Showing posts with label மதிப்புரை. Show all posts
Showing posts with label மதிப்புரை. Show all posts

Thursday, 16 October 2014

ஆர்.கே. சண்முகம் செட்டியார்


சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்பவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.

பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். அவர்கள்: நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; சட்ட அமைச்சர் அம்பேத்கர். அம்பேத்கர் தனக்கு நிதி போர்ட்ஃபோலியோ கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று ஓரிடத்தில் படித்தேன். (கிறிஸ்டோஃபர் ஜாஃப்ரிலாட் எழுதிய Dr Ambedkar And Untouchability: Analysing And Fighting Caste என்ற புத்தகத்தில் என்று நினைக்கிறேன்.) ஆக, அம்பேத்கரை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கொண்டுவந்து இவருக்கு நிதித்துறை என்னும் மிக முக்கியமான பொறுப்பை நேரு கொடுக்கக் காரணம் என்ன? இவர் பொருளாதாரத் துறையில் என்ன சாதித்திருந்தார்?

அமைச்சரவை தொடர்பாக காந்தியிடம் ஆலோசிக்காமல் நேருவும் படேலும் முடிவெடுத்திருக்க மாட்டார்களே? காந்திக்கு சண்முகத்தைத் தெரியுமா? காந்தி என்ன சொல்லியிருப்பார்?

நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பியது ஏன்? காங்கிரஸ்காரர்கள் என்ன கலகம் செய்து இவரைத் துரத்தினர்?

இந்த மனிதர் பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள் மிகக் குறைவே. சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஒரு பிஎச்.டி ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் ஜனரஞ்சக வடிவத்தை தமிழ்ப் புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிடப் போகிறது.

அதனை எடிட் செய்யும்போதுதான் இந்த மனிதரின் பல குணங்கள், சாதனைகள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாளர்களுல் இவர் ஒருவர். ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை.

இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்னை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் முகமது அலி ஜின்னா போல, ஆங்கிலேயர்களுடன் கருத்து வேற்றுமை இருந்தாலும், தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆங்கில அரசு சார்பில் இவருக்கு ஏதாவது ஒரு பதவி இருந்துவந்தது. ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்கவேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். உதாரணமாக அட்லாண்டிக் பிரகடனம் தொடர்பாக இவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுடன் பேசியது.* (இதுபற்றி தனியாக எழுதவேண்டும்.)

இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தரவேண்டிய Balance of Payment சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

கோயமுத்தூர் பகுதியை தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் மிக முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கோவையில் SIMA, SITRA போன்ற அமைப்புகளை உருவாக்கியதில் இவருக்குத்தான் முக்கியப் பங்குள்ளது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். (உரையா, ஆய்வுக்கட்டுரையா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பிரதி கிடைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.) தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார்.

மேலே நான் சொன்னது மிகச் சில துளிகளே. இவரது வாழ்க்கையில் தெரிந்துகொள்ள சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளன.

தனிவாழ்வில் நிறைய சொத்து சேர்த்துள்ளார். பொதுவாழ்வில் நிறைய சாதித்துள்ளார். ஒருவிதத்தில் பார்த்தால் உலகளாவிய பெருமை பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ஆனால் இவர்மீது வெளிச்சமே விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

- பத்ரி சேஷாத்ரி

(இன்று அவது 122-வது பிறந்த தினம்) 

Monday, 22 September 2014

போர்த்தொழில் பழகு!

இறையன்பு அவர்களின் போர்த்தொழில் பழகு நூலை வாசித்து முடித்தேன். ஒரு நாவலைப்போல விறுவிறுப்பாக இந்த நூலை வாசித்து விடலாம். போர் என்பது அவசியமில்லை என்றாலும் போர்க்குணம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதற்கு வரலாற்றில் இருந்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுகிறார் ஆசிரியர். அவற்றில் என்னைக்கவர்ந்த சில பகுதிகள் மட்டுமே இங்கே. 

போர்கள் வேண்டாம் என்று வாய்வலிக்க கத்தினாலும் போரால் உலகம் முழுக்க எத்தனையோ நன்மைகள் எழுந்திருக்கின்றன. அணுகுண்டு தாக்குதலில் இருந்து அணு யுத்தத்தில் இருந்து காக்க எழுந்தது தான் இணையமாக ஆனது. ரோமானியர்கள் எங்கெங்கே எல்லாம் போர் செய்யப்போனார்களோ அங்கெல்லாம் சாலைகளை அமைத்தார்கள். உலகப்போரில் தகவல்களை பரிமாறிக்கொள்ள செய்யப்பட்ட முதலீடு தான் ரேடாரை உருவாக்கியது. ராணுவ வீரர்களை கணக்கெடுக்க ஆரம்பித்தது தான் மக்கள் தொகை கணக்கெடுப்பாக விரிந்தது. பீரங்கியின் புதிய கோட்பாடு நூல் தந்த ஊக்கம் தான் நிலவை நோக்கிய விண்வெளி பயணத்தை சாத்தியப்படுத்தியது. ஆயுதம் செய்ய ஊக்குவிக்கப்பட்ட அமோனியா உற்பத்தி உரத்தயாரிப்பு,குளிர்சாதன பெட்டி,சலவை சோப்பு என எங்கெங்கோ போனது. விமானம் அதிவேக வளர்ச்சி அடைந்ததும் போருக்கான உந்துதலில் தான். போர்க்கள மரணங்கள் தான் ரத்தபிரிவை கண்டுபிடிப்பதை சாத்தியமாக்கியது. கணினி என்கிற கனவின் தொடக்கம் நெப்போலியனின் படையெடுப்பால் இங்கிலாந்துஅரசு கொடுத்த நிதியால் துவங்கியது.

கிஷ் நாட்டின் மீது படையெடுத்த தைமூர் இருநூறு பேர் கொண்ட சிருபடையை மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு போய் புழுதியை கிளப்பிவிட்டு நிறைய பேர் இருக்கிற மாதிரியான தோற்றத்தை உண்டு செய்து போரில் வென்றிருக்கிறான். மூன்றாம் நெப்போலியனை படுக்கையிலேயே மூழ்க செய்து தனி இத்தாலி என்கிற கனவை சாதித்தார் விக்டர் இம்மானுவேல். பானிபட் யுத்தத்தில் கண்ணை துளைத்த அம்பையும்,கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டு போரிட்டான் ஹேமு. ரோமானியர்களுக்கு பெருஞ்சவாலாக இருந்த ஹானிபால் ஒரு கண்ணை கிருமி தாக்கியது அடுத்த கண்ணுக்கும் அது பரவலாம் என்று அறிந்ததும் கண்ணை நொண்டி கூலாக எடுத்துவைத்து விட்டான் !

ஒரு லட்சம் படைவீரர்கள் கொண்டிருந்த லோடியின் படையை எட்டாயிரம் வீரர்களை கொண்டு பாபர் வென்றார். காரணம்,பீரங்கிப்படை ! ஆழ்குழி வெட்டி போர் செய்யும் முறையை ஷெர்ஷா கொண்டு வந்தார். பாலைவனங்களில் அது எடுபடாத பொழுது அவரின் பேரன் கோணிப்பைகளில் மணல் நிரப்பி போரிட வைத்து ஜெயித்தான். தற்காப்பு போரில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டு இருந்த சீனா மூவாயிரம் போர்க்கலை நூல்களை உலகுக்கு தந்திருக்கிறது. எங்கேயும் எதிராளியை முதலில் தாக்கு என்று சொல்லவில்லை இந்த நூல்கள். அந்த போக்கை மாற்றி முதலில் அடி,முரட்டு அடி என்கிற ஆக்ரோஷ மனோபாவத்தை விதைத்தவர் மாவோ !

முப்பத்தி மூன்று கப்பல்களைக்கொண்டு இருந்த பிரெஞ்சு படையை
இருபத்தி ஏழு கப்பல்களை கொண்டு பதினைந்து பன்னிரண்டு என்று பிரித்து முன்பக்கம்,பின்பக்கம் என்று தாக்கி முழு நிர்மூலம் செய்தார் நெல்சன் ! முகமது அலி தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுதில் அடித்து ஆடி வென்றார்,]

எதிரிகளை திசை திருப்பி வெல்வது என்பது மிக முக்கியமான போர் முறையாக் இருந்து வருகிறது. போரசை நேரடியாக தாக்குவது போல காட்டிக்கொண்டே பின்புறம் இருந்து தாக்கியது அலெக்சாண்டரின் படை, வடக்கு பெல்ஜியம்,ஹாலந்து ஆகியவற்றை தாக்கப்போவதாக காட்டிகொண்ட ஹிட்லரின் படை திரும்பி பிரான்சை பாக்கெட்டுக்குள் போட்டுகொண்டது. சூ என்கிற நாட்டின் அரசன் பெரும்படையோடு எதிரிகள் வந்த பொழுது தெருவை சுத்தமாக பெருக்கி,எல்லா கதவுகளையும் திறந்து வைக்க சொல்லி எதிரிகளை குழப்பி படையெடுப்பை சந்திக்காமலே வென்றிருக்கிறான். ரஷ்யா நெப்போலியன்,ஹிட்லர் ஆகியோரை சந்திக்க இருக்கும் எல்லா உணவு,விவசாயம்,போக்குவரத்து காலிபண்ணும் கருகிய மண் கொள்கையால் மண்ணைக்கவ்வ வைத்திருக்கிறது.

போரை ஆரம்பிப்பதை விட முடிப்பது தான் சவாலான விஷயம். ஆப்கானில் ஒட்டுமொத்தமாக ஒழிந்து போன ரஷ்யா,வியட்நாமில் உலகப்போரை விட அதிக குண்டுகள் போட்டும் ஜெயிக்க முடியாமல் திரும்பிய அமெரிக்கா என்று எக்கச்சக்க ஆதாரங்கள். களைப்படைய செய்து வெற்றியடைவது என்கிற போர்முறையை காந்தி மிக அற்புதமாக பயன்படுத்தினார் என்பதே உணமை. பிரசாரத்தின் மூலம் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்கள் சாக்ரடீஸ்,கோயபல்ஸ். தட்சசீலத்தை அடக்க கிளம்பிய அசோகரும் வதந்திகளை கிளப்பி சாதித்தார். போர் என்பது களங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று நீங்கள் எண்ணினால் அது ரொம்ப தப்பு ! ஒரு நாட்டின் தானியங்களை மற்றொரு நாட்டின் மணிகளால் மாற்றுவது,அயல்மொழியை மாற்றிப்பேச வைப்பது,தங்களின் அடிப்படை பண்பாட்டை மறப்பது என்று நீண்டு எல்லாமும் மாறிப்போய் பிச்சை ஏந்தும் தேசமாக மாறும் பண்பே இறுதியில் முளைக்கிறது ! போர்க்குணம் இல்லாத தேசம் புதைந்து போகும் ; மனிதர்களும் தான். 


நன்றி: பூ.கோ. சரவணன்

புத்தகம் உங்கள் இல்லம் தேடி வர: http://www.udumalai.com/?prd=pour+thozhil+pazhagu&page=products&id=12274

கானகன்: பேரன்பின் தரிசனம் - எழுத்தாளர் சாருநிவேதிதாவின் மதிப்புரை

லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள கானகன் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சமீப காலத்தில் இப்படி ஒரு அற்புதமான நாவலைப் படித்ததில்லை. சர்வதேசத் தரம் வாய்ந்த நாவல். ஓநாய் குலச்சின்னம் எங்கே தோற்றதோ அந்த இடத்தில் வென்றிருக்கிறது கானகன். சிலுவை என்ற கொலைக்கருவி பேரன்பின் குறியீடாக மாறியதைப் போன்ற ஒரு மேஜிக் அது. இந்த நாவலுக்குச் சம்பந்தமே இல்லாத, கொஞ்சமும் இலக்கிய சுரணை உணர்வு அற்ற ஒரு முன்னுரை உள்ளது. இவ்வளவு பிரமாதமான ஒரு நாவலுக்கு அதை திருஷ்டிக் கழிப்பாக வைத்துக் கொள்ளலாம்.

கானகன் எனக்கு ஒரு சாதாரண நாவலாகத் தெரியவில்லை. கஸான்ஸாகிஸ் போன்ற மேதைகள் காண்பித்த பேரன்பின் தரிசனத்தை இந்த நாவலில் கண்டேன். லக்‌ஷ்மி சரவணகுமாருக்கு என் மகன் வயது இருக்கலாம். ஆனால் இந்த நாவலைப் படிக்கும் போது என்னுடைய குரு ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. மகத்தான அனுபவம்.

இங்கே இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மணல் வீடு பத்திரிகையில் லக்‌ஷ்மி சரவணகுமார் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். இருள், மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டு கௌபீனத் துணி என்பது அந்தக் கதையின் பெயர். படித்து விட்டு சாருஆன்லைனில் வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு லக்‌ஷ்மி சரவணகுமாரின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று யோசிப்பேன். லக்‌ஷ்மி சரவணகுமாரை முதல் முதலில் பாராட்டி எழுதியவன் என்ற முறையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், அடிப்படையில் நான் ஒரு தேர்ந்த வாசகன்.

மரம் அறுக்கிற சத்தம் அவன் நடந்த வழியெங்கும் கேட்டபடியே இருக்க, முன்பு ஒன்றிரண்டு பேர் வந்து மரம் வெட்டி எடுத்துப் போனது போய் இப்போது கூட்டமாக வந்து விட்டார்களே என நினைத்தான். இந்த மரங்களை எல்லாம் வெட்டி எடுத்து மலைக்கு அந்தப் பக்கம் மலையாளத்தானிடம் விற்றுத் தீர்ப்பதில் மரம் வெட்டுபவர்கள் வெறித்தனமாய் இருந்தனர். பாதையை விட்டு மெதுவாக மரம் வெட்டும் சத்தம் கேட்ட திசை நோக்கி நடந்தான். சத்தம் நெருங்கி வர, அச்சத்தில் மரங்களில் கூடு கட்டியிருந்த பறவைகள் பெரும் அலறல் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. அந்த மரங்களைப் பிரிய முடியாத பெரும் துயரோடு அவை மரங்களையே சுற்றிச் சுற்றி வருவதும் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு பறப்பதுமாய் இருந்தன. முற்றிய ஒரு தோதகத்தி மரத்தை நான்கு பேர் அறுத்துக் கொண்டிருந்தனர். அந்த மரத்திற்கு வயது இருநூறு வருசமாவது இருக்கும். பெரும் பரப்பைக் குளிர்வித்து உயர்ந்திருந்த அதன் அடியில் ஒவ்வொரு பக்கத்தும் இரண்டு பேராய் ஒரே சீரான வேகத்தில் அறுத்துக் கொண்டிருந்தனர். இந்தக் காட்டின் மரம் ஒவ்வொன்றுக்குமான தாய் நிலாவில் இருக்கிறாள். இந்த மரங்கள் அவளின் பிள்ளைகள். இதைக் கொல்கிறவர்களை எல்லாம் அமாவாசை நாளில் நிலாவில் இருக்கும் பாம்பு வெறி கொண்டு விழுங்கி விடும் என பாட்டா சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்கள் எத்தனையோ பேர் இந்த மரங்களை அறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் அந்தப் பாம்பு இவர்களை விழுங்குவதில்லை என்கிற தவிப்பு இவனுக்கு எப்போதும் இருக்கும். இந்தக் காட்டின் மரங்கள் ஒவ்வொன்றோடும் எத்தனையோ பளியன்களின் ஆன்மாவும் சேர்ந்தேதான் இருக்கிறது. தன் குழந்தையைப் பிரசவிக்கும் பளிச்சி அவளாகவேதான் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு யாரும் அவளையும் அவள் பிள்ளையையும் தொட மாட்டார்கள். தன் குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கிறவள் அந்தக் குழந்தையை முதலில் காட்டுவது இந்தக் காட்டிற்குத்தான். பளியன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே காட்டின் வாசனை அறிந்தவன் என்பதால் குழந்தை தான் இருக்கும் இடத்தை எளிதில் கண்டு கொள்ளும். அப்படி எத்தனையோ பேர் பார்த்து வளர்ந்து செத்துப் போன பின் அவர்களின் ஆன்மா எங்கும் போவதில்லை. பளிச்சி இந்தக் காட்டோடு என்றென்றைக்குமாக அவர்கள் இருக்கட்டும் என மரங்களில் வாழ அனுமதித்திருக்கிறாள். அந்த ஆத்மாக்களைத்தான் இவர்கள் வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலே வருவது லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் என்ற நாவலின் 73-ஆம் பக்கம். இந்தப் பக்கத்தை நீங்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக நானே இங்கே அதைத் தட்டச்சு செய்தேன். வாசிக்க வாசிக்க இந்த நாவலை என் பைபிள் என்றே சொல்லத் தோன்றுகிறது. இதேபோல் வேம்புவின் மீது பளிச்சியம்மன் வந்து அவள் கதறும் இடமும் நம் நாடி நரம்புகளையெல்லாம் உலுக்கக் கூடியது. “அவள் கண்ணீரும் ஒப்பாரியுமாய் அந்தக் காட்டின் ஆதிக் கதை நோக்கி தன்னை நகர்த்திக் கொள்ள நினைத்தவளாகவும் மனிதர்களின் மீதான அச்சத்தில் பைத்தியங்கொண்டவளாகவும் அரற்றினாள். ‘மனுசனுக்கு ஒரு பாடுன்னா தெய்வத்துக்கிட்ட போறோம்… தெய்வத்துக்கு ஒரு பாடுன்னா அது எங்க போவும்…’ கிழவிகள் வாய்க்குள்ளாகவே புழுங்கிக் கண்ணீர் விட்டனர்.”

நாவலை இணையத்தில் வாங்க: http://udumalai.com/?prd=kanagan&page=products&id=14933