருகிற கந்தன் நிச்சயம் இந்தச் சமூகத்தின் பார்வையில் நாயகன் இல்லை. இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஏறிட்டுப் பார்க்கவும் தகாதவன். அவனுக்கென்று சமூக ஒழுக்கங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லை. ஆனால் அவனுடைய குடும்பத்திலும் அவனைச் சார்ந்த மனிதர்களுக்கும் அவன் மிக மிக்கியமானவன். அவர்கள் மத்தியில் அவன் கம்பீரன், வாகைசூடுகிறவன். வாழ்க்கையை வாழத்தெரிந்தவன். அதன் நெளிவு சுளிவுகளுக்குப் பழக்கப்பட்டவன். எதிரிக்காக எப்போதும் குறுங்கத்தி வைத்திருப்பவன்.
பிறர்மனை நோக்காப் பேராண்மை அவனுக்கில்லை. அவன் மனைவிக்கும் அவன் எந்த எல்லைக்கோடுகளையும் வரைந்தது இல்லை. முதல் நாள் இரவு வீட்டுக்கு வந்துவிட்டுப் போன கல்லூரி மாணவர்கள் எப்படி இருந்தார்கள் என்று மனைவியிடம் கேட்கிற கணவனும், அதற்குச் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிற மனைவியும் நடுத்தர வர்க்க வாசகர்களுக்குப் புதிது. அப்படி புதிது என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்பட்டுக் கொள்கிற இந்தச் சமூகத்தின் மனோபாவத்தையும் கேலிச் சிரிப்புடனேயே பதிவுசெய்வது ஜி. நாகராஜனின் எழுத்து.
மனித மனம் விகாரங்கள் நிறைந்தது. மன விகாரங்களை எங்கெல்லாம், எந்தெந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்த முடியும் என்பதில்தான் ஒவ்வொரு மனிதனும் வேறுபடுகிறான். பணம் இருக்கிறவன் மறைவிலும், இல்லாதவன் வெளிப் படையாகவும் அரங்கேற்றுகிறான். அதை நுட்பமாகச் சொல்லும் ஜி. நாகராஜனின் லாகவம்தான் வாசகனை கட்டிப்போட்டுவிடுகிறது.
கந்தனின் உலகத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்கில் தான் மேல் வரிசையில் இருக்கிறவன் வாழ்கிறான், அடித்தட்டில் இருக்கிறவன் சாகிறான்.
இறந்துபோன தன் மகளைக் குறித்தும், ஓடிப் போன தன் மகனைக் குறித்தும் அழுது தீர்க்காத தந்தை அவன். கைம்பெண் ஒருத்தியிடம் இருந்து கைக்குழந்தையை வாங்கிக்கொண்டு, அவளுக்குப் பூ வாங்கித்தந்து தொழிலுக்கு அனுப்புகிறவனும், வயிற்றைச் சரித்துக் கொண்டு நிற்கிற சிறுமியொருத்திக்கு அதைச் ‘சுத்தப்படுத்துகிற’ மருத்துவரைப் பரிந்துரைக்கிறவனும் அவனே.
ஒப்பந்தம் எழுதிக் கொண்டு வருடக் கணக்கில் பணக்காரர்களுக்குத் தொடுப்பாக இருக்கும் மேல்தட்டுப் பெண்களும், தினம் தினம் புதுப்புது வாடிக்கையாளர்களை சந்திக்கும் சாக்கடை சூழ்ந்த குடிசையில் குடியிருக்கும் பெண்களும் கந்தனுக்கு ஒன்றுதான். கந்தனின் பயணத்துக்கு இடையிடையே வாழ்க்கையையும் சமூகத்தையும் புரட்டிப்போட்டுவிடக் கூடிய சிந்தாந்தம் பேசுகிற, கொடிப்பிடிக்கிற ஆசாமிகளும் நடமாடத்தான் செய்கிறார்கள்.
இத்தனை நடந்தும் எந்த மாற்றமும் இல்லாமல்தான் கந்தனுக்கு அன்றைய பொழுது முடிகிறது. விடிகிற காலையைப் பற்றி கந்தன் கவலைப்படவில்லை. அவன் பிழைத்துக் கிடந்தால் நாளை மற்றுமொரு நாள்தான்.

பிருந்தா சீனிவாசன்
நன்றி: தி இந்து

ஜி.நாகராஜன் நூல்களை இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/?page=search&serach_keyword=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D

No comments:

Post a Comment