Tuesday 9 December 2014

ஜெயமோகனின் “ரப்பர்”

இந்திய அரசாங்கம் மட்டும் கிட்டதட்ட 6,15,200 ஹெக்டேரில் (1 ஹெக்டேர் = 2.47 ஏக்கர்) ரப்பர் தோட்டம் சாகுபடி செய்கிறது. இதில் கேரளாவும், தமிழ்நாடும் சேர்ந்து 5,21,973 ஹெக்டேரில், அதாவது மொத்த ரப்பர் சாகுபடியில் கிட்டதட்ட 85 விழுக்காடு, தங்கள் பிராந்தியாத்தின் நிலங்களை ரப்பருக்காக வழங்கியுள்ளது. இதில் 82 சதவிகிதம் கேரளாவிலும் 3 சதவிகிதம் தமிழ்நாட்டிலுமாக அரசாங்கம் ரப்பர் பயிர்செய்கை புரிந்திருக்கிறது. அதாவது கேரளாவில் 5,02,740 ஹெக்டேரிலும் தமிழநாட்டில் 19,233 ஹெக்டேரிலும் ரப்பர் சாகுபடி நடக்கிறது. இது போக தனியார் நிறுவனங்கள் எவ்வளவு ரப்பர் தோட்டங்கள் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

காட்டை அழித்து ரப்பர் தோட்டங்களாக மாற்றுவது ஒரு சுற்றுசூழலிய பிரச்சனை.

ரப்பர் தோட்டங்களில் பறவைகள் வசிப்பதில்லை.
நிலத்தடி நீர், மற்றும் காட்டை அழிப்பத்தனால் இயற்க்கை நீர் உற்பத்தி முதலியன குறைகிறது.
நதிகளுக்கு தண்ணீர் வளமாக வருவதில்லை.
ரப்பர் போன்ற ஒருபயிர் தோட்டங்களால் கேரளாவில் மட்டும் 30% சதவிகித இயற்க்கை காடுகள் அழிந்துவிட்டது.
பதினைந்து முதல் 20 சதவிகித பருவமழை குறைந்துவிட்டது.
ஒரு பயிர் அபிவிருத்தியினால் மண் வளமும் நீர்வளமும் குறைகிறது.
இயற்கை காடுகளை அழிப்பதனால் வண்டல் மண் அதிகமாகிறது.
இது இந்த தசாப்தத்தின் புள்ளிவிவரங்கள். கடந்த தசாப்தத்திலும் இது போன்ற சூழலே நிலவி வந்தது. இந்த  சுற்றுசூழல் பிரச்சனையை பின்புலமாக வைத்து உருவாக்கப் பட்ட கதைதான் ஜெயமோகனின் “ரப்பர்” என்ற சிறந்த இலக்கியப் படைப்பு. ஜெயமோகனின் முதல் நாவல். 1990ல் வெளிவந்தது. அவருடைய 29 வயதில் எழுதினார். அமரர் அகிலன் நினைவுப் பரிசை பெற்றார். நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட தேர்வு செய்திருந்தது. மொழிபெயர்த்ததா என்று தெரியவில்லை. இண்டியன் லிட்ரேச்சர் இதழில் (சாகித்ய அகடமி பிரசுரம்) ஒரு முக்கிய தமிழ் நாவலாக விமர்சகர் என்.எஸ்.ஜெகன்னாதனால் குறிப்பிடப் பட்டுள்ளது.

பொன்னு பெருவட்டர் நிறுவிய தோட்ட சாம்ராஜ்யத்தை செல்லய்யா பெருவட்டர் நடத்தி செல்வது கதை. பொன்னு பெருவட்டர் வாழ்ந்த வாழ்க்கையை பெருவட்டரின் மரணப் படுக்கையிலிருந்து பின்னோக்கி எடுத்து சென்று சித்தரிக்கிறார் ஜெயமோகன். பெருவட்டரின் கீழ்படிதல், அடிமைத்தனம், கடின உழைப்பு, ஆணவம், உறுதி, இரக்கம், இரக்கமின்மை போன்ற பல்வேறு உணர்ச்சிகள் பிற கதாபாத்திரங்களிடம் நிறுவியிருக்கும் உறவுகள் மூலம் வெளிப்படுகிறது. அனைத்து உணர்வுகளையும் விளக்கும் வண்ணம் கதை அமைந்திருப்பது நாவலுக்கு ஒரு முக்கிய வலிமை. தன் வயோதிகத்தினாலும், நோயினாலும் ஏற்பட்ட இயலாமை பெருவட்டரின் மனதை பக்குவப்படுத்தி அவரை வாழ்க்கை போராட்டத்தில் இருந்து விலகச் செய்து சம்பவங்களை விதியிடம் ஒப்படைத்து விட்டு சிந்திக்க வைக்கிறது. மனதின் ஓரத்தில் குற்ற உணர்ச்சி அரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மனத்துடன் மரணத்திற்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

பெருவட்டரின் கலை உணர்ச்சி தன் வீட்டின் கட்டடமைப்பும், அவர் வீட்டு வரவேற்ப்பரையில் அமைந்துள்ள ”ரெம்ப்ராண்ட் – த அடரேஷன் ஆஃப் தெ மாகி” குறியீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறியீடே அவர் மத வழி நம்பிக்கையையும் உணர்த்துவது போல் அமைந்தாலும் பின்னால் அவருடைய மதமாற்றத்தின் காரணம் பொருளியல் வாழ்க்கையச் சார்ந்தது என்று அறிய வரும் பொழுது நம் மனதில் ஓங்கி அறைந்து நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. நம்பிக்கை வாழ்வின் ஒரு கருவிதானா? பிஷப் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வரவேண்டும் என்று நினைப்பது வியாபாரம் நிமத்தமே என்பதும், அவர் வரவேண்டுமென்றால் மதமாற்றமே வழி என்பதும் பொருளியல் யதார்த்தங்கள். ஆனால் மதம் மாறும் நிகழ்ச்சி தர்க்கத்துக்கோ, உணர்ச்சிகளுக்கோ உட்படுத்தப் படாமல் ஒரு ஆதாயத்தின் நிமத்தமாக நடக்கும் அற்ப நிகழ்ச்சியாகி விடுகிறது பெருவட்டர் குடும்பத்தில். அங்கே நம்பிக்கையென்பதே ஒரு ”பொருள்” என்ற அளவில் மட்டுமே மதிக்கப் படுகிறது.

பெருவட்டரை பார்க்க வரும் பாஸ்டர் ஜோசஃப் ராஜேந்திரன் பெருவட்டரின் அவமதிப்பினால் தன் சுயத்தை இழந்து “கிறிஸ்து நொட்டினாரு” என்று பாயும் சம்பவம் பாதிரியாரைப் பற்றி ஒரு அதிர்ச்சியூட்டும் தரிசனம். அவரும் மனிதன் தான். பின்னால் சர்ச், பெருவட்டரின் குடுமபத்தை பாஸ்டரை அவமதித்ததற்க்காக தண்டிக்க முயலும் பொழுது, பாஸ்டரின் கிறிஸ்து அவமதிப்பை மறந்து விடுவது அல்லது மறைத்து விடுவது சர்ச்சின் இரட்டை தரத்தினை சித்தரிக்கிறது. திரும்பிப் பார்க்கையில் இந்த சம்பவத்தின் பொழுது லிவியின் நிதானம் தவறாமை ஆச்சர்யம் அளிக்கிறது. சில சமயங்களில் அப்பாவி மனிதர்கள் நிதானம் இழப்பதும் பாவிகள் நிதானமாக நடந்துக் கொள்வதும் பிறரின் மதிப்பீடுகளை நிலை குலையச் செய்கிறது.

பெருவட்டர் மனைவியின் மேல் வைத்திருக்கும் அன்பும், பரிவும் கடுமை என்ற எதிர்மறை மொழியினால் வெளிப்படுகிறது. அவர் ”மறைத்துக் காட்டும்” பரிவுகளை விட பெருவட்டத்தி அதைப் புரிந்துக் கொள்வது இன்னும் சிறப்பு. ஜெயமோகன் அற்புதமாக இந்த நுணுக்கங்களை சித்தரித்திருக்கிறார்.

குஞ்ஞியிடம் பெருவட்டர் வைத்திருக்கும் இரக்கம் வெளிப்படும் அதே சமயத்தில் ஏன் அவர் அப்புக்குட்டன் நாயரிடம் இரக்கமற்று நடக்கிறார்? அதற்கு குன்னத்துக்கல் கொலை தான் காரணமா? நாயர்கள் கை ரத்தம் படிந்தக் கை. தன்னை அனாதையாக்கிய வம்சம். அப்படித்தான் நியாயப் படுத்திக் கொள்ளமுடிகிறது. அல்லது நியாயப் படுத்த வேண்டாம் என்ற கோணத்திலும் பார்க்கத்த் தூண்டுகிறது. பணம் அவரை உருமாற்றி, குணம் மாற்றி கொண்டிருந்த காலம் அல்லவா அது? பெருவட்டர் சராசரி மனிதர் தான் என்ற யதர்ர்தம் உறைக்கிறது. தன்னை கடைசி காலத்தில் பார்க்க வந்த ஏபி நாயரிடம் ”கொன்னும் கொள்ளையடிச்சும் வலியனாவி என்னத்தக் கண்டேன்” என்று புலம்புகையில் சராசரி மனிதனாகவே அப்புக்குட்டன் நாயரை கையாண்டிருக்கிறார் என்ற தரப்புதான் உயர்ந்து நிற்கிறது. தன்னை இறுதி கட்டத்தில் கவனித்துக் கொள்ளும் குஞ்ஞியின் அனபை புரிந்து கொள்ளமுடிகிறது அவரால். செயற்கரிய செயலையும் செய்யமுடிகிறது. குஞ்ஞிக்கு நிலம் எழுதி வைக்கிறார்.

குன்னத்துகல்லை விட்டு குடியான் ரகளையின் பொழுது அகதிகளாக பெருவட்டர் குடும்பம் அவருடைய நான்கு வயதில் புலம் பெயரும் காட்சியை ஒரு திரைப்படக் காட்சி கூட விவரிக்க முடியாத ஒன்று. ஜெயமோகன் அனுபவித்துக் வாசகர்கள் கண்முன் காட்சியை விரிக்கிறார். வழக்கத்திற்கு மாறுபட்டு, ஜெயின் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு சித்திரம் என்ன ஆயிரம் சித்திரம் தான் இணையாகுமா என்று எதிர் மறையாக சிந்திக்க வைக்கிறது, ஜெயின் வருணனை. அந்த ஏழைக் குடும்பம் கரடு முரடாக பேசிக்கொண்டாலும், அளவில்லாத அன்பை மறைத்து வாழும் குடும்பமல்லவா? நுணுக்கங்களை வாசகர்கள் விரிவு படுத்தி பார்ப்பதற்க்கென இடம் அளிப்பதே சிறந்த இலக்கியம் என்ற ஜெ சொல்லியிருக்கிறார். அதற்கு இந்த காட்சி சிறந்தப் பயிற்சி. அந்தப் பயணத்தின் போது குடுமபத்தை மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டு முன்னால் நடந்து செல்லும் தந்தை, வ்ழியில கிழங்கை சுட்டு உண்பது, வண்டியில் ஆகாயத்தை நோக்கி மல்லாந்து படுத்து வரும் பொன்னுமனியின் மேல் சற்று முன்னர் “சும்மா வருவியா, அலவு திரும்பணுமா” என்று கடிந்துக் கொள்ளும் தாய், பாசம் கொப்பளிக்கும் மனத்துடன் தன் கையை அவன் மேல் படரவிடுவது – எத்தனை குறீயீடுகள்?

சாயும் பொழுதின் மேல் இரவு படிப்படியாக படரும் காட்சி போன்ற வர்ணனையை அனுபவிக்க, வாசகர்கள் இந்த வாசிப்பு அனுபவம் என்ற இன்பப் பயணத்தில் சற்றே இளைப்பாறி, இளைப்பாறி செல்ல வேண்டும். வேகமாக செல்வது காட்சியை உளவாங்கிக் கொள்ளாமல் தவர விடுவதுடன், அந்த சுகமான இதமான அனுபவத்தை  இழக்க நேரிடும். அந்த வகையில் மிக அடர்த்தியாக எழுதியுள்ளார் ஜெயமோகன்.

திரேஸின் (சின்ன பெருவட்டத்தி) மன ஓட்டத்தில் ஹுயுப்ரிஸும், நர்ர்ஸிஸிசமும் (hubris and narcissism – தமிழாக்கம் தெரியவில்லை) நிறைந்திருக்கிறது. போலி வாழ்க்கை. தானும் அமைதியில்லாமல் சின்ன பெருவட்டரையும் அமைதியில்லாமல் ஆக்குகிறார். சின்ன பெருவட்டர் எல்லா உணர்ச்சிகளையும் இழந்த பணமுள்ள ”பெரிய” மனிதர்களின் மனச்சிக்கலின் குறியீடு. இவர்களைப் பார்க்கும் பொழுது நமக்கு பாரிதாபம் மட்டும் தான் படத்தோன்றுகிறது. எவ்வளவு பொருள் சேர்த்தாலும் அதன் விலையாக நமது மன அமைதியை தரவேண்டுமென்றால், அப்படி ஒரு வாழக்கையின் பயன் தான் என்ன? அர்த்தம் தான் என்ன?

இயற்க்கையையே ஒட்டி வாழும் கண்டன்காணி ஒரு அற்புதமான படைப்பு. மிகவும் எளிய மனிதர். அன்பு இவரிடம் அல்லவா இருக்கும். தூய்மையான அன்பை பகிர்ந்துக் கொளவது இவர்களிடம் மற்றும் இவர்களால் அல்லவா இயலும்?  கொள்ளுப் பேரன் டாக்டர் லாரன்ஸ் தொழில் நிமத்தம் பரபரப்பு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவில்லை. பெரும் பணம்  பாவத்தின் பலன் என்ற கருத்துடையவன். தள்ளாத வயது தாத்தா கண்டன்காணியின் பெருவட்டரை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கு மதிப்பளித்து பொறுமையாக  பெருவட்டரை சந்திக்க அழைத்து வருவது அன்பின் உச்சமல்லவா? இதை நன்கு உள் வாங்க வேண்டுமானால் இன்றைய நகர்புற காட்சியை சற்றே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். “பெரிசு மேல போறதுக்கு ஏ வண்டி தான் கிடச்சுதா, சாவுகிரக்கி”, “சாகப் போற நேரத்தில பிராணன வாங்குது கிழம்” என்றெல்லாம் கடுஞ்சொல் கூறிபோகும் அறைகுறை கல்வியறிவு படைத்த  நகர் புற மனிதர்களின் தொலைந்து போன அகங்கள் எங்கே? டாக்டர் லாரன்ஸ் போன்ற இளைஞர்களின் மாபெரும் விழுமியங்கள் எங்கே?  பெருவட்டர் அன்புடன் கண்டன்காணியை தொட்டுப் பார்க்கவேண்டும் என்று சொல்லவும் அந்த தள்ளாத வயதில் தரையில் இருந்து எழுநது வந்து கட்டிலில் பெருவட்டரின் பக்கத்தில் வந்தமரும் மாசற்ற தூய இருதயம் பெருவட்டரை நெகிழ வைக்க, அதை பார்த்த தானும் நெகிழ அதை வாசிக்கும் வாசகனை நெகிழ வைக்கிறார் ஜெ. இந்த சம்பவம் பல புதிய தரிசனங்களை அடையவைக்கின்றன.

சமுதாயம் நாகரிகம் என்ற பெயரில் இயற்க்கையின் பயன்களை புறந்தள்ளி வர்த்தகத்திற்க்காக இஅற்க்கையை தங்கள் கட்டுக்குள் வளைத்து அதன் போக்கை மாற்றி எள்ளி நகையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் அலட்சியப்படுத்துகிறது. அரசாங்கமும் இந்தச் அலட்சியத்தில் பங்கு ஏற்கிறது. நன்கு பார்த்தால் அரசாங்கம் தான் இந்த பாவங்களுக்கு முழுப் பொறுப்பு எடுக்க வேண்டும். அது தான் இதை நடைமுறைப் படுத்துகிறது. இயற்க்கையை அழிக்கும் சக்திகளுள் ஒன்று தான் சமுதாயத்தை அழிக்கும் தீய சக்தி.

பெருவட்டர் குடும்பத்தில் தூய்மையான கண்ணீருக்காக ஏங்கும் பிரான்சிஸிஸ் தன்னிடம் சிறிதளவே மிஞ்சியிருக்கும் அன்பை ஆற்றோர குழந்தைகள் மூலம் கண்டடைகிறான். டாக்டர் லாரன்ஸுடன் பிரான்சிஸ் தொடர்பு கொள்ளும் பொழுது தன் வாழக்கையின் மாபெரும் தரிசனத்தை அடைகிறான்.

(என் வரையில் இது ஒரு பெரிய இலக்கிய ஆக்கம். விழுமியங்களை இழந்த, நாம் வாழும் சூழலில் ஜெயமோகனின் இன்றைய சிறுகதைகளில் வரும் அறம் என்ற அந்த மாபெரும் ரிவைவலிஸம் ரப்பர் உருவான – இருபது வருடங்களுக்கு முன்னரே – காலக் கட்டத்திலேயே தொடங்கி விட்டது. ஜெயமோகன், உங்கள் தொண்டு மேலும் மேலும் வளர வேண்டும் என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறேன்)

நன்றி

சிலிகான் ஷெல்ஃப்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/rubber.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment