Friday, 14 November 2014

வானம் வசப்படும்: இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் இனிக்கும் எழுத்து.

தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்த போதே (விட்டு விட்டு) படித்திருக்கிறேன் என்றாலும், முழுப் புத்தகமாக இப்போது தான் படித்தேன். முதல் பதிப்பு 1993ல். அதாவது இருபது வருடங்களுக்கு முன்!

(நான் படித்தது கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட ஜூன் 2012 எட்டாம் பதிப்பு. 656 பக்கங்கள். ரூ.250. அண்மையில் சென்னைப் புத்தகப் பொருட்காட்சியில் வாங்கியது).

உள்ளுரில் பிழைக்க வழி இல்லாதவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வந்து என்னமாய் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்! பிரிட்டிஷ்காரர்களுக்கு ஒரு ராபர்ட் கிளைவ் என்றால் பிரஞ்சுக்காரர்களுக்கு ஒரு டுப்ளே !

1742 முதல் 1752 வரையிலான பத்தே ஆண்டுகள் தான் டுப்ளே புதுச்சேரி எனப்படும் பாண்டிச்சேரியின் கவர்னராக இருந்தான். ஆனால் அதற்குள் தான் எவ்வளவு மாற்றங்களை அரசியலிலும் சரி, மக்கள் வாழ்க்கையிலும் சரி, உண்டாக்கிவிட்டுப் போய் விட்டான்!

டுப்ளேயின் மனைவியான மேடம் ழான் பாத்திரம், பிரெஞ்சு ஆளும் வர்க்கத்துப் பிரதிபலிப்பாக விளங்குகிறது. 'ரொட்டி இல்லாவிட்டால் என்ன, கேக் சாப்பிடட்டுமே! என்று சொன்னவர்கள் அல்லவா!

லஞ்ச லாவண்யங்களின் மொத்த வடிவாகும் அவள் பிறவி. அரசின் ஒவ்வொரு அசைவிலும் தனக்கென்று தனியாக லஞ்சம் பெறுவதை ஒரு அறிவியலாகவே ஆக்கியவள். கோவில்களை இடித்து, கிறித்தவத்தைப் பரப்புவதிலும் ஆவேசமானவள் அவள்.

ஆனந்தரங்கம் பிள்ளை என்ற அக்காலத்து பிரெஞ்சு 'துபாஷி'யின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து இந்த நாவலைத் தான் படைத்திருப்பதாகக் கூறுகிறார், பிரபஞ்சன். ஆனால் வெறும் நாட்குறிப்பின் தொகுப்பாக இல்லாமல் உணர்ச்சி மிக்க நாவலாகப படைத்திருக்கிறார் என்பது தான் உண்மை.

அந்தக் காலத்து வெவ்வேறு சாதியாரின் பழக்க வழக்கங்களையும், அவர்களுக்குள்ளிருந்த கருத்து வேறுபாடுகளையும், எப்போதுமே பொதுநலத்தை விடவும் சுய நலத்தையே முன்னிறுத்தும் அடிப்படையான மனிதப் பண்பையும் பிரபஞ்சன் தீர்க்கமாக வருணிக்கிறார்.

சரித்திரம் சார்ந்த சமூக நாவல் இது. அக்காலச் சமூகத்தில் முக்கியமான அங்கம் வகித்த 'தாசி'கள் எனப்படும் கோவில் சார்ந்த நடனப் பெண்மணிகளைப் பற்றி மிக விரிவாகவே
எழுதுகிறார் பிரபஞ்சன். (சாண்டில்யத் தனம் பண்ணுகிறார் என்றும் சொல்லலாம்).
உதாரணத்திற்கு ஒரு பகுதி:

(ப.147): வண்டியில் இருந்து இறங்கிய பானுவை அணுகி நீலவேணி, "அக்கா....செட்டியார் என்ன கொடுத்தார்?" என்று கிசுகிசுத்தாள்.

"சபையில் தந்தது அல்லாமல், மகர கண்டி, வைரப் புல்லாக்கும் கொடுத்தார். அதுவுமன்னியில், புதுச்சேரியில் நமக்கு வீடு கொடுத்திருக்கிராரடி. அப்புறம் கன்னத்திலும், மார்பிலும் நாலு கடி வேறு".

நீலவேணி நெடுநேரம் சிரித்துக் கொண்டிருந்தாள்.

656 பக்கமும் படித்த பிறகும், கதையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டாரே, பிரபஞ்சன், இன்னும் சில நூறு பக்கங்கள் எழுதியிருக்கக் கூடாதோ என்று ஆதங்கம் ஏற்படுகிறது. அது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றி!

இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/vaanam-vasappadum.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment