Monday 1 December 2014

மாயக் கலைஞானி

ஓட்டோடு ஒட்டி உறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான், தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம், மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன.
காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாக ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதை வெளிக்குள் காணாமல் போகிறான். அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தை விட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகரும் உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவ முயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’ ந.பிச்சமூர்த்தியின் புதுமை முயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன.
யாப்பின் அழகில் லயித்துக் கவிதைகள் படைத்த ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் வடிவ ஒழுங்கோடே படைத்தார். இருள்மண்டிக் கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாகச் சிலருக்கு ந.பி.தெரிந்தார். இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார். உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.
இருளும் ஒளியும் பிச்சமூர்த்திக்குப் பிடித்த எதிரிணைகள். தளர்ந்து கிடைப்பவனை எழுச்சியோடு எதிர்கொள்கிறார்… “உயிர்த்துடிப்போடு வாழ்பவனே!’ என்று அழைத்து தன்னம்பிக்கை ஊட்டுகிறார். கார்த்திகை மாதத்தில் தெருமுழுக்க வரிசையாய் விளக்குகள் வைத்ததைப் போல் தொடர்ச்சியாக அவர் எழுத்துகள் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி வாசகனை அடுத்தடுத்து சுவாரசியமாய் நகர்த்துகின்றன. சோகம் வடியும், இரவு விடியும், ஒளியால் வாழ்வு நிறையும், வெற்றி கைகூடும் என்ற நம்பிக்கை தரும்வகையில்
“ஜீவா விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்செய்யும்?
அமுதத்தை நம்பு ஒளியை நாடு
கழுகுபெற்ற வெற்றி நமக்குக் கூடும்.”
என்று ஒளியின் உளியில்
இக்கவிதைமொழியைச் செதுக்குகிறார்.
இந்தியத் தத்துவமரபின் மையப் புள்ளியாகத் திகழும் இருள், ஒளி எனும் எதிரிணைகளை ந.பிச்சமூர்த்தி இங்குக் குறியீடாய் எடுத்தாள்கிறார்.
இயற்கையைக் கொண்டாடிய அழகியல் தாசனாய் ந.பிச்சமூர்த்தி கவிதைகளைப் படைத்துள்ளார். 1934 –ம் ஆண்டு மணிக்கொடி இதழில் அவர் எழுதிய ‘காதல்’ என்ற முதல் கவிதை குறிப்பிடத்தக்கது.
மலர் மலர்வதைப் போல எழுதுவது ந.பி.க்கு இயல்பான அனிச்சைச் செயல். மகாகவி பாரதிக்குப் பிறகு இலக்கியச் செழுமையோடும் மொழி ஆளுமையோடும் படைப்பிலக்கியம் படைத்தவர் ந.பிச்சமூர்த்தி. தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தையாகப் புதுக்கவிதை தீபத்தை ஏற்றிவைத்தார்.
இந்தியப் பண்பாட்டின்மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகத் தன் சிறுகதைப் பாத்திரங்களை உயர்ந்த லட்சிய நோக்குடையவையாகப் படைத்தவர். ‘முள்ளும் ரோஜாவும்’ அவரது சிறந்த சிறுகதை. பதினெட்டாம் பெருக்கு, மோகினி, மாங்காய் தலை, காபூலிக் குழந்தைகள், விஜயதசமி ஆகியன அவரது குறிப்பிடத்தக்கச் சிறுகதைகள். திருமணமாகியும் அவர் மனம் துறவுநிலையை விரும்பியதும், அதுகுறித்து பகவான் ரமணரிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவர் ந.பி.யை இல்வாழ்க்கைக்குத் திரும்ப அறிவுறுத்தியதும் ந.பிச்சமூர்த்தியின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.
எந்தச் செம்புக்குள்ளும் அடக்க முடியாத மகாநதியான ந.பி.வாழ்வையும் அவ்வாறே எதிர்கொண் டார். உணர்ச்சிப்பூர்வமான வரிகளைத் தன் மனதின் அடியாழத்திலிருந்து தந்தார். புதுக்கவிதையின் தந்தையாய் அவர் படைத்த புதுக்கவிதைகள் அக்காலத்தில் யாப்புசார்ந்து எழுதிய புலவர்களுக்குக் கலகத்தைத் தந்தன. அவர் மீதான எரிச்சல் அவர் படைப்பிலக்கியங்கள்மீது அவர் வாழ்ந்தகாலத்தில் காட்டப்பட்டது. அறிவும் ஆராய்ச்சியும் தேடலும் புதுமையை ஏற்பதையும் ஒத்துக்கொள்ளாத வாசகனால் எந்தப் படைப்பையும் புரிந்து கொள்ளமுடியாது என்ற கருத்தையே அவர் கொண்டிருந்தார். ந.பிச்சமூர்த்தி முற்றுப்புள்ளி அல்ல இன்றும் தொடர் புள்ளிதான்; பலரும் தொடரும் புள்ளிதான்.
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர். தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com

No comments:

Post a Comment