Friday 10 October 2014

சாயாவனம்

1963-ம் ஆண்டில் நானும் கந்தசாமியும் மாலை நேரத்தில் ஜெமினி ஸ்டுடியோ எதிரில் இருந்த ‘டிரைவ் இன் உட்லண்ட்ஸ்' ஓட்டல் இயங்கிய தோட்டத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிச் கொண்டிருப்போம். அது தோட்டக்கலை சொசைட்டிக்கு சொந்தமான இடம். அப்பகுதி காடுபோல் தோற்றமளிக்கும்.
நிறைய மரங்கள். நெடிதுயர்ந்த மரங்கள். அடர்ந்த கிளைகளையும், இலைகளையும் கொண்ட மரங்கள், பருமனான மரங்கள் என பலதரப்பட்ட மரங்கள் இருந்தன. நடுப்பகல் நேரத்தில் சூரியஒளி தரையில் ஓவியம் போல புள்ளிகளாகச் சிதறிக் கிடக்கும். மரங்கள் சூழ்ந்து நிழல் பகுதியாக இருந்தது என்பதால் அந்த ஓட்டலில் காலை முதல் இரவுவரை கூட்டம் களை கட்டும்.
ஓட்டலைக் கடந்து உள்பக்கம் நடந்தால் சற்றே அகலமான ஒற்றையடிப் பாதை தோட்டம் முழுவதும் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருக்கும்.
தோட்டத்தில் பலன் தரும் மரங்கள் எதுவுமே இல்லை. எல்லாம் நிழல் தரும் மரங்கள்தான். குல்மோகர், காஷியோ ஜவானிகா போன்ற சில அயல்நாட்டு மரங்களும் இருந்தன. காலை நேரங்களில் வண்ணப் பூக்கள் தரையில் உதிர்ந்து படர்ந்திருப்பது பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். அதேபோல் மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கியிருப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கும். நகரின் மையப் பகுதியில் இருந்த அந்த இயற்கைச் சூழ்நிலையை எத்தனையோ பேர்கள் ரசித்திருப்பார்கள். ஏதோவொரு காரணத்திற்காக அந்தச் சூழ்நிலையும், மரங்கள் அடர்ந்த தோட்டமும் அவர்களின் மனதில் அழியா இடம் பெற்றிருக்கும்.
தோட்டத்தில் காட்டாமணக்கு, நுணா, ஆடாதோடை, நொச்சி, ஊமத்தை, குப்பை மேனி, எருக்கு ஆகியவற்றோடு புதர்போல கொடிகள் மண்டிக் கிடந்தன. குத்துமணிக் கொடிகளையும், தொட்டாச்சிணுங்கியையும் காண முடிந்தது, ஒதிய மரத்தின் பாதி மரம் வரை கொடிகள் பின்னிப் படர்ந்திருந்தன.
சில நாட்களில் இலுப்பைப் பூ பூத்திருக்கும் போது ஈரக் காற்றில் கலந்து வரும் வித்தியாசமான வாசம் மனதைச் சுண்டியிழுக்கும்.
நாங்களும் எங்களைப் போன்றவர்களும் உட்கார்ந்து பேசிய இடங்களில் புல் மட்டும் இருக்கும் அடர்த்தியான செடிகள் எதுவும் இருக்காது. மழைத் தூறல் விழுந்து விட்டால் உட்கார முடியாது. அந்தி சந்தி நேரத்திற்குப் பிறகும் கொசுக் கடியையும், சில் வண்டுகளையும் சமாளிக்க இயலாது!
1963ல்தான் சா. கந்தசாமி, சாயாவனம், நாவலை எழுதத் திட்டமிட்டார். தோட்டக்கலை தோட்டத்தில் சந்தித்த அந்த நாட்களில் தான் எப்படி எழுத எண்ணியுள்ளார் என்பதை விரிவாகப் பேசினார்.
சாயாவனம் எனும் மரங்களடர்ந்த ஒரு வனப்பகுதி கரும்பாலை நிறுவுவதற்காக அழிக்கப்படும்போது எதிர்கொள்ளும் சிரமங்களையும், தீ வைத்து ஒரு பகுதியை எரித்து அழிக்க நினைக்கையில் அது திசை திரும்பிச் சேதம் விளைவிப்பதையும் தீப்பற்றி எரியும் போது எல்லோரும் அவர்களறிந்த தீப் பற்றிய சம்பவங்களைப் பேசுவது பற்றியும் பேசினார்.
ஒரு வனம் அழியும் வரலாறு பற்றி எழுதப் போகும் நாவல் பற்றி நகரின் மையப்பகுதியில் இருந்த காடு போன்ற பகுதியில் அமர்ந்து பேசியதுகூட ஆபூர்வமான ஒற்றுமைதான்.
சந்திக்கும் நாட்களில் அதுவரை அவர் எழுதிய பக்கங்களைப் படித்துக் காண்பிப்பார்.நாவல் வெளிவந்தவுடன் அதை இனங்கண்டு தமிழில் நல்ல நாவல் என்ற அபிப்பிராயத்தை முதலில் பதிவு செய்தவர் அசோக மித்திரன்.
திரு.சி.சு. செல்லப்பாவிடம் ‘சாயாவனம்' நாவல் பற்றி நான் பேசியபோது அவர் நாவலின் மையக் கருத்தைப் பற்றி எதுவும் பேசாது, ஒரு இடத்தில் வனம் என்றும், மற்றோர் இடத்தில் காடும் என்றும், வேறோர் களம் பற்றி ஒரு தெளிவில்லாமல் உள்ளது; வனம், காடு, ஆரண்யம் என்பதற்கெல்லாம் அதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. அவை தெரியாது எழுதியிருப்பது தவறு என்றார். அப்படியானால் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக ‘வனம்' என்றோ, ‘காடு' என்றோ மாற்றிவிட்டால் என்னவாகும் என்றேன். அப்போது அவருக்கு என்மீது கோம்பதான் வந்தது.
சாந்தப்பன் கந்தசாமி என்பது சாயாவனம் கந்தசாமி என்று அழைப்படுமளவிற்று முதல் நாவல் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தது.
‘சாயாவனம்' அழிக்கப்பட்டு கரும்பாலை வந்தது போல சென்னை மாநகரின் மையப்பகுதியில் தோட்டக்கலை சொசைட்டியின் காடுபோல செழித்திருந்த மரம், செடி, கொடிகளின் பெரும்பகுதி, குறிப்பாக நானும் சா. கந்தசாமியும் அமர்ந்து பேசிய பகுதி, அழிக்கப்பட்டு ‘அண்ணா மேம்பாலம்' வந்தது என்பதும் வரலாறாகிவிட்டது. இன்று அப்பகுதியைப் பார்க்கும்போது பழைய நினைவுகளே பசுமையாக படர்ந்து நிற்கிறது.
- நா. கிருஷ்ணமூர்த்தி

நன்றி: தி இந்து தமிழ்

சாயாவனம் நாவலை இணையத்தில் ஆர்டர் செய்ய: http://www.udumalai.com/index.php?page=search&serach_keyword=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

No comments:

Post a Comment