Tuesday, 25 November 2014

ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பினை இணையத்தில் வாங்க:http://www.udumalai.com/jeyamohan-sirukathaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

"பொம்மை' இதழில் ஜூலை 1971 முதல் செப்டம்பர் 1972 வரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.​ எழுதிய மிகச் சிறப்பான தொடர் "திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்'.​ சினிமா ரசிகர்களிடையே மிகப் பரவலான கவனத்தையும்,​​ வரவேற்பையும் பெற்ற இத்தொடரை தொகுத்து "எம்.ஜி.ஆர்.​ எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை' என்னும் பெயரில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது விஜயா பப்ளிகேஷன்ஸ்.
​ ""ஆசை,​​ நம்பிக்கை இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பும்,​​ உறவும்தான் எத்தனை வலிமை பொருந்தியது தெரியுமா?​ எத்தனை எமன்கள் வந்தாலும்,​​ மனித எதிரிகளே வந்தாலும்,​​ தோல்விகள் தொடர்ந்து வந்தாலும்,​​ இந்த இரண்டும் பிரிவதோ,​​ இவைகளைப் பிரிக்க முயலுவதோ இயலாத காரியம்.​ என்னுடைய வெற்றிகள் என்று எவையேனும் இருந்திருக்குமாயின்,​​ அதற்கு எனது தோல்வியினால் நான் தெளிவு பெற உதவிய,​​ நியாயமான முடிவுதான் காரணம் என்பதைத் துணிவோடு,​​ ஆதாரத்தோடு என்னால் கூற முடியும்.
​ ​ மனிதனாக இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கின்றோம்.​ இந்தப் பிறவியில்,​​ இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து,​​ ரசிப்பது என்பது எல்லோருக்கும் இயலாத காரியம்.​ உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை,​​ இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர்.,​​ வெளிநாடுகளில் "உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கான படப்பிடிப்பை நடத்தியபோது ஏற்பட்ட அனுபவங்களையும்,​​ சுவையான சம்பவங்களையும் மிக விரிவாக எழுதியுள்ளதை,​​ விவரிக்கிறது இப்புத்தகம்.​ சினிமா ஆர்வலர்கள் படித்து பயன் பெறலாம்.
எம்.ஜி.ஆர்.​ எழுதிய "உலகம் சுற்றும் வாலிபன்'​
உரு​வான கதை
தொகுப்​பா​சி​ரியர்:​ வி.வீரபத்திரன்


இணையத்தில் வாங்க:
http://www.udumalai.com/m-g-r-eluthiya-ulagam-sutrum-valiban-uruvana-kathai.htm


தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42




தூயோன் - கோபிகிருஷ்ணன்


மனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //

என் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.

இப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.

வயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.

புயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்துவிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.

மனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.

முடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.

உடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது ? // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.

இதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் ? (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)

இந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.

...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”

இப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.

இதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.

ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.

கடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா? அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//
புத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-

நன்றீ
அமிர்தவர்ஷினி அம்மா அவர்களுக்கு

இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/jeyamohan-sirukathaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தொடக்கம் தெரியுமா

எதற்கும் தொடக்கம் என்று ஒன்று உண்டு. அந்த வகையில் சிறப்பான தொடக்கங்கள் பெற்ற பல கண்டுபிடிப்புகள், முதன்முதலாக நடந்தேறிய சம்பவங்கள் ஆகியவை வரலாற்றில் முத்திரை பதித்துள்ளன. முதல் கண்டுபிடிப்புகளிலும், முதல் சம்பவங்களிலும் பல்வேறு சுவாரசியங்கள் பொதிந்திருக்கும். மைக்ரோ ஓவன் கண்டுபிடிக்கப்பட்டதில் பெரும் சுவாரசியம் ஒளிந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது ராடார் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டாக்டர் பெர்ஸி ஸ்பென்ஸர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது மைக்ரோ வேவ் ராடார் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தன் பாக்கெட்டில் இருந்த சாக்லெட் உருகுவதைச் சட்டென கவனித்தார். அடுத்த நாள் மக்காச் சோளத்தின் மீது மைக்ரோ அலைகளைச் செலுத்தினார். பாப்கார்ன் பொரிந்து பரிசோதனைச் சாலை முழுவதும் சிதறியது. ஸ்பென்ஸரின் உற்சாகம் எல்லை கடந்தது. அடுத்த நாள் மைக்ரோ அலைக்கு அருகே ஒரு முட்டையை வைத்தார். முட்டையின் உள்ளே வெப்பம் அதிகமானது. ஸ்பென்ஸரின் உதவியாளர் அந்த முட்டையையே உற்றுப் பார்த்தார். அந்த முட்டை பட்டென்று வெடித்தது. இதைப் பார்த்த ஸ்பென்ஸரின் மனதில், ‘ஒரு முட்டையை இவ்வளவு சீக்கிரம் சமைக்க முடிந்தால், இந்த அலைகளைக் கொண்டு பிற உணவுப் பொருட்களையும் சமைக்க முடியாதா என்ன?’ இப்படிப் பிறந்ததுதான் மைக்ரோ ஓவன். இது எப்படி இருக்கு? இதுபோன்ற ஏராளமான பயனுள்ள தொடக்கங்களை வாசகர்களுக்காக இந்த புத்தகத்தில் எழுதிக் குவித்துள்ளார் நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ். தொடக்கத்தை அறிய... தொடர்ந்து பக்கத்தைப் புரட்டுங்கள்!

அறம்

இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்ட◌ாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன்

ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஒர் உன்னத மனநிலையில்  நிறுத்தியிருந்தன. இக்கதைகளின் பிரசுரம் அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கித் திருப்பியது. தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இக்கதைகளின் தொடர் பிரசுரத்தை சொல்லலாம் 

ஜெயமோகன் சிறுகதைகள் - ஒரு ஜாலி ரிவிவ்யூ

இந்த நூலில் மன எழுச்சியை உண்டு பண்ணக்கூடிய கதைகள், சரித்திரக் கதைகள், படிமங்கள், அமானுடங்கள் என்று நிறைய ‘ஐட்டங்கள்’ இருந்தாலும், பாமர மக்களின் மொழி பேசும் கதைகளை நான் விரும்பிப் படித்திருக்கிறேன். என் மனக்கண்ணில் இன்னும் தெரிவது ‘மாடன் மோட்சம்’ சிறுகதையே!

அது என்றைக்கும் நிலைத்து நிற்பதாக. ஆம், அப்படியே ஆகுக ;)

சிறுகதைப் பட்டியல்

நதி- (இறுதி மரியாதை செய்யும் கதை)

வீடு – (பேய் வீடு!)

பல்லக்கு (குந்தித் தின்னும் மேனோன் கதை. எனக்குப் பிடித்திருந்தது).

கண் (கலங்கிவிட்டது😵 ப்ப்ப்ப்பா)

வலை (சுவை)

தரையில் அந்தச் சிறு கல் மட்டும் கிடக்காமல் இருந்திருந்தால், இந்தத் திசையே வேறு. இது மிகவும் அசட்டுத்தனமான சிந்தனை என்று எனக்குப் பட்டது. இருந்தால் என்று பட்டியலிடப் போனால் எத்தணை கோடி சாத்தியக் கூறுகள் – மனம் பிரமித்து உறைகிற பிரம்மாண்டமல்லவா அது!

படுகை (அணை)

கோபம் கொண்ட பேச்சி காட்டுக்குள்ளே செம்பன் துரையை வழிமறித்தாள். யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்து, மலை மேலே கால் வைத்து, மேகத்திலே தலை வைத்து, கொடும் பல்லும், விஷ நாக்கும், கனல் கண்ணும், இடிச்சிரிப்புமாய் விஸ்வரூபம் கொண்டு நின்றாள். விழுந்த அருவி மலை மேலே தொங்க, காடெல்லாம் நடுநடுங்க, வானமெல்லாம் எதிரொலிக்க இடிபோல் குரல் எழுப்பி, மின்னல் போல பல்காட்டி பேச்சி கேட்டாள். ‘எந் தலமுடிய வெட்டியதுக்கா வந்தே மக்கா? எனக்க மொவளக் கெட்டியதுக்கா மலைகேறி வந்தே மக்கா’

சவுக்கு (சுரீர்..)

‘நீ வட இந்தியா இல்லையோ’
‘ஆரு சென்னா’ என்றான் அவன் தூய சேரித்தமிழ் உச்சரிப்பில்.
‘உங்கப்பா நேற்று சொன்னாரே’
‘தாளி, சும்மா செல்லுதான்’

வனம் (தத்துவார்த்தம்!!)

‘உனக்குத் தெரியுமா இந்த நதியைப் பற்றி? ஆனைக் கண்டி மலைகளில் சென்றுபார். இவள் செதுக்கிய கோடி கோடி பாறைச் சிற்பங்களை! இவள் கரையில் அன்று மாநகரங்களாக இருந்தவை சுடுகாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன. தரிசுகள் காடுகளாகின்றன. பாலை வனங்களில் கட்டிடங்கள் எழுகின்றன. அழிவு, ஆக்கம், அழிவு. இவள் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறாள். மந்தகாமினி, ஓயாத பிரவாகம். …….. எல்லா நதியும் கங்கைதான் என்கிறது மகாபாரதம். வசந்தகால அழகி. சில சமயம் வேகவாகினி. சிலசமயம் பிரளய காளி. கங்கையென்று கொண்டால் கங்கை. துங்கை என்றால் துங்கை’

யாரிடமாவது இந்தக் கதையைப் பற்றிப் பேசவேண்டும். (புரியனும்ல!)

போதி (அவிசுவாசம்)

‘ஹிந்து மதமா? ஹெஹெஹெ… ஹிந்து மதம் என்று ஒரு மதம் உண்டா?எங்கே? நான் பார்த்ததே இல்லையே. ஹெஹெஹெ… இதோபார். ஒப்பிட்டால் ஒரே மதம்தான் சரியான மதம். அது சைவ மதம். விவேகானந்தன் உண்மையை உணரமுடியாத வெறும் பண்டிதன்’

ஜகன்மித்யை (எட்டர்னல் ரெகரன்ஸ்)

புராண காலத்துக் கதாபாத்திரம் ஒன்று, நவீன நாடகம் போல, சம்பந்தமில்லாமல் வந்து நின்று முழிக்கிறது. என்னவென்று விசாரித்தேன். நம்பூதிரி என்னை சர்வ அலட்சியமாய்ப் பார்த்து, தன் பெயர் மேலைமங்கரம் அப்பன் நம்பூதிரிப்பாடு என்று அறிமுகம் செய்து, டீ வாங்கித் தரும்படி ஆசையிட்டார். அந்தத் தோரணையும் எனக்குப் பிடித்திருந்தது.

இதில நம்பூதிரியையும் பரமுவையும் பிடித்திருந்தது 😆

மாடன் மோட்சம் (கிணத்துக்குப் பயந்து..)

‘அது என்ன லேய் ஸ்பீக்கறு’
‘காலம்பற பாட்டு போடுயதுக்கு. அதுக்க சத்தமிருக்கே, நூறுபறை கொட்டினா வராதுவேய். …… ஒரு கூட்டம் ஏமான் பெயவ காக்கி டவுசரு இண்டோண்டு கசரத் எடுக்கணும். டவுசரு இட்டனுவ அறெஸ்ஸூ. மத்தவனுவ இந்துமின்னணி.’
‘அங்க கோளி உண்டோவ்?’
‘அரிஞ்சுப் புடுவேன் பாத்திக்கிடும். நான் இஞ்ச மினக்கட்டு யோசனை செய்யுதேன். நீரு கோளியிலே இருக்குதீராக்கும்.’

படு ஜோரான கதை! சூடான கதையும் கூட.
திசைகளின் நடுவே (குருதி வாடை)

மீண்டும் அவன் தன் கப்பரையை நீட்டியபோது அர்ச்சுனன் கோபத்துடன் ஓரடி முன்னால் வந்து, ‘என்ன வேண்டும் உனக்கு?’ என்றான்.
‘பிட்சை.’
‘கொடுத்த நாணயங்களை ஏன் கொட்டினாய்?’
‘அவற்றில் உதிரவாடை வீசுகிறதே’

மகாபாரதப் பின்புலம் கொண்ட சிறுகதை

சிவமயம் (சிவா சிவா)

பொழுது போக்கான கதை

சந்திப்பு (வவ்வால் கீதம்)

‘…..உடலை உலுக்கியபடி ஓர் உதை. நான் மேல் நோக்கி விழுந்தேன்’

அவ்ளோதான் சொல்வேன். அப்புறம் உங்க இஷ்டம் :)

நிழல் (ஞான பூனைக்கண்)
😨

காலை (நாட்டுக்கோழி)

மிகச் சிறிய, ஆனால் புன்னகைக்க வைக்கும் கதை. ஊசிப்பட்டாசு மாதிரி.

தனிமையும் இருட்டும் (எலிக்குட்டிதான் மிச்சம்)

மலம் (வீச்சம்😵)
அழுக்குப் புன்னகைக் கதை
மூன்று சரித்திரக் கதைகள்

மாபெரும் கம்பளம் பற்றிய கனவு (பழைய குமரி மாவட்ட, கேரளக் கதை பிண்ணனி)
சவக்கோட்டை மர்மம் (பழைய குமரி மாவட்ட, கேரளக் கதை பிண்ணனி)
பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை (இந்தக் கதையும் ஜெயமோகன் குறுநாவல்கள் நூலில் உள்ள பரிணாமம் நெடுங்கதையும் தொடர்புடையவை)
குறுகிய சுவையான (உண்மை & புனைவு?)கதைகள்

இரணியன் (எம்டன் மகன்)

‘வாடா பேசாமல்’ என்று அப்பா தாழ்ந்த குரலில் சொன்னார். அண்ணாந்து அவர் கண்களைப் பார்த்தேன். மனம் நடுங்கியது. அப்பா விடுவிடுவென்று நடந்தார். …. இதுவரை நான் செய்த ஒரு திருட்டுத்தனம்கூட அப்பா கண்ணிலிருந்து தப்பியதில்லை. கடவுள்கூட எனக்குத் துணையில்லை. அதெல்லாம் கதையில்தான் போலிருக்கிறது.

புன்னகையை வர வைத்த கதை

ஆயிரம் கால் மண்டபம் (கெட்டவங்க)

‘உனக்கு வயித்து வலியா சித்துட்டி?’
‘இல்லடா’ என்றபடி சித்திக்குட்டி அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டாள். ‘அதோ பாத்தியா? அந்தத் தூணிலே செலை இல்லை. உடஞ்சு போயிருக்கு. அதான் சித்தி அழுதேன்.’

பாவம்…

நாகம்

நாகம் நா பறக்க அவளைப் பார்த்தது. ‘உஸ்ஸ்’ என்று சீறியது.

‘உனக்கு என்ன வேணும் இப்பம்? சொல்லிப்போடும். குடுத்துக்களிச்சிடுதோம். நீரு சாமியில்லை. எங்கிளுக்க கொலத்துக்கு விழுந்த சாபம்…..’

ஆடு பாம்பே

தேவகிச் சித்தியின் டைரி

அம்மா உள்ளே எட்டிப்பார்த்தாள். ‘கரிதான் மிச்சம். கைகாரி’ என்றாள்.

சித்தி மூச்சு வாங்கினாள். கண்ணீர் உலர்ந்த முகத்தில் இமையின் மயிர் ஒன்று ஒட்டியிருந்தது. அமைதியாக இருந்தாள். வாந்தி எடுத்து முடித்துவிட்டவள் போலத் தெரிந்தாள்.

பழமை, பொறாமை வென்றது

ரதம் (சூரியனார் ரதம்)

சூரியனார் ரதத்தினூடே உளவும் கலைஞனின் பார்வை

அன்னை (கெட்ட கனவு)

எதிரே புதரின் கீழே ஈரச் சொ தசொதப்பில் ஒரு கரிய காட்டுப்பன்றி உட்கார்ந்திருந்தது. அதன் வயிற்றுக்குக் கீழே முண்டியடித்தபடி மென்மையான பன்றிக் குழவிகள் பால் குடித்தன. அதன் வால் சேற்றில் பாம்புபோல நெளிந்தது. அதன் வாய் சிவப்பாக இருந்தது. அது தன் குட்டிகளிலொன்றை மென்று தின்று கொண்டிருந்தது

அப்பாவும் மகனும்

அவள் எட்டிப் பார்த்து, ‘தோப்புக்கரணத்தை எப்ப வச்சுக்கலாம்?’ என்றாள்.

அவளைப் புறக்கணித்து, ‘அப்பா – சொல்லு’ என்றேன்.

பயல் ‘தூத்தூ மாணாம்’ என்றான் பிஸ்கெட்டை மென்றபடி.

பிஸ்கெட்டைப் பிடுங்கிவிட்டு ‘அப்பா’ என்றேன்.

பயல் கைநீட்டியபடி வீறிட்டு கால்களை உதைக்க ஆரம்பித்தான்

ரத்த பாசம்

வெள்ளம்

‘லேய் எட்டாண், இந்தப் புளுத்தானை ஏம்பிலே கூட்டிட்டு வந்தே?’ என்றான் ஒருவன்.

‘பாத்தா பன்னிக்குட்டி மாதிரி இருக்குதான்.’ மற்றவர்கள் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒருவன் கிண்டலுடன் ‘சாமி குளிக்கவா வந்தீய? செம்பு எங்கே?’ என்றான். அத்தனை பேரும் உரக்கச் சிரித்தார்கள்.

சுழி

தாண்டவம்

‘நாயீட மோனே’ என்று குழறிய குரலில் கூவியபடி துரட்டியை வீசினான். அடி துதிக்கை மீது பட்டது. யானை சட்டென்று உடலை நிமிர்த்தி, துதிக்கையை தேலே தூக்கிப் பிளிறியது. யானையின் குரல் அல்ல அது. அவன் அதுவரை கேட்டறியாத ஏதோ மிருகத்தின் ஒலி.

யானை கதை

பாடலிபுத்திரம்

பதறிய குரலில் ஏதோ புலம்பியபடி அஜாத சத்ரு விழித்துக்கொண்டான். அந்தப்புரத்து அறைகள் வழியாக ஓடினான். தன் மகனைத் தனக்குக் காட்டும்படி கெஞ்சினான். பெண் முகங்கள் எல்லாம் சதைப் பதுமைகளாக மாறின. சுவர்கள் உறைந்திருந்தன.

கலைந்த கனவு!

ஒன்றுமில்லை…

‘ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறார்கள்’ என்றார்.
‘என்ன ஆயிற்று டாக்டர்?’ என்றேன்.

அடப்பாவி சண்டாளா!

நதிக்கரையில்

‘என்ன தர்மமும் அதர்மமும்!’ என்று திடீரென்று திருதராஷ்டிரர் சீறினார். ‘வெல்பவன் தர்மவான். தோற்பவன் அதர்மி. இதுதான் உலகநீதி. இதுமட்டும்தான். வேண்டாம். பசப்பாதீர்கள். . . . . . .
நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள் தந்தையே. இது பாண்டவர் புகழ்பாடும் பரணி அல்லவா? அவர்கள் செயல்களையெல்லாம் தர்மத்தை நிலைநாட்டும் முயற்சிகளைத்தானே நீங்கள் சித்திரித்துள்ளீர்கள். வெற்றியின் பொருட்டு அவர்கள் செய்த அதர்மங்களைப் போர் தந்திரங்களாக சித்தரித்திருக்கிறீர்கள்தானே?’

மகாபாரத பின்புலம் கொண்ட சிறுகதை. இந்தச் சிறுகதை ஜெயமோகன் குறுநாவல்கள் நூலில் வரும் பத்ம வியூகம் குறு நாவலும் ஒரே கதைக்களத்தைக் கொண்டவை. இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு அடிக்குறிப்பிற்காக பத்ம வியூகம் கதையிலிருந்து பின்வரும் பத்தியை முற்கோள் காட்டியிருக்கிறேன். இது சுபத்திரை சொல்வதாக அமைந்திருக்கிறார்.

இனி குருவம்சத்தில் யாரும் நிம்மதியாகத் தூங்கமுடியாது. ஒரு போதும் போர் இவர்களை விட்டு விலகாது. வெற்றி மாலையின் ஏதோ ஒரு மலருக்குள் பூநாகம் காத்திருக்கிறது. தோற்றவர்கள் நிம்மதிநாகத் தூங்கலாம். அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை. காண்பதற்குக் கனவுகளும் மிச்சம் இருக்கும்.

குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகான மக்களின் மன எழுச்சியைக் காட்டுகிறது. தாய் தந்தையர் உணர்வைக் காட்டுகிறது.
நைனிடால்

படகோட்டி ஊகித்தவனாக ‘ஆழத்தைப் பார்க்கக்கூடாது மேம் சாப். மனம் கலங்கிவிடும். மனம் கலங்கி தினம் ஒருவராவது இதில் பாய்ந்து உயிரை விடுகிறார்கள்’ என்றான்.

மயக்கமா கலக்கமா கதை

மௌனராகம் மோகனையும் ரேவதியையும் பார்த்த மாதிரி இருந்தது. அடிச்சுக்காம தம்பதி சமேதரா வீடு போய் சேருங்கடே

வாரிக்குழி

அது மிகக் கவனமாக அஞ்சியஞ்சிக் காலெடுத்து வைக்கக்கூடியது. இப்போது சகஜமாக சதுப்புச் சேற்றில் நடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அதை உண்ணி லட்சுமி என்று எண்ணுவது சையதுக்குக் கஷ்டமாக இருந்தது. அது வேறு ஏதாவது காட்டு யானையோ, தவறாகப் பின்தொடர்கிறோமோ என்று ஐயம் ஏற்பட்டது.

ஆணை தேடல்

செண்பகயட்சி

‘ஹாவ் எ சிப்.’

‘நோ நோ நோ. அது மட்டும்தான் இதுவரை பழக்கமாகலை. . .’ என்றாள் சிரித்தபடி.

‘வேற எல்லாம்?’ என்று அவளைக் கூர்ந்து பார்த்தான்.

பேரப்பாத்து ஆசையா படிச்சேன். ஆனா கடைசி வரைக்கும் பேயே வரலைங்கிறேன்!

அழியாத மலர்

‘இங்கே என்ன செய்கிறீர்கள் குரு? புத்தகம், ஓவியம், இசை எதுவுமே இல்லை. . .’

‘அதையெல்லாம் விட்டுவிட்டுத்தான் இங்கு வந்தேன்’ என்றார் குரு.

‘எதற்கு?’

‘சாவதற்கு’ என்றார் குரு மிக சகஜமாக.

சின்னஞ்சிறு கண் மலர், செம்பவள வாய்மலர்!

திருமதி டென்

திருமதி டென் குழந்தையை உற்றுப் பார்த்துவிட்டு ‘ஆரோக்கியமாகத்தான் தெரிகிறாள்’ என்றாள்.

‘அமைதியான பெண்’ என்றாள் மதர்.

திருமதி டென் பிறகு குழந்தையின் பக்கம் திரும்பவில்லை.

உனக்கு எல்லாம் எதுக்கு கொழந்தை?

என் பெயர்

‘உனக்கு உயர்நிலை விஞ்ஞானியாகப் பதவி உயர்வா? அப்படி என்ன கண்டுபிடித்தாய்?’ என்று ஒருவன் கேட்டானாம். ‘என் துறைத் தலைவரின் உடம்பில் சொறியப்பட வேண்டிய இடம்’ என்றானாம் வென்ற புத்திசாலி.

காடேற்றம்

மரணக் கூச்சலுடன் சந்திரிகை கீழே விழுந்தாள். வலிப்புக் கண்டவள் போல கை, கால்களை உதைத்தபடி முறுகி நெளிந்து துடித்தபடி, ‘கொளுத்தாதீங்க! கொளுத்தாதீங்க! அம்மா! அம்மா! போயிடுதேன்! அம்மாகிட்ட போயிடுதேன்…’ என்று அலறினாள்.

பாவப்பட்ட பேய்

விரித்த கரங்களில்

கண்ணன் எழுந்தான். அவன் கண்களில் அபூர்வமாகவே தெரியும் முடிவின்மையின் கூரிய ஒளி எழுந்தது. ‘காண்டிவத்தை எடு பார்த்தா!’ என்று குரல் முழங்கியது. ‘பிருகத்காய மகழிஷியின் அந்தரங்க நெருப்பை எண்ணி உன் அம்பை விடு’.

திரும்ப ஒரு மகாபாரத பிண்ணனி கொண்ட, கண்ணனின் ஆளுமையைக் காட்டக்கூடிய ஒரு கதை.

கரிய பறவையின் குரல்

‘நீ மடையன். பொய்யன்’ என்று வீரிட்டேன். ‘உன் விஞ்ஞானம் கொல்லன் உலைக்குத்தான் லாயக்கு. உனக்கு என்ன தெரியும் மனித உடல் பற்றி? டேய் முட்டாள், மனித உயிர் எல்லையற்ற சதை வடிவங்கள் வழியாகப் பயணம் செய்யும் ஒரு முடிவின்மை. முட்டாள், நீ ஒருபோதும் அதைப் புரிந்து கொள்ளமுடியாது.’

டாக்டர் என் கோபத்தை எதிர்பார்க்கவில்லை. ‘டாக்டர்’ என்று பதறியபடி நர்ஸ் ஓடிவந்தாள்.

‘கிடைத்ததா?’ என்றார் டாக்டர்.

‘காம்போஸ்தான் கிடைத்தது. டைசோபாம்’ என்றாள் நர்ஸ்.

‘மூன்று சி.சி போடு.’

மரணப்படுக்கையில் இருப்பவனின் மனப் பிறழ்வு. இன்னும் ரெண்டு பக்கம் அதிகமா இருந்தா நாமளே எழுந்து போய் அவனைக் கொன்னு இருப்போம்.

இந்தச் சிறுகதையைக் குறிப்பிடும் பதிவு ஒன்று – http://solvanam.com/?p=34441

வாள்

‘உங்கள் ஐயங்கள் என்ன என்று கூற முடியுமா?’
‘திட்டவட்டமாகக் கூறுவது சிரமம். பொதுவாக ஒரு சந்தேக நிலை எனலாம்.’
‘அதாவது..’
‘நான் எல்லாவற்றையும் சந்தேகிக்கிறேன்.’
‘எல்லாவற்றையுமா? எந்த அடிப்படையில்?’
‘எல்லாவற்றையும் சந்தேகிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான்’

ஏன்டா.. ஏன்.. 😭

முகம்

‘ராஜப்பாவா? யார் அவர்?’

‘உன்னைக் கொண்டு வந்துவிட்டாரே அவர்தான்.’

‘வந்து …. அது ரோபோ இல்லையா?’

அறிவியல் புனைவு. பெரிதாக ரசிக்கவில்லை! சாரி!

விரல்

புதிய சொற்கள் மூலம் சைதன்யா தன் இயற்கையை ஒழுங்கு பண்ண ஆரம்பித்தாள். ‘மம்மு’ என்றால் உணவு. ‘அம்மா’ என்றால் மானுட குலம் மொத்தமும். காக்காவும் பூனையும் தங்கள் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டன. ‘மியா’ என்றால் பூனையின் தலைமையில் வரும் பிரபஞ்சத்தில் வாழும் நான்கு கால் பிராணிகள் எல்லாம். ‘கா’ என்றால் சிறகுள்ள ஜீவன்கள்…..

இந்தக் கதை முடியும் வரை புன்னகத்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு அப்பாவி அப்பன்களும் படிக்கவேண்டிய கதை!

வேறு ஒருவன்

கொச்சப்பி அவன் பலபிம்பங்களாகப் பிரிந்து பரவுவதாக உணர்ந்தான். ஒருவன் அந்தக் கதவை இழுத்து உடைத்து அவளைச் சுவர் மூலையில் வைத்து மிதித்துக் கூழாக்கினான். ஒருவன் அவளைக் கை வலிக்க அறைந்து முடியைப் பற்றி சுருட்டித் தூக்கி அடி வயிற்றிலிருந்து பீறிடும் வசைகளுடன் சில கேள்விகளைக் கேட்டான். ஒருவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவளை அறைந்து வெளியே தள்ளி கதவைச் சாத்தினான். ஒருவன் எழுந்து இருட்டு விலகாத ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து மறைந்தான்.

களவு கற்றாள். கற்றபின் மறப்பாளா!

மாபெரும் பயணம்

ஒரு மாடு வாழ்வில் எத்தனை தூரம் நடந்திருக்கும்? அதன் கால்களில் ஒரு மீட்டர் பொருத்திப் பார்க்க வேண்டும். தேசங்களை வலம் வரும் தூரம். குட்டிகள் நடப்பதேயில்லை. துள்ளிக் கொண்டேயிருக்கின்றன. அதற்காகவே பிறந்ததுபோல. அய்யோ மறந்து விட்டேனே என்று நினைவுகூர்ந்து மீண்ணும் ஒரு துள்ளல்.

அடிமாட்டு சாசனம்

தொழில்

‘ஆரு இங்க மாதேஸ்?’ என்றார்.

சட்டை போடாத ஒரு கறுப்பு ஆள் முண்டி மோதி முன்னகர்ந்து ‘நாந்தான் சாமி’ என்றான்.

டாக்டர் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

‘என்னய்யா தொழில் பன்றே?’

‘பன்னி சாமி’

‘என்னது?’

‘பன்னி மேய்க்கிறது…’

‘நெறய பன்னி இருக்கா?’

அந்த ஆள் விசித்திரமாகச் இளித்தபடி என்னைப் பார்த்தான்.

‘உன் பொஞ்சாதிக்கு மூளைக் காய்ச்சல். இறக்குமதி செஞ்ச மருந்து தரணம். ஒலு நாளைக்கு நாலு ரெஸ்பிரேட்டர் மாத்தணம். பத்து நாள் சிகிச்சை பண்ணினா, உயிர் பிழைக்க சான்ஸ் இருக்கு’

சமயோஜிதம். எனக்கு அந்த ஜோசியக்காரரைப் பிடித்திருந்தது!

தேவதை

‘அபாச்சா அந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பலர் முன்னிலையில் எதிர்பாராமல் அதைச் சொல்லியதை நீங்கள் மன்னிக்கவேயில்லை, இல்லையா?

நைஜீரியா சுதந்திரப் போராட்டம். அதனுள் ஒரு சுய பரிசோதனை.

இணைத்தில் படிக்க – http://www.jeyamohan.in/?p=6838

கண்ணாடிக்கு அப்பால்

அப்படி ஒரு பயங்கரமான நாட்டுராஜாவின் கதையை நானும் எதிர்பார்த்துத்தான் இருந்தேன். இனி ஒரு பெண்ணின் சோகக்கதை வரும். கோட்டைகள் முழுக்க அரண்மனைகள் முழுக்க ரத்தமும்
கண்ணீரும் நாறும் கதைகள்தான் நிரம்பியிருக்கின்றன.

😱😱😱😱😱

அமானுடக் கதை!

ஏறும் இறையும்

‘ஆரபியும் தேவகாந்தாரமும் இரட்டைக் குழந்தைகள் தெரியுமா?’

‘எனக்கு சங்கீதம் அவ்வளவா தெரியாது’

‘தெரிஞ்சிக்குங்கோ.’

‘கேட்கிறப்ப ஒரே மாதிரித்தான் இருக்கு.’

‘எங்க அண்ணாவுக்கு எப்படிப் பைத்தியம் புடிச்சது தெரியுமா?’

பாலச்சந்தரும் சிந்து பைரவியில் இதை அடிப்படையாக வைத்து ஒரு காட்சி வைத்திருந்தாரே!

பசும்புல்வெளி

‘ஆம்பிளை, அதுவும் சின்ன வயசுன்னா உனக்கு மனம் இளகிடுமே…’

‘ஏன் மேல சொல்றது? பாக்க கம்பீரமா இருக்கான். கல்யாணமும் ஆகலை. நல்லா பேசறான்…. என்ன?’

உயர்வு மனப்பான்மையும், பதவி போதையும்

கடைசி முகம்

மீண்டும் அவள் பின்னால் வந்தாள். ‘நீ தப்பப்போவதில்லை. அது எனக்கு உறுதியாகத் தெரியும். தாயின்மீது அதிகமான பாசம் கொண்ட எவரும் பெண்களிடமிருந்து தப்ப முடியாது.’

அசத்தலான அமானுடக் கதை. எனக்குப் பிடித்திருந்தது!

கூந்தல்

சற்று நேரம் கழித்து ஏதோ தீர்மானித்தவள் போலப் பாய்ந்து எடுத்து கண்ணாடி முன்பு சென்று கத்தரிக்கோலை எடுத்து தன் கூந்தலை வெறுப்போடு முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டு குரோதத்துடன் பார்த்து நிற்கிறாள். ஓரிரு முறை கத்திரிக்கோலைப் பார்த்துவிட்டு சட்டென்று வேகத்துடன் அதை வெட்டுகிறாள்.

மசிறே போச்சு!

சிலந்திவலையின் மையம்

இருபதடி தோன்றியும் ஊற்றுப் பறியவில்லை. ‘அவளுக்கு கரிநாக்கு வேற என்ன? மூதேவி.’ அப்பா சொன்னார். ‘நாற் அப்பவே சொன்னேன்…’ என்று ஆரம்பிப்பதற்குள் அப்பா கையில் பனமட்டையுடன் பாய்ந்தோடி வந்தார். அவர் சமையலறைக்குள் புகுவார் என்று அம்மா எதிர்பார்க்கவில்லை. மண்டையில் ஓங்கி அடித்தபடி ‘சாகு சனியனே’ என்றார் அப்பா.

பிடிவாதக்கார அப்பா. தக்காளி இந்த ஆளைக் கண்டால் டார்த்தீனியம் அப்பா நினைவிற்கு வருகிறார்.

முடிவின்மையின் விளிம்பில்

பிரியமுள்ள சகோதரா, தயவு செய்து இந்நூலைப் படிக்காதே, இது பைத்தியத்தை உருவாக்கும் மாயநூல். இதில் ஒரு பக்கத்தை வாசித்தவர் முழு நூலையும் படிக்காமலிருக்கமாட்டார். முழு நூலையும் படித்தவர் மீண்டும் சமநிலைக்குத் திரும்பி வரமுடியாது. தலைமுறை தலைமுறையாகப் பைத்தியங்களை உருவாக்கி வரும் கொடூரமான நூல் இது.

சரித்திர பின்புலமுள்ள கதை. சொல்லப்போனல் கதைக்குள் கதை. இரண்டு கதை வருகிறது. எக்கச்சக்கமான ஒரு இறுதி முடிவுடன்.

சேறு

‘வல்லதும் வேவிச்சுதா?’ என்றாள் குருசி.
‘இல்ல.’
‘அய்யோ யேசுவே. அப்பம் பிள்ளியளுக்கு என்ன குடுத்தது?’
‘இங்க ஒண்ணும் இல்ல’
‘அய்யோ மாதாவே. பின்னிய குடலு வறண்டா இப்பிடி இருக்குதுக? இந்தாருங்க கொறெ கெழங்கு இருக்கு. உடன் வேவிச்சு குடுக்கணும்.’

காக்க காக்க.. மானம் காக்க..
ஆண்டு அடங்கிய குடும்பத்தின் கதை

ஊசல்

ஸ்ஸ்ஸ்ஸப்பா

நச்சரவம்

ஒரு கோயில் என்பது வினோதமான புராதனமான ஒரு நூல். அதன் அட்டையை மட்டுமே நாம் சாதாரணமாகப் பார்க்கிறோம். உள்ளே நாமறியாத எத்தணையோ விஷயங்கள் விபரங்கள் குவிந்து கிடக்கின்றன.

….

நான் மலையனைத் தேடிச் செல்வதும் குறைந்துவிட்டது. முக்கியமான காரியம் செலவுதான். மலையன் நான் அவருக்காகச் செலவு செய்வேன் என்பதை அறிந்து கொண்ட பிறகு புகையிலை, கருப்பட்டி, டீத்தூள் வாங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

சும்மா நச்சுன்னு இருக்கு….
நன்றி: பாண்டியன், புதுக்கோட்டை https://kadaisibench.wordpress.com/about/ 

என் பெயர் சிவப்பு - ஆதவ் விமர்சனம்

நீங்கள் ஒரு மனிதரைக் கொன்ற(தாக வாதித்து பின்னர் அது குறித்து கருத்து வேறுபாடு கொண்ட நேரத்தை எண்ணிப் பாருங்கள் 
ஆனால் அல்லாஹூவோ நீங்கள் மறைத்து வைத்ததை வெளிப்படுத்தக் கூடியவனாவான்      
-  அதிகாரம் 2 அல்பக்கரா 72
குருடரும் பார்வையுடையவரும் சமமானவரல்ல
- அதிகாரம் 35 அல்ஃபாதிர் 19
கிழக்கும் மேற்கும் அல்லாஹூவே உரியன
- அதிகாரம் 2 அல்பக்கரா 115
குர் ஆனின் இந்த மூன்று வாசகங்களோடு ஓரான் பாமுக்கின் இந்நாவல் ஆரம்பிக்கிறது. நுண்ணோவியங்களின் வீழ்ச்சியைப் பற்றிய நாவல் என்றாலும் இந்த மூன்று வாசகங்களின் மேலேதான் நாவல் பயணிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் கிழக்கில் ஏற்படும் மேற்கத்திய ஆதிக்கத்தை, தமது பண்டைய மதகூறுகளடங்கிய ஓவியபாணியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஓவியர்களைப் பற்றியும், இஸ்லாமிய மதத்தின் ஓவிய கட்டுப்பாடுகள், ஒட்டாமன் கலாச்சாரம், அரசு, குற்றம் மற்றும் காதலும் காமமும் குறித்த விசாலமான பார்வையும் நாவலின் கொடிநரம்புகளென பிரித்தெடுக்கவியலாதபடி பரவிக்கிடக்கிறது.
ஓவியங்கள் வெறும் ஓவியங்களாக மட்டும் இருப்பதில்லை, அது தான் சார்ந்த மொழியையோ இனத்தையோ அதன் பின் மறைந்திருக்கும் சங்கேத பரிவர்த்தனைகளையோ குறிப்பிடாமல் இருப்பதில்லை, (எனக்கு டாவின்ஸி சட்டென நினைவுக்கு வருவார். கூடவே ஆதி சடங்குகள் அறியப்பட்ட சாவெட் மற்றும் லாஸ்காக்ஸ்). அவரவருக்கென ஒரு பாணி (style) இருக்கிறது. உதாரணத்திற்கு தஞ்சாவூர் ஓவியம் என்பது ஒரு பாணி, பாரசீக நுண்ணோவிய பாணியிலிருந்து வந்திருந்தாலும் மொகலாயர் ஓவியம் இன்னொரு பாணி, இருப்பினும் பெரிதும் நாம் விரும்புவது மேற்கத்திய தத்ரூப பாணிகளையே. இதன் ஆக்கிரமிப்பில் வீழும் ஒட்டாமன் பாணி ஓவியங்களைப் பற்றி மிக நுணுக்கமாகப் பேசுகிறது நாவல். நாவலின் ஒவ்வொரு எழுத்துக்களும் நுண்ணியதாக ஓவியத்துவமாகவே இருக்கிறது. ஓவியங்களின் விவரணைகள் நம்முன் காட்சிபடுத்துவது அந்நூற்றாண்டைய புராண கதைகளையும், அரச நம்பிக்கைகளையும் கலாச்சார விழுமியங்களையுமே...  இதன் கதை சொல்லப்பட்ட விதமும் வித்தியாசமாக இருக்கிறது. சுமார் பன்னிரெண்டு பாத்திரங்களின் கதை சொல்லலோடு பயணிப்பதாக அறிந்தாலும் நாவலின் கதை சொல்லிகள் வெறும் மாந்தர்கள் மட்டுமல்ல; கொலைசெய்யப்பட்ட பிரேதம், மதகட்டுப்பாட்டு காவலர்களை எதிர்க்கும் நாய், ஒரு செல்லா காசு, மரம், மரணம், சாத்தான் என அத்தனை பாத்திரங்களும் தங்கள் மீதான தர்க்கரீதியிலான நியாயங்களைப் பற்றி பேசுகின்றன. பின்னவீனத்துவ பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் பாத்திரப்பிணைப்பு முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் பிறகு சவுகரியமாகவும் பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையிலும் நாவல் சற்றே பெரியதாக இருப்பதால் கதை என்று நானறிந்தவற்றைப் பகிர்கிறேன்.
ஒரு சடலத்தின் பார்வையிலிருந்து நாவல் துவங்குகிறது. தான் எதற்காகவோ கொல்லப்பட்டிருக்கிறோம் எனும் விவாதத்தில் தன்னை அது அடையாளப்படுத்துகிறது. ”வசீகரன் எஃபெண்டி” என்றழைக்கப்பட்ட அந்த சடலம் அதற்கு முன்பாக நுண்ணோவியத்தின் பக்க ஓரங்களில் மெருகு தீட்டும் மெருகோவியனாக ஒட்டாமன் நுண்ணோவிய கலைக்கூடத்தில் இருந்தது. கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் கிடக்கும் இந்த சடலத்தை மையப்படுத்தியே கதை வெகு சுவாரசியமாக நகர்கிறது.
பதினாறாம் நூற்றாண்டு இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்தை சுல்தான் மூன்றாவது மூரத்  (1574- 1595) ஆண்டு வருகிறார். சுல்தானின் ஆணைப்படி ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவிற்கான திருவிழா மலர்களை இஸ்தான்புல் ஓவியக்கூட தலைமை ஓவியரான குருநாதர் ஒஸ்மான் தலைமையில் நுண்ணோவியர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள், அதுமட்டுமல்ல, சுல்தான், வெனீசிய மன்னருக்கு இரகசியமாக தனது பெருமைகளையும் கீர்த்திகளையும் மற்றும் தனது உருவப்படமும் அடங்கிய ஓவியச்சுவடி ஒன்றைத் தயாரித்து பரிசளித்து நட்பு கொண்டாட விருப்பம் கொள்ள நினைக்கிறார். அது வெனீசிய பாணியிலான ஓவியங்களடங்கிய சுவடியாகவும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவும் தயாரிக்க வேண்டுமென நுண்ணோவியர் எனிஷ்டே எஃபெண்டியிடம் கட்டளையிட்டிருக்கிறார். எனிஷ்டேவும் தனக்குக் கீழ் “நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ், மற்றும் வசீகரன்” எனும் புனைப்பெயர்களைக் கொண்ட நுண்ணோவியர்களை தத்தமது வீட்டிலேயிருந்தே பணிபுரிய வைக்கிறார். இதில் “வசீகரன்” என்பவன் தான் அடையாளம் தெரியாத ஒரு கொலைகாரனால் கொல்லப்பட்டிருக்கிறான். ஒட்டாமன் நுண்ணோவியங்கள் ஒரு ஆல்பம் போல தயாரிக்கப்படுகின்றன. அவை ஒருவரால் மட்டும் வரையப்படுவது கிடையாது. குழுக்களாக இணைந்தே வரையப்படும், புத்தக ஓரங்களில் மெருகு தீட்டுவது மெருகோவியனின் வேலை, வசீகரனுக்கு ஓவியம் தீட்டுவதை விடவும் மெருகு தீட்டுவதே பெரும்பாலான வேலை.
1591 ஆம் வருடம் கருப்பு எஃபெண்டி எனும் எழுத்தோவியன் தனது அம்மா வழி மாமாவான எனிஷ்டேவின் கடிதம் கண்டு பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு இஸ்தான்புல் திரும்புகிறான். கருப்பின் மாமா எனிஷ்டே எஃபெண்டியின் மகளான ஷெகூரேவை ஒருதலையாகக் காதலித்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்தான்புல்லை விட்டுச் சென்றவன் வசீகரன் எஃபெண்டி கொலை செய்யப்பட்ட (அல்லது மற்றவர்கள் பார்வையில் காணாமல் போய்விட்ட) பிறகு மூன்று நாட்கள்  கழித்து அப்பொழுதுதான் திரும்பி வருகிறான். எனிஷ்டே தமக்கு உதவியாக கருப்பை நியமிக்கிறார், மட்டுமல்ல ஒருவேளை சுவடி தயாரிப்பதற்குள் தாம் இறந்துவிட்டால் அதனை முடிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்
இச்சமயத்தில் நுஸ்ரத் எனும் ஹோஜாக்கள் இஸ்லாமிய மதகட்டுப்பாடுகளையும், குரான் நம்பிக்கைகளையும் போதித்து, அதற்கெதிராக வேலை செய்யும் நுண்ணோவியர்கள், காபி இல்லத்தினர்கள் ஆகியோரை எதிர்க்கிறார்கள். காபி அருந்துவது தமது கோட்பாடுகளுக்கு எதிரானது எனவும், அது உள்ளிறங்கி தூங்கிக் கிடக்கும் பிசாசை முழிக்க வைக்கிறதாகவும் நினைக்கிறார்கள். இஸ்தான்புல் நகரத்தில் இருக்கும் ஒரு காபி இல்லத்தில் நுஸ்ரத்திற்கு எதிரான பிரச்சாரம் துவங்குகிறது. கதைசொல்லி எனும் திருநங்கை நாளுக்கொரு ஓவியத்தை மாட்டி அதன் வழியே நுஸ்ரத்தை கிண்டலும் கேலியுமாகப் பேசுகிறாள். நாவலில் இந்த கதைசொல்லி வரும் அத்தியாயங்களும் அது சொல்லும் கதைகளும் அபாரமானவை.
எனிஷ்டேவின் மகள் ஷெகூரே ஒரு அழகான பெண். ஒரு ஸ்பாஹி குதிரை வீரனைத் திருமணம் செய்து “ஓரான்” “ஷெவ்கெத்” எனும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த குழப்பம் மிகுந்த தாய். நான்கு வருடங்களுக்கு முன்பு போருக்குச் சென்ற அவனது கணவன் வீடு திரும்பாததால் தனது மாமனார் வீட்டிலிருந்த மைத்துனன் ஹஸனின் அடாவடி தாளாமல் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டவள். கருப்புக்கும் அவளுக்குமிடையேயிருந்த காதல் யூதப்பெண்மணியான “எஸ்தர்” மூலமாகத் மீண்டும் துளிர் விட ஆரம்பிக்கிறது. ஷெகூரே மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி விடுகிறான் கருப்பு.. (எனிஷ்டே வீட்டில் ஹாரியே எனும் அடிமைப்பெண் உண்டு. அவளுக்கும் எனிஷ்டேவுக்கும் ஒரு கனெக்‌ஷன் ஓடிக்கொண்டிருப்பதை ஷெகூரே அறிந்து கொள்கிறாள்)
இதனிடையே எனிஷ்டே வீட்டில் யாருமில்லாத பொழுது கொலைகாரன் நுழைந்துவிடுகிறான். அவனுக்கும் எனிஷ்டேவுக்குமான விவாதத்தின் முடிவில் கருப்பு பரிசளித்த ஒரு மங்கோலிய மசிக்குடுவையால் எனிஷ்டேவின் தலையில் அடித்தே கொல்கிறான் கொலைகாரன். கொலைகாரன் எனிஷ்டேவைக் கொல்லும் போது இரகசியச்சுவடியின் இறுதி ஓவியத்தை தனது பாவத்தின் வடிகாலாகக் கருதுகிறான், அதனை எடுத்தும் சென்றுவிடுகிறான். ஷெகூரேவும் ஹாரியேவும் திரும்பி வந்து நடந்ததை உணர்ந்து எனிஷ்டே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டால் தனது மைத்துனன் ஹஸன் தன்னை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு இழுத்துச் சென்றுவிடுவான் என்றறிந்து உடனடியாக அவசராவசரமாக கருப்பைத் திருமணம் செய்துகொள்கிறாள். இரண்டு நாட்கள் கழித்து எனிஷ்டே இறந்ததை அறிவித்ததோடு நில்லாமல் சுல்தானுக்கு மிக வேண்டியவர் என்பதால் அரண்மனையிலும் போய்ச் சொல்லுகிறான் கருப்பு. சுல்தான் கோபமுற்று கொலைகாரன் யார் என்பதை மூன்று நாட்களுக்குள் கண்டறிய கருப்பை உத்தரவிடுகிறார். இச்சூழ்நிலையில் வசீகரனைக் கொன்ற கொலைகாரன் தான் எனிஷ்டேவையும் கொலை செய்திருக்கக் கூடும் ; அது தமக்குள் பணிபுரியும் நுண்ணோவியர்களுள் ஒருவராகத்தான் இருக்கும் என்று சந்தேகப்படுகிறான் கருப்பு. அதற்கேற்ப ஒரு “க்ளூ” கிடைக்கிறது. சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இரகசியச் சுவடியின் கடைசி ஓவியம் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதிகாரணமாக இருக்கிறது. . முடிவில் நுண்ணோவியர்களான “நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ்” ஆகியோரா அல்லது நுஸ்ரத் ஹோஜா குழுவைச் சார்ந்தவர்களா அல்லது குருநாதர் ஒஸ்மானா யார் அந்த கொலையாளி என்று தெரிந்துவிடுகிறது.
நாவலின் பாதை பத்து விரல்களின் விரி கோணங்களாக நீண்டு ஒரு சேர ஓரிடத்தில் குவிகிறது. நுண்ணோவியம் என்ற பெயருக்கேற்ப நுண்ணெழுத்துக்களால் நிரம்பப்பட்ட இந்நாவல் ஒட்டாமன் பாணி ஓவியங்களை வெகு விபரமாக, நுணுக்கமாக, ஆராய்கிறது. “நான் மரமாக இருக்க விரும்பவில்லை, அதன் பொருளாக இருக்க விரும்புகிறேன்” எனும் மரம் கதை சொல்லலில் ஒட்டாமன் ஓவியங்கள் தத்ரூபங்களை விரும்புவதில்லை, அது தனக்கான பொருளை மட்டுமே உணர்த்துவதாக இருக்கிறது. வெனீசிய ஓவியர்களைப் போல யாருடைய பார்வையிலிருந்தும் உதாரணத்திற்கு ஒரு நாவிதனோ, பண்டம் விற்பவனோ, ஒரு நாயின் பார்வையிலிருந்தோ வரையப்படுவதில்லை, அது அல்லாஹூ அவர்களின் பார்வையிலிருந்து வரையப்படுகிறது. இதற்கு நாரை சொல்லும் “ஆலிஃப்” குட்டிக்கதையான ஓவியர் இபின் ஷகிர் கதை அல்லாஹூவின் பார்வை என்பது என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது. நாவலினூடாக எழும் ஓவியங்கள் குறித்த கேள்விகள் குறிப்பாக குருநாதர் ஒஸ்மான் எழுப்பும் ”பாணி”, ”காலம்”, “குருட்டுமை” போன்ற கேள்விகள் நுண்ணோவியர்களின் ”ஆலிஃப்”, “பே”, “ஜிம்” எனும் மூன்று குட்டிக்கதைகளின் மூலம் நுண்ணோவியங்கள் குறித்த விசாலமான பார்வையை அறிய முடிகிறது. இந்த குட்டிக்கதைகள் ஓவியத்தையும், காதலையும் இணைக்கிறது. இருபெரும் முனைகள் இணைவதால் ஏற்படும் கலக்கம், பாணி, காலம், மற்றூம் குருட்டுமை போன்றவற்றின் வடுக்களாக ஓவியங்கள் மாறிவிடுவதை உணரமுடிகிறது. ஓவியம் என்பது வெறும் வண்ணங்களின் கலவையல்ல, அது வாழ்வின் தாழ்வாரங்களில் ஏற்படுத்தும் பிரமிப்பு, பயம், மனக்கிளர்ச்சி, பிசாசின் தூண்டலில் அழுகிப் போகும் வக்கிரம் நிறைந்த மனம், மற்றும் இவற்றின் ஒரு தொகுப்பு எனலாம்.  ஒட்டாமன் ஓவியர்கள் தமக்கென்று எந்தவொரு பாணியையும் உருவாக்குவதில்லை, பாரசீக பாணியிலான இவற்றை பெரும்பாலும் பண்டைய ஓவியங்களிலிருந்தே நகலெடுக்கிறார்கள். ஓவியர் எவரும் தமது கையொப்பமும் இடுவதில்லை, அது தனிப்பட்ட முறையில் தமக்கென ஒரு பாணியை உருவாக்கும் என்றே கருதுகிறார்கள். அதனாலேயே மேற்கத்திய ஓவியங்களை வெறுக்கிறார்கள். மிக தத்ரூபமாக வரையப்பட்ட அவை அல்லாஹூவின் படைப்பை தானே செய்தவனாக ஆகிவிடுவதாகக் கருதுகிறார்கள். இஸ்லாமிய மதப்படி உருவசித்திரங்கள் மதத்திற்கு எதிரானவை என்பதால் தத்ரூபமான உருவச்சித்திரங்களை எதிர்க்கத் தொடங்குகிறார்கள்.
நுண்ணோவியங்களின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளே நாவலின் மையத்தில் சலனமின்றி ஓடும் நதியைப் போல ஓடிக் கொண்டிருப்பதால் ஓவியம், இஸ்லாமியம் ஆகியவற்றின் வழியே கலைஞர்களின் இருப்பு குறித்த தகவல்களை நிறைய பெறமுடிகிறது. ஹெராத்தின் பண்டைய ஓவிய மேதைகளால் ஆரம்பிக்கப்பட்டு நிலையாக நிறுவப்பட்டிருந்த இஸ்லாமிய நுண்ணோவியக் கலை மேற்கத்திய தத்ரூபமான உருவச்சித்திரங்களின் கவர்ச்சியில் முடிவுக்கு வந்துவிடும் என எனிஷ்டே அஞ்சுவதற்கும் காரணங்கள் உள்ளன. வெனீசிய பயணத்திற்குப் பின்னர் ஸெபாஸ்டினோ எனும் ஓவியன் மூலமாக வரையப்பட்ட சுல்தான் மூரத்தின் ஓவியமே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. (பின்னர் இது குருநாதரால் நகலெடுக்கப்பட்டு குருநாதருக்கும் எனிஷ்டேவுக்குமுண்டான உறவில் விரிசல் ஏற்படுகிறது) ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டுவிழாவிற்குப் பிறகு மேற்கத்திய பாணியிலான ஓவியங்களே இனி வரையப்படும் என சுல்தான் எண்ணுவதை நுண்ணோவியர்கள் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் எனிஷ்டே தயாரிக்கும் இரகசியச் சுவடி பாரசீக மற்றும் வெனீசிய கலவையாக இருக்கிறது. எனிஷ்டேவுக்கோ அல்லது மற்ற ஓவியர்களுக்கோ தத்ரூபமாக வரையத்தெரியாது என்பதைவிட அம்மாதிரியான ஓவியங்களைப் பார்த்தது கூட கிடையாது.
எனிஷ்டேவுக்கும் கொலைகாரனுக்கும் நடக்கும் விவாதங்கள், மூன்று நுண்ணோவியர்களின் குட்டிக்கதைகள் (நாவல் முழுக்க நிறைய குட்டிக்கதைகளும், ஓவியக்கதைகளும் நிரம்பிக்கிடக்கின்றன), குருநாதர் ஒஸ்மான் நுண்ணோவியர்களையும் ஓவியங்களையும் விளக்கும் இடங்கள், போன்றவை மிக முக்கியமானவை. வெனீசிய ஓவியம் குறித்து ஓரிடத்தில் சொல்லப்படுவது இங்கே குறிப்பிட்டால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.
”வெனீசிய கலைஞர்களின் உருவரை ஓவியங்களைப் பார்த்தபிறகு நமக்கு புரியத்தொடங்கும் விஷயங்கள் பயங்கரமானவை, உதாரணத்திற்கு ஓவியங்களில் கண்கள் என்பவை இனிமேலும் வெறுமனே முகத்தில் இருக்கும் ஓட்டைகளாக இருக்கப்போவதில்லை, பதிலாக நமது கண்களைப் போலவே ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல உறிஞ்சுக்கொள்ளும் கிணற்றைப் போல இருக்கவேண்டும். உதடுகள் என்பவை முகத்தின் மத்தியிலிருக்கும் ஒரு கீறலைப் போல காகிதத்தைப் போல தட்டையாக இனிமேலும் வரையப்படப்போவதில்லை, பதிலாக உணர்ச்சிகளின் மையப்புள்ளிகளாக - ஒவ்வொன்றும் சிவப்பின் ஒவ்வொரு சாயலில் - நமது சந்தோஷங்களையும் துயரங்களையும் மிக இலேசான சுருக்கத்திலும் விரிதலிலும் பாவங்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியதாக இருக்கவேண்டும். நமது நாசிகள் இனிமேலும் முகத்தை நடுவிலே பிரிக்கின்ற ஒருவகை சுவர்களாக இருக்காமல் உயிர்ப்போடு ஒவ்வொருவருக்கும் தனித்துவ வடிவங்களில் அமைந்த அங்கங்களாக இருக்கவேண்டும்”
நாவலில் ஏராளமான கதை நிகழ்கால நூல்களின் மேற்கோள்கள் இருக்கின்றன. தவிர நாவலாசிரியர் ஒரு ஓவியத்தை வர்ணிக்கும் விதத்தைப் பார்க்கும் பொழுது அவரும் ஒரு ஓவியராக இருக்கக் கூடும் எனும் சந்தேகம் வலுக்கிறது. ஒரு பொருளை வரைவது என்பது மேம்போக்கான பார்வையில் அல்லாமல் ஆழ உணர்ந்து வரைபொருளின் அம்சங்கள், தரம், வர்ணம் ஆகியவற்றின் வழியே அது வலியுறுத்துவதைத் தெளிவாகக் காட்டவேண்டும். ஒரு குதிரை பற்றிய வர்ணிப்பில்,
”ஒரு நல்ல குதிரைக்கு கவர்ச்சியான முகமும் கஸல்மானின் விழிகளும் இருக்கவேண்டும். அதன் செவிகள் கோரைப் புல்லைப்போல் நேராக, நல்ல இடைவெளி விட்டு இருக்கவேண்டும்; ஒரு நல்ல குதிரைக்கு சிறிய பற்களும், வட்டமான நுதலும், மெல்லிய புருவங்களும் வேண்டும்; அது உயரமானதாக, நீண்ட பிடரியுடையதாக மெலிந்த இடை, சிறிய நாசி, சிறிய தோள்கள், அகன்ற தட்டையான முதுகு கொண்டதாக இருக்கவேண்டும்; அதன் தொடைகள் முழுமையானதாக, நீண்ட கழுத்துடையதாக, அகன்ற மார்புடையதாக, விளங்கவேண்டும், சாவதானமாக நிதான நடையிட்டுச் செல்லும்போது அது இரு புறங்களிலும் நின்றிருப்பவர்களை வணங்கியபடி செல்வதைப் போல தோற்றமளிக்கும்படி பெருமிதமும் கம்பீரப்பொலிவும் கொண்டதாக இருக்கவேண்டும்.”
காதல் குற்றம் ஆகிய இரட்டை நுழைவாயிலின் ஒரு கதவு ஓவியமும் மறுகதவு மதமுமாக இருக்கிறது. கருப்பு - ஷெகூரே திருமண நிகழ்வுகள் நாவலின் போக்கின்படி கொஞ்சம் அவசரமான திருமணம் எனினும் எழுத்துக்கள் அவசரமாகவே பயணிக்கின்றன. அதேபோல குருநாதர் ஒஸ்மான், அரண்மனை கருவூலத்தில் ஓவியங்களைப் பார்வையிடும் அத்தியாங்கள் லேசாக சலிப்பூட்டுகின்றன. அவை புறவெளிப்பாடாக ஓவியத்தை நிலைநிறுத்த முயன்றாலும் அந்நிய தோற்றத்தால் நிலையிழந்து என்னால் காட்சிபடுத்த முடியாமல் போய்விடுகிறது. குருநாதர், மாபெரும் ஓவியர் பிஸ்ஹாத்தின் ஊசியால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளும் போதோ அல்லது கொலைகாரனை மற்றவர்கள் குருடாக்கும் பொழுதோ அந்த ஊசியின் முனை நம் கண்களைக் கூசுவதையும் சுல்தானின் வருகையை அவ்வளவு பெரிய விவரமாக வர்ணிக்காவிடினும் ஒரு பெருமிதத்தையோ, மரியாதையையோ உணரமுடிகிறது!!!
மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இந்நாவலைத் திறம்பட மொழிபெயர்த்திருக்கிறார் என்று ஒற்றையாகச் சொல்லிவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லை. ஒரு இஸ்லாமிய நாவலான “என் பெயர் சிவப்பு”ஐ வாங்குவதற்கு எனக்கு இரண்டு தயக்கம் மிகுந்த காரணங்கள் இருந்தன.
1. அரேபிய மற்றும் உருது வார்த்தைகள் மிகுந்த சில சிறுகதைகள் சலிப்பைத் தந்தன. அவர்களின் சடங்குகள், மதகோட்பாடுகள், கொள்கைகள், சில வழக்கமான வார்த்தைகள் யாவையும் மனதில் நிறுத்தி படிக்க என்னால் இயலாது. முற்றிலும் அந்நியமொழிச் சூழல் மிகுந்த எழுத்துக்களுக்கு ஒவ்வாதவன் நான்.
2. மொழிபெயர்ப்பு நாவல் என்று இதுவரை எதுவும் படித்தது கிடையாது. (அன்னா கரினீனா படித்தபிறகுதான் அது டால்ஸ்டாயினுடையது என்றே தெரியும். அதெல்லாம் பழைய காலம்!!!)
கூடுமானவரையிலும் அரேபிய/உருது அல்லது இஸ்லாமிய வார்த்தைகளைத் தவிர்த்து, சுத்தமான தமிழில் பெரும்பாலும் (அது சிலசமயம் அதீதமாகிவிட்டதோ என்றூ கூட தோணுமளவுக்கு) குறிப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார். எலகண்ட் எஃபெண்டி என்பதை வசீகரன் எஃபெண்டி என பெயரிலும் கூட மாற்றம்! பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்களில் பெயர்களை மொழிபெயர்க்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். மிகச்சிறப்பாக, ஒரு அந்நிய நாவல் எனும் அடிமனதில் அடங்கிக் கிடக்கும் எண்ணத்தை மெல்ல கொன்று, நாவலின் தரத்தை மாற்றாமல் தந்திருப்பது பாராட்டுக்குரியது! ஒரு சில தவறுகள் (ஷா தாமஸ்ப், ஷா தமாஸ்ப்//) எழுத்துப்பிழைகள் இருப்பினும் பிரபஞ்சத்தூசிகளைப் போல காணாமல் போய்விடுகின்றன.
இந்நுண்ணிய நாவல் முடித்த பிறகு பண்டைய கால கட்டத்தில் நடக்கும் வரலாற்று நாவல்களைப் படிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.The Enchantress of Florence - சல்மான் ருஷ்டி, குர்அதுல்துன் ஹைதர் எழுதிய அக்னி நதி, கிம் ஸ்டான்லி ராபின்ஸனின் The Years of Rice and Salt போன்ற சில நாவல்கள் தேடியதில் கிடைத்தது!!  (அக்னிநதி மட்டும் தமிழில் கிடைக்கிறது. ) இவற்றில் எதாவது மொழிமாற்றம் செய்திருந்தால் சொல்லவும், அல்லது இதைப்போல நாவல்களைப் பரிந்துரைக்கவும்!!

நன்றி: https://www.blogger.com/profile/04815893085591955862