Wednesday 19 November 2014

பூமணியின் வெக்கை

பூமணியின் வெக்கை - ஆர்.வி

வெக்கை எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று.

ஒரு கொலையோடு ஆரம்பிக்கிறது கதை. ஒரு சிறுவன் தன அண்ணனைக் கொன்ற ஒருவனை போட்டுத் தள்ளுகிறான். அப்புறம் கதை பூராவும் அவனும் அவன் அப்பாவும் ஓடி ஒளிவது மட்டும்தான். கதையில் வேறு ஒன்றுமே கிடையாது.

ஆனால் கதை பூராவும் தெரிவது அன்பு. அப்பாவுக்கும் பையனுக்கும், பையனுக்கும் அண்ணனுக்கும், சித்திக்கும் பையனுக்கும், மற்ற உறவினர்களுக்கும் எல்லாருக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. குடும்பம், சுற்றம், உறவினர்கள், பங்காளிகள், சாதி சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவு; வாழ்க்கையின் தவிர்க்க முடியாத சமரசங்களின் ஊடாகவும் தெரியும் அன்பு. ஒரு கொலை, பழி வாங்குதலை foreground-இல் வைத்து அதில் அன்பை மட்டும் காட்டி இருப்பது பூமணியின் சாதனை.

சுவாரசியத்துக்கும் குறைவே இல்லை. கதை பூராவும் ஒளிந்து வாழும்போது என்ன சாப்பிடுகிறார்கள், என்ன சமைக்கிறார்கள் என்றுதான் – ஆனால் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாது.

தமிழின் சாதனைகளில் ஒன்று. இதை மொழிபெயர்ப்பது கஷ்டம், ஆனால் சரியானபடி மொழிபெயர்த்தால் உலகம் முழுதும் பேசப்படும்.

ஜெயமோகன் இந்த நாவலை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

பூமணி தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தலித் எழுத்தாளர் என்று நினைக்கிறேன். அவருடைய தலித்தியம் பிரச்சார நெடி அடிக்காத தலித்தியம். அவருடைய பிறகு நாவல் இன்னொரு குறிப்பிட வேண்டிய படைப்பு. (எனக்கு வெக்கைதான் டாப்.)

இணையத்தில் ஆர்டர் செய்ய: http://www.udumalai.com/vekkai.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment