Thursday 16 October 2014

ஆர்.கே. சண்முகம் செட்டியார்


சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்பவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.

பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். அவர்கள்: நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; சட்ட அமைச்சர் அம்பேத்கர். அம்பேத்கர் தனக்கு நிதி போர்ட்ஃபோலியோ கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று ஓரிடத்தில் படித்தேன். (கிறிஸ்டோஃபர் ஜாஃப்ரிலாட் எழுதிய Dr Ambedkar And Untouchability: Analysing And Fighting Caste என்ற புத்தகத்தில் என்று நினைக்கிறேன்.) ஆக, அம்பேத்கரை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கொண்டுவந்து இவருக்கு நிதித்துறை என்னும் மிக முக்கியமான பொறுப்பை நேரு கொடுக்கக் காரணம் என்ன? இவர் பொருளாதாரத் துறையில் என்ன சாதித்திருந்தார்?

அமைச்சரவை தொடர்பாக காந்தியிடம் ஆலோசிக்காமல் நேருவும் படேலும் முடிவெடுத்திருக்க மாட்டார்களே? காந்திக்கு சண்முகத்தைத் தெரியுமா? காந்தி என்ன சொல்லியிருப்பார்?

நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பியது ஏன்? காங்கிரஸ்காரர்கள் என்ன கலகம் செய்து இவரைத் துரத்தினர்?

இந்த மனிதர் பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள் மிகக் குறைவே. சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஒரு பிஎச்.டி ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் ஜனரஞ்சக வடிவத்தை தமிழ்ப் புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிடப் போகிறது.

அதனை எடிட் செய்யும்போதுதான் இந்த மனிதரின் பல குணங்கள், சாதனைகள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாளர்களுல் இவர் ஒருவர். ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை.

இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்னை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் முகமது அலி ஜின்னா போல, ஆங்கிலேயர்களுடன் கருத்து வேற்றுமை இருந்தாலும், தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆங்கில அரசு சார்பில் இவருக்கு ஏதாவது ஒரு பதவி இருந்துவந்தது. ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்கவேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். உதாரணமாக அட்லாண்டிக் பிரகடனம் தொடர்பாக இவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுடன் பேசியது.* (இதுபற்றி தனியாக எழுதவேண்டும்.)

இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தரவேண்டிய Balance of Payment சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

கோயமுத்தூர் பகுதியை தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் மிக முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கோவையில் SIMA, SITRA போன்ற அமைப்புகளை உருவாக்கியதில் இவருக்குத்தான் முக்கியப் பங்குள்ளது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். (உரையா, ஆய்வுக்கட்டுரையா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பிரதி கிடைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.) தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார்.

மேலே நான் சொன்னது மிகச் சில துளிகளே. இவரது வாழ்க்கையில் தெரிந்துகொள்ள சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளன.

தனிவாழ்வில் நிறைய சொத்து சேர்த்துள்ளார். பொதுவாழ்வில் நிறைய சாதித்துள்ளார். ஒருவிதத்தில் பார்த்தால் உலகளாவிய பெருமை பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ஆனால் இவர்மீது வெளிச்சமே விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

- பத்ரி சேஷாத்ரி

(இன்று அவது 122-வது பிறந்த தினம்) 

No comments:

Post a Comment