Tuesday, 7 October 2014

நிழல் வீரர்கள் -ராவின் சொல்லப்படாத கதைகள்!

இந்திய உளவுத்துறையான ராவில் அதன் துவக்கத்தில் இருந்து தொன்னூறுகள் வரை பணியாற்றிய ராமன் அவர்களின் நினைவலைகளான The Kaoboys of R&AW: Down Memory Laneவாசித்து முடித்தேன். இந்திய உளவுத்துறை சீனப்போரில் இந்திய இன்டலிஜென்ஸ் பீரோவின் தோல்விக்கு பின் உருவானது. அதன் சாதனைகள்,தவற விட்ட தருணங்கள்,பிரதமர்கள் அதை நடத்திய விதம் எல்லாம் நூலில் பேசப்பட்டு இருக்கிறது. ஒரளவுக்கு இந்திய அரசியல் வரலாற்றை பற்றிய புரிதல் இருந்தால் நூல் இன்னமும் சுவையாக இருக்கும்.
கவ் எனும் உயர்ந்த மனிதரைத்தான் ராவின் தந்தை என்று அழைக்க வேண்டும். அது உருவான காலத்தில் இருந்து பத்தாண்டுகள் வரை அதன் தலைவராக இருந்த அவர் மிகக்குறுகிய காலத்தில் வங்கதேசம் உருவாவதில் முக்கிய பங்காற்றினார். மிசோ மற்றும் நாகலாந்து இயக்கம் ஆகியவற்றுக்கு சீனா கொடுத்த ஆதரவை எப்படி தடுத்தார்கள் ரா அமைப்பு என்பதும்,அடிப்படை தர்க்கத்தை கொண்டு ராவின் தவறான தகவலை எப்படி மானேக்ஷா சரியாக கண்டறிந்தார் என்பதும் சுவையான அத்தியாயங்கள். கவ் அவர்களின் பெயராலே ராவின் அதிகாரிகள் கவ்பாய்ஸ் என்று வழங்கப்படுகிறார்கள்.
ஜியா யுல் ஹக் மற்றும் மொரார்ஜி தேசாய் அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்கள். பாகிஸ்தானில் அப்பொழுது ஆழமாக இந்தியா ஊடுருவி இருந்தது. பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் எப்படி இறங்கி உள்ளது அதன் பணிகள் என்னென்ன என்று துல்லியமான தகவல்கள் இந்தியா வசம் அப்பொழுது இருந்தன. சிறுநீர் குடித்து எப்படி தன் உடல்நிலையை கவனித்து கொள்கிறார் மொரார்ஜி தேசாய் என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தனக்கு பாகிஸ்தானின் அணு ஆயுதம் சார்ந்த முன்னெடுப்புகள் தெரியும் என்று உளறி இருக்கிறார் மொரார்ஜி தேசாய்

வெளிநாட்டு பயணம் போய் விட்டு விமானத்தில் ஏறிய இந்திரா உடன் வந்திருந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் எண்ணற்ற டிவி செட்களை வாங்கி இருப்பதை கண்டிருக்கிறார். இந்தியா வந்து இறங்கியதும் எல்லாரையும் சுங்க பரிசோதனைக்கு உள்ளாக்கி அதற்கான வரி செலுத்திய பின்னரே அனுமதித்து உள்ளார்கள். எக்கச்சக்க ஊழல் ராவில் இருந்தது என்பதும்,மேல்நிலை அதிகாரிகள் தங்கள் உறவினர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டார்கள் என்றும்,அதே போல எண்பதில் ஒரு ஸ்ட்ரைக் செய்தார்கள் ரா ஊழியர்கள். அதற்கு பின்னர் அவர்களுக்கு ஸ்ட்ரைக் செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. என்றும் விவரிக்கிறார் ராமன்.

எப்படி இந்திராவின் மரணத்தை தடுக்க உளவுத்துறை தவறியது என்று விவரிக்கிற பொழுது கொஞ்சம் வியப்பாகவே இருக்கும். இந்திராவின் உடல் அளவை நேரடியாக கேட்க யாருக்கும் தைரியம் இல்லாமல் அவரின் அளவுள்ள ஒருவரைக்கொண்டு குண்டு துளைக்காத ஆடை அவருக்கு தயாரிக்கப்பட்டு தரப்பட்டு இருக்கிறது. அதை அணிந்து வியர்க்கிறது என்று இந்திரா அணிய மறுத்திருக்கிறார். அதற்கு பின்னர் தொலைபேசியை உபயோகப்படுத்தாமல் சீக்கிய வீரர்கள் காரியத்தை முடித்து இருக்கிறார்கள். இந்திய வானொலிக்கு முன் இந்திராவின் மரணத்தை அறிவித்தது பி பி சி. இந்திராவை அழைத்து செல்ல அப்பொழுது ஒரு ஆம்புலன்ஸ் கூட உடனடியாக இல்லை. அதன் விளைவாகவே சிறப்பு பாதுகாப்பு படை பிரதமருக்கு எழுந்தது. அது வரை பிரதமருக்கு என்று தனிப்படை இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்
சீக்கியர்களின் காலிஸ்தான் கோரிக்கைக்கு எப்படி பாகிஸ்தான் நீர் வார்த்தது என்பது சுவையான அத்தியாயம். பெனசீர் காலத்தில் தான் அது நிறுத்தப்பட்டு இருக்கிறது. என்றாலும் அது சிந்தி பகுதியில் ரா ஏற்படுத்திய குழப்பங்களால் என்பதும் அதே சமயம் ஜிஹாதி தீவிரவாதிகளை காஷ்மீரில் ஏகத்துக்கும் அவர் வளர்த்து விட்டார் என்பதையும் குறிக்கிறார் ஆசிரியர். காலிஸ்தான் தீவிரவாதிகளின் முக்கிய ஆள் ஒருவரை விமானத்தை கடத்திய பொழுது எப்படி பண்டாரி எனும் இந்திய அதிகாரி தன் தொடர்புகளின் மூலம் விமானத்தோடு ஹைஜாக் செய்தார் என்பது வெகு சுவாரசியம்.

அதேபோல பொம்மை துப்பாக்கியை வைத்தெல்லாம் விமானத்தை கடத்தி இருக்கிறார்கள் காலிஸ்தான் ஆட்கள். அயல்நாட்டுக்கு செல்லும் எல்லா செய்திகளையும் நடுவில் புகுந்து படித்தல் பல சமயங்களில் எப்படி உபயோகமாக இருந்தது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்காவிடம் பாகிஸ்தான் எப்படி தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று டைமர் ஆதாரங்களை ராமன் தரப்போக அவற்றை கச்சிதமாக அழித்து விட்டு சிரித்து உள்ளது அமெரிக்கா.

சீக்கிய பயங்கரவாதத்துக்கு எப்படி ஆதரவு குறைந்தது என்பதே சுவையானது. இந்திரா எப்படி வன்முறையை பொற்கோயிலில் தவிர்க்க பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து நடத்தினார் என்பதை முழுமையான பதிவுகளோடு ராவிடம் ஒப்படைத்து உள்ளார் ஆசிரியர். ராஜீவ் கில் பொறுப்புக்கு வந்த பொழுது மீண்டும் பொற்கோயில் தீவிரவாதிகள் கட்டுபாட்டுக்கு போன பொழுது உள்ளே அவர்களை இருக்க வைத்து உணவு முதலியவற்றை கட் செய்து முற்றுகை நடத்திய பொழுது கோயிலை கழிப்பறையாக பயன்படுத்தியது முக்கிய தலைவன் ஒருவன் மது மற்றும் மாது என்று வாழ்ந்தது ஆகியன முக்கியமாக அவ்வியக்கத்தை நீர்த்துப்போக செய்துள்ளது.

ராஜீவின் படுகொலை,மும்பை குண்டு வெடிப்புகள் ஆகியவற்றில் ரா கோட்டை விட்டது,ராஜீவை மரத்துக்கு பின் நின்று கொல்ல இருந்த ஒருவனின் துப்பாக்கி வேலை செய்யாமல் போனதால் அவர் தப்பியது எல்லாம் திக் திக் பக்கங்கள்.

எல்லா பிரதமருக்கு ராவை விட சில மூலங்கள் இருந்தன,வி.பி சிங்கிற்கு பெனசீர் ஆட்சி கவிழும் என்று முன்னமே தெரிந்து இருந்தது சந்திரசேகருக்கு நேபாளின் நிலைமை ராவை விட முன்னமே புரிந்து இருந்தது. இந்திராவுக்கு இலங்கையில் என்ன நடக்கும் என்று துல்லியமாக தெரிந்திருந்தது என்றும் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

ரா எப்படி இப்பொழுது வலிமை இழந்துள்ளது என்று ஆசிரியர் விவரிக்கிறார். இறுதியாக இயல்பான ஒரு நிகழ்வை சொல்லி முடிப்போம். ராவின் அதிகாரிகளுக்கு பெருந்தொல்லை ஐ எப் எஸ் அதிகாரிகளின் மனைவிகள். அவர்களுக்கு இவர்கள் ரா அதிகாரிகள் என்று தெரிந்தால் அந்த நாட்டுக்கு மேட்டர் தெரிந்து விடும். கூடுதலாக,சில அம்மணிகள் பார்டியில் இவர் ராவின் ஆள் என்று கைதூக்கி காட்டி விடுவார்களாம்.

-நன்றி: பூ. கொ. சரவணன்

சுவாரஸ்யமான இந்நூலை இணையத்தில் வாங்க:
http://www.udumalai.com/index.php?prd=nilal%20virargal:oru%20ra%20athigariyin%20ninaivukkurippugal&page=products&id=8124

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய: 73 73 73 77 42

No comments:

Post a Comment