Friday 12 December 2014

அமைதி என்பது வெறுமை அல்ல

அஞ்சலி - வீணாபாணி சாவ்லா
‘ஆதிசக்தி’ எனும் பெயர் தாங்கிய கதவுகளைத் தாண்டி உள்ளே நுழையும்போதே எவரையும் தொற்றிக்கொள்ளும். சென்ற வாரத்தில் நம்மை விட்டு நீங்கிச் சென்ற வீணாபாணி சாவ்லா என்ற அந்த மகத்தான கலைஞர் உருவாக்கிய பல கலைப் படைப்புகளில் ஆதிசக்தியும் ஒன்று. அரங்கக் கலைக்கான பரிசோதனைக் கூடமான ஆதிசக்தியில் பல அரிய ஆக்கங்களை அவர் உருவாக்கினார். வினய் குமார், அரவிந்த் ராணே, நிம்மி ரபேல், சுரேஷ் கலியத் எனப் பிரமாதமான கலைஞர்களை இணைத்து அவர்களுடன் நாடக மொழியின் நுட்பங்களை வகைபிரித்து வளர்த்தெடுத்தார்.
வீணாபாணியின் பயணம் அவருடைய தேடலின் வடிவத்திலேயே நிகழ்ந்தது. அவருடைய ஒருமுகப்பட்ட காதலாக நாடகமும் நிகழ்த்துகலை வடிவமுமே இருந்தன. இந்தியா சுதந்திரமடைவதற்குச் சில மாதங்கள் முன்பு மும்பையில் பிறந்த வீணாபாணி டேராடூன் வெல்ஹாம் பள்ளியில் படிக்கும்போது நாடக உலகம் அவருக்கு அறிமுகமானது. ஷேக்ஸ்பியரின் படைப்புகளைப் படித்ததும் ஷேக்ஸ்பியர் நாடகக் கம்பெனியின் ஆக்கங்களை அவர் பார்த்ததும் அங்கேதான். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் தத்துவத்தில் இன்னுமொரு முதுகலைப் பட்டமும் பெற்ற அவர் மும்பையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரிய வித்யா மந்திரில் வரலாறு மற்றும் இலக்கிய ஆசிரியையாகப் பணிசெய்யத் தொடங்கினார். பள்ளி ஆசிரியையாகக் குழந்தைகளுக்கு நாடகங்கள் இயக்கியபோது தன்னுடைய ஆதர்சம் நாடகம்தான் என உணர்ந்தார்.
மும்பையின் கலைச்சூழல்
அந்தக் காலகட்டமும் முக்கியமானது. மும்பையில் அப்போது பல பரிசோதனை / மாற்று நாடக முயற்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. சத்யதேவ் டுபே, அமோல் பலேகர் மற்றும் பாதல் சர்க்காரின் மராத்திய மொழிபெயர்ப்பு வடிவங்கள் அங்கு நிகழ்த்தப்பட்டுவந்தன. தீவிர யதார்த்த பாணியிலான விஜய் டெண்டுல்கரின் முக்கியமான நாடகங்களும் அரங்கேறின. வீணாபானி யதார்த்தவாத அரங்கியலின் ரசிகை அல்ல. அவருக்கு உலக யதார்த்த அரங்கியல் நடிப்பின் தந்தையான ஸ்டானிஸ் லாவ்ஸ்கியின் உணர்வைப் பிரதிபலிக்கும் நடிப்பு முறைமையோடு முரண்பாடு இருந்தது. இந்தக் காலகட்டத்தில் உலகின் பிற பாகங்களிலும் ஸ்டானிஸ் லாவ்ஸ்கியின் முறைக்கு மாறான முறைமைகளைக் கண்டெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன.
முதல் நாடகம்
1978-ல் பள்ளியாசிரியை வேலையை விட்டுவிட்டு வீணாபாணி ஓராண்டுக் காலம் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்தார். மும்பை திரும்பியதும் அப்போது தொடங்கப்பட்டிருந்த பிருத்வி அரங்கின் வரவேற்பு மேலாளராகச் சேர்ந்தார். அவர் இயக்கிய முதல் நாடகமான சோஃபாக்ளஸின் ‘ஈடிபஸ்’ நாடகம் பிருத்வியில்தான் அரங்கேறியது. மேலும் செக் நாடகாசிரியர் டாம் ஸ்டோப்பார்டின் நாடகம் ஒன்றையும் கிரேக்கச் செவ்வியல் நாடகமான ‘ட்ரோஜன் பெண்கள்’-ஐயும் அங்கு இயக்கி நிகழ்த்தினார். நான்காவதாக அரவிந்தரின் காவியச் செய்யுளான சாவித்ரியிலிருந்து ‘ஒரு மகத்தான விடியல்’ என்ற பனுவலை உருவாக்கினார். அந்த நாடகம் அவரை மீண்டும் பாண்டிச்சேரிக்கும் அரவிந்தர் ஆசிரமத்திற்கும் கொண்டுவந்து சேர்த்தது.
பாண்டிச்சேரியில் வீணாபாணி ஆதிசக்தி அரங்கப் பரிசோதனை மையத்தை 1994-ல் தொடங்கினார். ஒரு ஆதரவாளர் அளித்த தரிசு நிலத்தில் வீணாபாணியும் அவருடன் நடிகராக அப்போதிலிருந்தே இணைந்திருக்கும் வினய் குமாரும் செய்த முதல் வேலை மரங்களை நடுவதுதான். மிகச் சிறப்பான உள்ளூர் கட்டுமான முறைகளைப் பயன்படுத்திச் சிறிது சிறிதாக ஆதிசக்தி வளாகம் எழுந்து நின்றது.
நாடக அரங்கில் மரபுவழி நிகழ்த்து மொழி ஒருபுறமும், நவீன மேற்கத்திய நாடக மொழி இன்னொருபுறமும் நிலவிவந்தன. நவீன நாடக மொழியோடு செயல்பட்டுவந்த வீணாபாணி மரபுவழி ஆட்டக் கலைகளை அறிந்துகொள்ளத் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். வங்களாத்தின் மயுர்பஞ்ச்சாவ், களரிப்பயட்டு, கேரளத்தின் குடியேட்டம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
அரங்கியல் மொழியொன்றை வடிவமைக்கும் முயற்சியில் வீணாபாணி இந்திய நிகழ்த்துக்கலை களையும் மேற்கத்திய பயிற்சிகளையும் பயின்று அதிலிருந்து ஒரு இந்திய நவீன நாடக மொழியின் அரிச்சுவடிகளை உருவாக்கினார். அரங்க வெளிப் பாட்டின், அசைவின் ஆதாரமாக சுவாசத்தை அவர் கண்டார். குடியேட்டக் கலைப்பயிற்சி தன்னை இவ்விடத்திற்குக் கொண்டுசென்றதாக அவர் பகிர்ந்துள்ளார். களரியின் உடல் கட்டமைப்பு மற்றும் நெகிழ்ச்சி, உணர்வுகளை உச்சமாக வெளிப்படுத்தும் குடியேட்டத்தின் முக பாவனைகள், தாள லயம், ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியின் குரல் பயிற்சி உத்திகள் எனப் பல உத்வேகங்கள் வீணாபாணியின் நாடக மொழியில் மின்னுகின்றன.
மற்றவர் சுதந்தரத்தை மதிக்கும் பண்பு
எனினும் அவரது ஆன்மிகத் தேடலும், அன்னையுடன் அவர் பெற்ற அனுபவத்தின் வழி உணர்ந்த தீவிர தன்னுணர்வுமே அவரது நாடகங்களின் ஆழமான சாரம் என்று சொல்லலாம். தங்களுடைய பல ஆண்டுக்காலத் தீவிர ஆராய்ச்சியின் பயனைப் பலருடன் பகிர்ந்துகொண்ட வீணாபாணி, இந்த ஆன்மிகத் தேடலைப் பயிற்சி பெற வருபவர்களின் தோள்களில் சுமத்தியதில்லை.
தீவிரப் பயிற்சியால் மெருகேற்றப்பட்ட ஒப்பனை களற்ற ‘ஆதிசக்தி’ குழு நடிகர்களின் உடல்மொழி காண்பவரை அரங்க வெளியின் படைப்பூக்கம் மிக்க உச்சத்திற்கு இட்டுச்செல்லக்கூடியவை. தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு நாடக மொழியொன்றை அனைவரும் புரிந்துகொள்ள ஏதுவாய் உருவாக்கி, அதை அனைவருக்கும் அளிக்க நிறுவனம் ஒன்றையும் உருவாக்கிய மகத்தான பங்களிப்பு வீணாபாணியினுடையது. மரணம் என்பது ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்வது போன்றது என்று அவர் கூறியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் இல்லாத இந்த அறையில் இருக்க கடினமாயிருப்பதாக அவருடைய மாணவர் ஒருவர் பதிவாக இட்டுள்ளார்.
இருபதாண்டுகளுக்கு முன்பு தரிசு நிலமாகக் கிடந்த ஆதிசக்தி வளாகம் இன்று பூத்துக் குலுங்கும் ஒரு குளிர்ச் சோலை. அவர் தேடலின் வழியாய் விளைந்த நாடக மொழி உலகெங்கிலும் இருந்து பலர் வந்து பயிலும் ஒரு முக்கியமான கலை வழி. அவரால் பயன்பெற்ற கலைஞர்களும் நடிகர்களும் அவர் நட்டுவைத்த மாமரங்களைப் போல நாடக உலகில் நிலைத்து அதற்கு மெருகேற்றுவார்கள் என்பதுதான் உடலும் உள்ளமும் ஒருசேரக் கூர்மையாய், தீவிரமாய் அன்பாய் இயங்கிய வீணாபாணி என்னும் மகத்தான கலைஞருக்குப் பெருமைதரும் அஞ்சலியாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment