Friday 14 November 2014

நடந்தாய் வாழி காவேரி

நடந்தாய் வாழி காவேரி – காவேரியே ஒரு சங்கீதக் கச்சேரி
- ரா.கிரிதரன்
போன வருடத் துவக்கத்தில் நண்பர் சித்தார்த் வெங்கடேஷுடன் பயண நூல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பிரபல ஆங்கில பயண நூலான Slowly Down the Ganges பற்றி கூறும்போது தமிழிலும் நதியோடு செல்லும் பயணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, “காவேரியில் பயணம் பற்றி ’நடந்தாய் வாழி, காவேரி’ என்று ஒரு கிளாஸிக் புத்தகம் இருக்கே,” என அறிமுகப்படுத்தினார். அப்படித்தான் தி.ஜானகிராமன் – சிட்டி இணைந்து எழுதிய புத்தகம் எனக்கு அறிமுகமானது. சிலப்பதிகாரத்திலிருந்து பெற்ற உந்துதலால் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது என நண்பர் மேலும் கூறி என் ஆர்வத்தை அதிகரித்தார். அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு வந்தபோது பல பிரபல தமிழ்ப் புத்தகக் கடைகளில் கிடைக்காமல், ஹிக்கின்பாதம்ஸில் விற்காமல் ஓரமாக ஒதுங்கியிருந்த பிரதியைக் கையகப்படுத்தினேன்.
அதுவரை, தமிழில் பயணங்கள் குறித்து நான் படித்தவை மேற்கு இந்தியப் பயண நூலான ’வெள்ளிப்பனி மலை மீது’ தவிர, எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் மட்டுமே. இவர்களது பல புனைவுகளும் பயணங்களை அடிப்படையாகக் கொண்டவை. பயணத்தில் கிடைக்கும் அனுபவத்தை பல புனைவுகளாக மாற்றி அமைக்கும்போது கற்பனைக்கும் கிட்டாத எல்லைகளை தாண்ட முடிகிறது. அப்புனைவுகளுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தாலும் பல சமயங்களில், புனைவுகளாகவும், மறக்க முடியாத நிகழ்வுகளாகவும் மாற்றி எழுதும்போது பயண அனுபவங்களின் ஆதார சுருதி மாறிவிடுகிறது. இலக்கற்று பயணம் செய்பவர்களின் சிதறுண்ட குறிப்புகள் பெரும் தேடல் அனுபவமாக நம் முன் விரிகிறது. எந்தவித முனைப்பும் இன்றி கால் செல்லும் வழியெல்லாம் தங்கள் புலன்களைத் திறந்து வைத்தபடி பயணம் செய்யும்போது அனுபவங்கள் முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களாகக் குவிகின்றன. இவற்றை ஒருமைப்படுத்தி புனைவாக மாற்றும்போது ஒரு திட்டமிட்ட வடிவத்துள் அடங்கி, தெளிவான குறிக்கோளாக அந்த அனுபவங்கள் மாறுகின்றன. இப்புனைவுகள் எந்த அளவு பயணங்களின் சாரத்தைத் தொகுத்தளிக்கும் என்பது கேள்விக்குரியது. இதனால், பயண அனுபவங்கள் புனைவுகளாக மாறுவதை விட, வரலாறு மற்றும் சமூகப் பிரஞையோடு குறிப்புகளாக இருந்தால், பரந்த அனுபவ சுரங்கத்தை அளிப்பது போல் தோன்றுகிறது.
ஒரே ஆன்மிக அனுபவத்தை விவரிக்கும் பல மதங்கள் போல், ஒரே நதியைப் பற்றி பல பயணக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரே நதியின் வெவ்வேறு பரிமாணத்தை காட்டும். துருவங்களிலும் மலைகளிலும் பனிப்பாளங்களாக, சிறு ஊற்றுகளாக, உயரமான வீழ்ச்சிகளாக, மேகத்தைக் கறுத்து, கனக்க வைக்கும் நீர் பொட்டலங்களாக தண்ணீர் பல வடிவங்களில் உருமாறியபடி இருப்பதால், தண்ணீரின் பல முகங்களைப் பற்றிய சொற்குவியல்களாக மட்டுமே நதியை விவரிக்க முடியும். பயணம் செல்வோரின் மன விசாரத்தைப் பொருத்து நதியின் ரூபம் மாறும். தங்கள் அனுபவங்களை எழுத்தில் வடிக்கும்போது, நதியின் சித்திரம் உண்டாக்கிய மன எழுச்சியைப் பொருத்து பயணக் கட்டுரைகளின் தரம் அமைந்திருக்கும். நல்ல இலக்கியம் மற்றும் கவிதை அறிமுகம் இருக்கும் பயணியின் கண்களுக்குத் தெரியும் நதி, சுற்றுலாப் பயணியின் பார்வைக் கோணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். பல சமயங்களில் இருவரும் வெவ்வேறு நதிகளைப் பார்த்தனரோ எனத் தோன்றும்.
சிட்டி, தி.ஜானகிராமன், ராஜகோபாலன் மற்றும் சில நண்பர்கள் காவிரியோடு பயணம் செய்திருக்கிறார்கள். பூம்புகாரிலிருந்து ஆரம்பிக்க எண்ணியிருந்தாலும், பெங்களூர் – குடகுப் பாதையிலிருந்து காவிரியின் மூலத்தை நோக்கியே இவர்களது பயணம் தொடங்குகிறது. குடகு, சிவசமுத்திரா நீர்வீழ்ச்சி, ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர், பாகமண்டலம்,மெர்க்காரா, என கர்நாடக மாநில எல்லையிலிருந்து பல கிளை நதிகள் வழியே தலைக்காவேரி எனும் காவிரி மூலத்தை அடைகிறார்கள். பின்னர் அதே வழியாக திரும்பப் பயணித்து, ஹோகெனக்கல்,கரூர், திருச்சி, தஞ்சாவூர்,கொள்ளிடம், கல்லணை, காவேரிப்பூம்பட்டினம் அடைந்து காவிரி கடலில் சேர்வதில் பயணம் முடிகிறது.
நதி மூலத்திலிருந்து விழுந்தோடி கடல் அன்னையை கலக்கும் இடமான காவிரிபட்டினம் வரை காவிரியோடே பயணம் செய்வது இப்பயணத்தின் நோக்கம். தேடலின் விசித்திரம் சென்றடையும் இடத்தில் இல்லை; பயணத்தின் நுண்மையான அங்கங்களில் மட்டுமே அதன் ஆத்மா அமைந்திருக்கும் என்பதுபோல், நதியைத் தவிர பிற திசைகளையும், பல காலங்களையும் அவர்கள் கடந்தார்கள். பல இடங்களில் நதி காட்டுக்குள் புகுந்து, மலைக்களுக்கிடையே மறைந்து, ஊற்றாகப் பல இடங்களில் வெளிப்பட்டு விளையாட்டுக்காட்டியதால் அவர்களுக்கு அதன் முழு பரிமாணம் தெரியவில்லை என்ற குறை இருந்திருக்கிறது. மேலும், காரில் மட்டுமே பயணம் செய்ததால் காவிரி கரையோரம் இருந்த முக்கியமான ஊர்களை மட்டுமே பார்க்க முடிந்தது. பல மாதங்கள் பயணம் செய்தால் மட்டுமே காவிரியின் ஒவ்வொரு பகுதியையும் பார்க்க முடியும். அதற்கான நேரம் இல்லாததால் இப்பயணத்தை ஒரு முழுமையான அனுபவமாக இவர்கள் கருதவில்லை.
cauvery_map
எந்த பயணத்துக்கும் இருக்கும் கிளைப் பயணங்கள் போல், இவர்களது பயணம் காவிரியின் பல தாத்பரியங்களை பூவிதழ் போல் விரித்துக் காட்டுகிறது. காட்டாறு போல் பாறையைப் பிளந்து விரையும் தலைக்காவிரி, சிவசமுத்திர பகுதியாகட்டும், வறண்டு போன தமிழ்நாட்டுப் பகுதிகளாகட்டும் நதியின் போக்கை மட்டும் இவர்கள் ரசிப்பதில்லை. பயணத்தின் பல முகங்களாக நதிக்கரை ஓரம் வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களது நம்பிக்கைகள், கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் பிரயோகங்கள், இயற்கை வளங்கள், காவிரியின் செழிப்பு என எல்லாவற்றையும் ரசித்திருக்கிறார்கள். அவற்றை பயணக்கட்டுரைகளில் மிக விரிவாகப் பதிந்திருக்கிறார்கள்.
கண்ணகி-கோவலன் நடந்த பாதையில் செல்ல வேண்டும் என வரலாற்றுப் பார்வையில் தொடங்கும் இவர்களது பயணம், சிவசமுத்திர நீர்வீழ்ச்சியில் காவிரியின் இயற்கை அழகில் மையம் கொள்கிறது. பின்னர் குடகு, மைசூர் எனப் போகும் வழியெங்கும் செழிப்பான மலைத்தொடர்களில் மனதைப் பறிகொடுத்தபடி பயணம் செய்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் போல் மேலோட்டமாக பார்க்காமல், பயண வழியில் தெரியும் மரங்கள், செழிப்பான இயற்கை வளங்கள், அவ்வப்போது இடையில் வேகத் தடையாக வரும் மழை, அன்பான வார்த்தைகளால் வழிகாட்டியவர்கள், தோட்டங்கள் என பார்க்கும் அனைத்தையும் வர்ணித்தபடி செல்கிறது பயணம். அதைத் தவிர காவிரியின் கதை குறித்த விவாதங்கள், புராணங்கள், கோயில்களின் ஐதீகங்கள் என பல கருத்து விவாதச் சண்டைகளும் உண்டு! செல்லும் இடத்திலெல்லாம் இவர்களுக்கு பலர் வழி சொல்லியும், இரவு தங்க இடமளித்தும், சுவையான உணவு வகைகளை சாப்பிட கொடுத்தும் அன்பாக உபசரித்துள்ளார்கள். அந்த மக்களின் வாழ்க்கையை உற்று கவனித்து தொகுத்துள்ளதால், நதியின் கதையாக மட்டுமல்லாது மக்களின் கதையாகவும் இவர்களது பயணம் அமைந்திருக்கிறது. அதுவே இப்புத்தகத்தை செவ்வியல் படைப்பாக மாற்றுகிறது.
ஆசிரியர்கள் சொல்லும் பல சம்பவங்கள் நம்மை அவ்விடங்களுக்கே அழைத்து செல்வது போல் தோன்றுகிறது. குறிப்பாக காவிரி ஆற்றின் பயணம் பல விதங்களில் வர்ணிக்கப்படும் போது, அதன் சுழிப்பு நம்முன் நிகழ்வது போன்றும், அதன் நீர் திவலைகள் நம்முகத்தில் அறைவது போலவும் தோன்றுகிறது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி விரைந்தோடும் நதியை, அதன் போக்கு திசையின் எதிர்திசையில் பயணம் செய்து நதி மூலத்தை அடைகிறார்கள். கார் பயணம் ஆதலால் எல்லா இடங்களிலும் நதியை சந்திக்க முடிவதில்லை. ஆங்காங்கே போக்கு காட்டி வளைந்து மறைந்து வெளிப்படும் சிறு குழந்தையாக இருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் ஆற்றின் சீற்றம் பல இடங்களில் அதன் சக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
thija-logoஇப்பயணத்தில் இவ்வொரு இடமும் காட்சிப்படுத்துவதொடு மட்டுமல்லாது, அதன் வரலாறு, ஐதீகம், பண்டைய மக்கள் வாழ்வு பற்றிய சிந்தனைகள் படிப்பவர் மனதில் ஓர் ஆசுவாசத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். காவிரிப் பயணம் என்பது வெறும் நதிக்கரையில் உட்கார்ந்து, உண்டு, மகிழ்ந்து பேசிச் செல்வதற்கான இடமல்ல என்பது இப்பயணிகளின் கருத்து. வரலாற்றின் நீட்சியாகப் பார்த்தால் இந்திய பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மக்களின் சுக, துக்கங்கள் சங்கமிக்கும் இடம் நதிக்கரை. நதிக்கரை கலாச்சாரம் நதிப் பிரவாகத்தின் சுழிப்பைப் போன்றது. காவிரி பல இடங்களில் காட்டாறு போல் வேகமாகவும், பல இடங்களில் அமைதியாகவும் கடக்கிறது; மக்களின் வாழ்வும் அப்படித்தான். இன்னின்ன இடத்தைப் பார்த்தேன், அதன் அழகே அழகு என்று சுற்றுலா பயணி போல் நிறுத்திக்கொள்ளாமல், மக்களின் பழக்க வழக்கங்கள், மண் மற்றும் மரபு மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்பு, நதி சார்ந்துள்ள மக்களின் எளிமையான வாழ்க்கை போன்றவற்றை விவரித்திருப்பது இந்தியா எனும் ஒருமித்த கருத்தை நம்முள் விதைக்கிறது.
பண்டைய தென் இந்திய நாகரிக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததாலும், மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதனாலும் காவிரி இலக்கியங்களிலும் பிரதானப் பாத்திரமாக காட்சியளிக்கிறது. காவிரிக்கரையில் வாழ்ந்ததால், தி.ஜானகிராமனின் பல கதாபாத்திரங்கள் காவிரி நதியின் இயல்பை ஒட்டியிருப்பது இயல்பானதே. காவிரியை ஒரு நதியாக மட்டும் பாராமல், ஒரு உச்சகட்ட படிமமாக மாற்றியது தி.ஜாவின் எழுத்துகள். இதனாலேயே கோபம், சீற்றம், அமைதி, துள்ளல் எனத் தி.ஜாவின் படைப்புகளில் இருக்கும் பல பாத்திர பாவங்களுக்கும் காவிரி மாதிரியாக இருக்கிறது.
உருவாகும் இடத்திலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினம், தலைக்காவேரி, ரங்கன் திட்டு, சிவசமுத்திரம், ஹோகனெக்கல் என ஒவ்வொரு இடத்திலும் ஓடுவது வெவ்வேறு நதியோ என தோன்றுமளவுக்கு காவிரியின் தோற்ற மாற்றத்தை பார்க்கும் இப்பயணிகள் வியக்கிறார்கள். உருவாகும் இடத்தில் மிகுந்த சீற்றத்துடன் காடு, மலைகளைத் தாண்டி நிலப்பகுதிக்கு விரைகிறது. பின்னர், அடுத்த வீட்டுப் பெண்ணைப் போல் மிக அமைதியாக மனிதன் உருவாக்கிய அணைக்கட்டுக்குள் அடங்கி பவானி, கொள்ளிடம் எனப் பல கிளைகளாகப் பிரிகிறது.
இப்பயணிகள் காவிரியை தங்கள் கண்களால் மட்டும் அனுபவிப்பதில்லை. தங்கள் காதுகளைத் திறந்து வைத்து தூக்கமில்லாத இரவில் காவிரியின் ஓசையைக் கேட்கிறார்கள். மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் இந்த நதி அருகிலுள்ள இயற்கை அழகுகளை செழிப்பாக்குகிறது. நதிப் படுகை அருகே நறுமணப் பூக்கள் நிரம்பியிருப்பதால். காற்றில் ரம்மியமான மணம் வீசுகிறது. இரவில், வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பற்றிப் பேசும்போது, காற்றில் கலக்கும் பூவின் நறுமணம், நதி ஓட்டத்தின் ஓசை என புலன்களுக்கு பெரிய விருந்தொன்று காவிரி படைப்பது போல் இவர்களுக்குத் தோன்றியதாம்.
பயணக் குறிப்புகள் என்றாலே புது இடங்களைப் பற்றிய தகவல்கள் என்றில்லாமல், இவர்கள் சந்தித்த மனிதர்களையும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் எழுதியிருக்கிறார்கள். மனிதனுக்குள் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், எங்கு சென்றாலும் அவன் இயல்புகள் மாறுவதில்லை. இவர்கள் குடக மலையில் சந்திக்கும் சிறுவன் பல ஊர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறான். பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிந்தாலும், சிறுவன் மிகக் குறும்புக்காரனாக இருக்கிறான். அதே சமயம் மிகுந்த சாமர்த்தியசாலியாகவும், தைரியமாக இவர்களுடன் பயணம் செய்து அவனது ஊர் செல்லும் வரை வழிகாட்டியாக இருந்தது பயணத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றுகிறது.
ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் நதியை வர்ணித்தாலும் அத்துடன் இவர்களது பயணம் நிற்கவில்லை. புது இடங்களில் காவிரியைச் சந்திக்கும்போதெல்லாம் இவர்களது மனது அதோடு தொடர்பு கொள்ளும் பாடல்களை நினைவு கூர்ந்தபடி இருக்கிறது. காவிரியோடு சம்பந்தப்படும் பல பாடல்கள் அந்த இடங்களை மேலும் ரம்மியமாக்குகிறது. ஒரு நவீன கால பாணன் போல், ஊர் ஊராகச் சென்று காவிரியின் பெருமைகளை பாடல்களாகப் பாடி நினைவு கூர்கிறார்கள். அதோடு மட்டுமல்லாது, அவ்வப்போது காவிரியின் காவியமான சிலப்பதிகாரத்தையும் தங்கள் விவாதத்தில் சேர்த்துகொள்வதன் மூலம், பல தொடர்புடைய நிகழ்வுகளை அசை போட வைக்கிறார்கள். காவிரியின் முக்கிய அணையான கல்லணையைக் கடக்கும்போது சிலப்பதிகாரப் பாடலைப் பாடி, இளங்கோவைப் போல் காவிரியை வாழ்த்துகிறார்கள்.
உழவர் ஓதை, மதகு ஓதை
உடைநீர் ஓதை, தண்பதம் கொள்,
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய் வாழி காவேரி!
இப்பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு இசை ஆர்வம் அதிகமாக இருப்பதினால், காவிரியைத் தவிர, ஒவ்வொரு ஊரைப் பற்றியும் தனிப்பாடல்களைப் பாடிக்கொண்டே காவிரியின் தோற்றத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள். அருணாச்சல கவிராயர், தியாகய்யர் பாடல்கள் , கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம் என தமிழின் இசைப்பாடல்களில் காவிரியின் தொன்மையையும், காவிரிப் படுகையிலிருந்து ஊர்களைப்பற்றியும் வாசக கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள்.
திருவையாறு, குடகு மலை, மைசூர், கிருஷ்ணராஜசாகரம், ராமநாதபுரம், ஹோகனெக்கல், புகார்க் கடற்கரை என எல்லா இடத்திலும் நதியை விவரிக்கும் அதே நேரத்தில் அந்தந்த இடத்தில் பிறந்த, வாழ்ந்த அறிஞர்களின் பெருமைகளையும் விவாதிக்கிறார்கள். இதன் மூலம் காவிரிக் கரை ஒரு மேன்மை பொருந்திய நாகரிக வளர்ச்சி மையமாக நம்முன் விரிகிறது. இவர்கள் விவரிக்கும் ஆளுமைகளைக் கணக்கில் கொள்ளும்போது, இந்திய தென்னாட்டின் ஆளுமைப் பெட்டகத்திலிருந்து வரிசையாக விவரிப்பது போல் உள்ளது.
ராஜராஜன், ராஜேந்திரன், இளங்கோ, கம்பன், ஒட்ட்டக்கூத்தன், அருணாச்சலக் கவிராயர், தியாகைய்யர், சியாமா சாஸ்திரி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், திருவாடுதுறை ஆதீனங்கள் என அவர்களது பட்டியல் முடிவில்லாமல் நீண்டுகொண்டேயிருக்கிறது. எத்தனை எத்தனை ஆளுமைகள் காவிரிப் புகழைப் பாடியிருக்கிறார்கள் என நினைக்கும்போது படிக்கும் நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அத்தனை மனிதர்களையும் காவிரி பாதித்துள்ளது. அவர்களது செயல்களால் காவிரிக்கும் பெருமை.
காவிரி கிழக்கில் இருந்து மேற்கு பாயும் இடங்கள் அனைத்தும் புண்ணிய பூமியாக நம்பப்படுகிறது. அதனால் அத்தகைய இடங்களில் பல கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. நதியின் அழகை ரசித்த கையோடு இக்கோயில்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. ஸ்ரீரங்கம் கோவில், கும்பகோணம் நாகேச்வரன் கோவில்,அகஸ்தீஸ்வரர் ஆலயம் என காவிரி தொட்டுச் செல்லும் கோயில்களின் வரலாறு, அவற்றில் இருக்கும் நுணுக்கமான சிற்பக்கலை, கோயில் அலங்கார வேலைப்பாடுகளில் மனம் குவிந்து பல மணிநேரங்கள் செலவு செய்கிறார்கள். வரலாறு, ஐதீகக் கதைகள், காவிரியின் உருவமைப்பு போன்ற விவரணைகள் முலம் இவ்விடங்களைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை கொடுத்துவிடுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தைத் தாண்டி, தமிழ் நாட்டுக்குள் வரும் காவிரியின் வேகம் பல அணைகளால் மட்டுப்படுத்தப்படுகிறது. கிருஷ்ணராஜசாகரம், மேட்டூர், கல்லணை போன்ற பகுதிகளைக் கடக்கும்போது பாசன திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். காவிரி டெல்டாப் பகுதியில் பாசன முறைகள், பல கிளைகளாகப் பிரியும் காவிரி ஆறு மூலம் செழிக்கும் வயல்கள் என இவர்கள் கூறுவதைப் படிக்கும்போது இன்றைய நிலவரம் வருத்தம் தருகிறது. நல்லவேளை, தமிழ் நாட்டில் காவிரி நீர்ப்பரப்பு ஓரளவு இருந்த போது இவர்களது பயணம் நடந்தது. இன்று இதே பயணத்தை இவர்கள் மேற்கொண்டால் எப்படிப்பட்ட வறண்ட படுகைகளை காண நேரிடும் என நினைக்கும் போது, காவிரியால் ஒரு அற்புதமான பயண நூல் சாத்தியமாகி அதன் பெருமையை கூட்டிக் கொண்டது என்றே கொள்ளலாம்.
காட்டாறு போல் பாய்ந்து வந்து கடலோடு கலக்க விரையும் காவிரியை அணை போட்டுத் தடுப்பதால் அந்தந்த ஊர்களுக்கு உண்டாகும் நன்மைகளும், மின்சார உற்பத்திப் பெருக்கமும் இதன் கிளை உபகரணங்களாக வர்ணிக்கப்படுகின்றன. கரிகாலன் கல்லணையை கட்டும் வரை , காவிரிக்குத் தடுப்பே இல்லை. வெறும் கல், மண்ணால் கட்டப்பட்ட கல்லணை காட்டாறு போல் பாய்ந்த காவிரியின் வேகத்தைக் கட்டுப்படுத்தியது என்று நினைக்கும்போது, அக்கால வல்லுனர்களின் திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கும் நகைச்சுவை உணர்வு வாசிப்பு அனுபவத்தை அதிக சுவையுள்ளதாக ஆக்குகிறது. குறிப்பாக, பல பகுதிகளை வாய்விட்டு சத்தமாகப் பல முறைப் படித்து ரசித்தேன்.
‘மெதுவாகவே போய்க்கொண்டிருந்த வண்டி திடீரென்று கட்டுக்கடங்காமல் சாலையோரத்தில் இருந்த ஒரு புளியமரத்தை ஆசையாகத் தழுவிக்கொள்ள விரைந்தது. காரோட்டி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, பிரேக்கைப் போட்டு, எப்படியோ அந்த காதல் நிகழாமல் தடுத்துவிட்டார்.’
‘[வலம்புரிநாதர் ஆலயத்தை பார்த்த பிறகு] ‘வால்மீகியின் இராமாயணத்தில் விசேஷமாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை. எல்லாம் இப்போதுள்ள சிறுகதை மாதிரி தான் இருக்கிறது’ என்று ஒரு விமர்சகர் என்னிடம் சொல்லியிருந்தார். தேர்ந்த புதுப்பசலிகள் இத்தகைய பொன்மொழிகளை உதிர்க்கும்போது, தலபுராணமும் இருந்துவிட்டுப் போகட்டும் என்றுதான் தோன்றுகிறது.’
பல இடங்களில் விஞ்ஞான முறைப்படி பாசனங்கள் அமைப்பது போல், விஞ்ஞானத்தைக் கொண்டு தேவையில்லாத பழைய நம்பிக்கைகளையும் மாற்றி அமைக்கலாம் எனக் கூறுவதன் மூலம் ஐதீகங்கள், நம்பிக்கைகளை முழு மனதோடு பார்க்காமல் விமர்சனப் பார்வையோடு அணுகுவது போல் முதலில் தோன்றும். ஆனாலும், பாரம்பரிய நம்பிக்கைகள் ஒரு காலத்தின் பிரதிபலிப்பு. அக்கதைகளை இன்றும் அடுத்த சந்ததியினரிடம் விவரிக்கும்போது, ஒர் தொடர் சங்கிலி போல் வரலாறு கை மாறுகிறது. அதனால், இக்கதைகளை முழுவதும் நம்ப வேண்டியதும் இல்லை. நம் கலாச்சார சொத்துகளாக இவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் இப்பயணிகள் விவாதிக்கிறார்கள்.
பயணக் குறிப்பைக் கொண்டு சென்ற இடங்களை வாசகர்களின் கண்கள் முன் நிறுத்துவது பயணம் செய்வதை விட மிகக் கடினமானது. சிட்டி, தி.ஜா போன்ற இலக்கியப் பிதாமர்களுக்கு இது மிக இயல்பாக கைகூடியிருக்கிறது. இப்படிப்பட்ட பயணத்தை எல்லாரும் மேற்கொள்ள முடியும். சாகஸப் பயணம் இல்லையென்றாலும், அவர்கள் பார்த்தவை, கேட்டவை தவிர உணர்ந்தவற்றைக் கூட எழுத்தில் கொண்டு வந்திருப்பது மிகப் பெரிய சாதனை. இதைப் படிக்கும் போது, காவிரி ஓட்டத்தின் சத்தம், நீர்வீழ்ச்சியின் திவலைகள், கரைகளில் வளர்ந்திருக்கும் பூக்களின் வாசனை எல்லாவற்றையுமே இவர்களது எழுத்தின் வழியாக என்னால் உணர முடிந்தது.
இந்தப் பகுதியைப் பாருங்கள் -
‘ராமநாமப் பாட்டை கணீர் எனப் பாடிய வண்ணம், தெருவோடு நடந்து காவிரிக்குக் குளிக்கச் செல்வாள் என்று சொல்லிப் பாடிக் காட்டினார். இருளையும், காவிரிக்கரை ஊரையும் மனதில் பார்க்க கண் மூடிக் கொண்டது. இருள் பிரியாத விடியற்காலை, நிசப்தம். மேலே நட்சத்திரங்கள் – கிழக்கே வெள்ளி – எங்கும் ஒரு வலியனின் கூவல் – எங்கோ கொட்டிலில் வைக்கோலை மாடு பிடுங்கும் ஒலி – தென்னங்கீற்றுகளின் சலசலப்பு – நிர்மலமான இதயம் – எங்கிருந்தோ ஒரு முதிய பெண் குரல் பாட்டைத் தொடங்கி, அந்த ஒலி அருகே உயர்ந்து உயர்ந்து வந்து பின்பு தேய்ந்துகொண்டே சென்று காவிரியின் சுழிப்பில் கரைகிறது.’
கண்ணை மூடி அவர் கண்டதை, எழுத்தின் மூலம் எத்தனை அழகாகக் வெளிப்படுத்தியுள்ளார்!! அதே போல், இயற்கையை வர்ணிக்க இவர்கள் உபயோகப்படுத்தும் சொற்றொடர்கள் – ஈரம் மிகுந்த காற்று நம்மைத் தீண்டுவது போல் உள்ளது.
மலை மேல் ஏறும்போது கீழுள்ள நிலத்தைப் பார்த்து – ‘குளித்து விட்டுத் துடைத்துக்கொள்ளாமல், மாற்றுடை அணியாமல் சொட்டச் சொட்ட வரும் பெண்போல கீழ்நிலம் காட்சியளித்தது` – என வர்ணிக்கும்போது நிலத்தின் பசுமை ஓர் அற்புதமானக் காலைக் காட்சியாக நம்மை ஆட்கொள்கிறது.
இப்புத்தகம், தமிழில் வெளிவந்த பிரயாண நூல்களில் சிகரம் எனச் சொன்னால் அது மிகையில்லை. அகண்ட காவிரியாக, சிறு ஊற்றாக, துள்ளியோடும் காட்டாறாக, பாறைகளை பிளக்கும் நீர்வீழ்ச்சிகளாக, முடிவில்லாத ஆழங்களுக்குள் நீளும் நீர்சுழிப்புகளாக காவிரிக்கு தான் எத்தனை முகங்கள். அத்தனையையும் கணக்கில் கொண்டு ஒரு வரலாற்று தரிசனமாகத் தரும் அரும்பெரும் செயலை இப்புத்தகம் செய்கிறது.
பல பயண நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவை வெறும் தகவல் களஞ்சியங்களாகவோ, சுற்றுலாக் கையேடுகளாகவோ நின்றுவிடுகின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வரலாற்றுப் பிரக்ஞையோடு பயணம் செல்லும்போதே இப்படிப்பட்ட நூல்கள் வெளிவரமுடியும். இதையெல்லாம் தாண்டி, இயற்கை மேல், வாழ்க்கை மேல் தீவிர காதலும், பிடிப்பும், பயணம் செய்வோரிடையே குழந்தைப் போன்ற குதூகலமும் சேரும்போது இப்படிப்பட்ட பயணங்கள் சாத்தியம். அப்பயணங்களை தீவிர கலை மனம் கொண்டு நண்பர்கள் முனைப்போடு செய்தால் இப்படிப்பட்ட பயண நூல்களை எழுதிடலாம். இவ்வளவு, நிபந்தனைகளை உள்வாங்கி, ஒரு வெற்றிகரமான செவ்வியல் பயண நூலாக ‘நடந்தாய் வாழி; காவேரி’ அமைந்திருக்கிறது. காவிரி மேல் இவர்களுக்கு இருக்கும் காதல் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.
மேலும், நம் கவனத்திற்கு வராத பல இடங்களைப் பற்றி இப்படிப்பட்ட தொகுப்புகள் வருவது நம் கண்முன்னே காணாமல் போய்க்கொண்டிருக்கும் வரலாற்றின் பக்கங்களாக அமையும். சுற்றுலாக் கையேடு போல் இல்லாமல், பயணம் என்பது மனிதர்களின் வாழ்வுக்குள் எட்டிப் பார்க்கும் சுக துக்கங்கள் போல் வரலாறு மற்றும் இயற்கையுடன் இயைந்த ஒரு தேடலாக அமைந்திருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. கண்களை மட்டும் திறந்து வைக்காமல், புலன்கள் அனைத்தையும் கொண்டு இந்த ஒருமித்த சங்கமம் நடந்தால், மனிதனின் தேடலே மிகப் பெரிய பயணமாக மாறிவிடும் என்பதற்கு இவர்களது பயணம் ஒரு உதாரணம்.

No comments:

Post a Comment