Friday 14 November 2014

திரைக்கதை எழுதலாம் வாங்க

திரைக்கதை எழுதலாம் வாங்க என்ற ராஜேஷ் எழுதிய நூலை வாசித்தேன். இதன் சில கட்டுரைகளை தினகரன் வெள்ளிமலர் இணைப்பிதழில் முன்னதாக வாசித்திருக்கிறேன். புத்தகமாக வாசிக்கையில் திரைக்கதை குறித்துத் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான புத்தகமிது என்று உணர்ந்தேன்.வாழ்த்துகள் ராஜேஷ். ஸிட் பீல்டினை முன்வைத்து தமிழ்சினிமாவின் முக்கியக் கூறுகளை அழகாக விவரித்திருக்கிறீர்கள்.

கருந்தேள்’ ராஜேஷ் எழுதும் சினிமா விமர்சனங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவன் நான். சினிமா குறித்து ஆழ்ந்து அறிந்தவர் ராஜேஷ். தனது வலைத்தளத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து விரிவாகவும் நுட்பமாகவும் நிறைய எழுதியிருக்கிறார்.

பொதுவாகத் திரைக்கதை குறித்து எழுதுபவர்கள் அதை ஒரு பாடம் எடுப்பதைப் போல தக்கையாக எழுதிவிடுவார்கள், ஆகவே அதை வாசிக்கையில் வெறும் விதிகள் போலவே தோன்றும். ராஜேஷின் எழுத்தில் எளிமையான விவரிப்பும், தெளிவான அணுகுமுறையும் மெல்லிய கேலியும் கலந்துள்ளது. இது அவரது எழுத்தின் பலம் என்றே சொல்வேன்

லார்டு ஆப் தி ரிங்ஸ் குறித்து விரிவாக எழுதிய கட்டுரைகளின் வழியே தான் ராஜேஷை முதன்முறையாக அறிந்து கொண்டேன்.ஹாலிவுட் திரைப்படம் ஒன்றைக் குறித்து இத்தனை விரிவாக, சிறப்பாக எழுதியிருக்கிறாரே என்ற வியப்போடு தான் அவரைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

ராஜேஷின் சிறப்பு அவர் வெறுமனே திரைப்படங்களை விமர்சனம் செய்வதில்லை, அதன் நவீனத் தொழில்நுட்பம், திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, கலைநுட்பங்கள், இயக்கத்தின் சிறப்புகள் குறியீட்டுதன்மை ஆகியவற்றை விரிவாக அலசுகிறார். அத்துடன் தமிழ் சினிமாவின் பலம், பலவீனம் எவையென ஆராய்ந்து எழுதுகிறார்
தமிழில் திரைக்கதை குறித்து அதிகப் புத்தகங்களில்லை, ஸிட் பீல்டினை சுஜாதா அறிமுகம் செய்து எழுதியிருக்கிறார். ஆனால் ஸிட் பீல்டினை எடுத்துக் கொண்டு தமிழ் சினிமாவின் திரைக்கதை அமைப்பை யாரும் இத்தனை விரிவாக எழுதியதில்லை, இந்த முயற்சிக்கு அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பது நன்றாகப் புரிகிறது.

இளம் இயக்குனர்களுக்கும் புதிதாகத் திரைக்கதை எழுத விரும்புகிறவர்களுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் துணை செய்யும். இதைச் சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
திரைக்கதை குறித்து வகுப்புகள் எடுப்பதுடன், திரைக்கதை வல்லுனராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் தமிழ் சினிமாவிற்குப் புதிய சாளரம் ஒன்றினைத் திறந்து வைத்திருக்கிறார், அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்!

- எஸ்.ராமகிருஷ்ணன்.

திரைக்கதை குறித்த நூல்களை இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/?page=search&serach_keyword=திரைக்கதை

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய: 73 73 73 77 42

No comments:

Post a Comment